தேர்தலும் தமிழ் ஊடகங்களும் | தினகரன் வாரமஞ்சரி

தேர்தலும் தமிழ் ஊடகங்களும்

“நீங்கள் எங்களுக்குத் தொடர்ச்சியாக விளம்பரங்களைத் தாருங்கள். எங்களுடைய பத்திரிகையில் உங்களுடைய செய்திகளையும் உங்களுக்கு ஆதரவான செய்திகளையும் கூடுதலாக வரச்செய்கிறோம்” என்று வேட்பாளர்களைக் கேட்கிறார்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ்த் தினப் பத்திரிகையைச் சேர்ந்தோர். 

இது ஒரு பத்திரிகை நிறுவனத்தினுடைய நிலைப்பாடோ பேரம்பேசும் வியாபார அணுகுமுறையோ மட்டுமல்ல. அநேகமாக எல்லாப் பத்திரிகைகளும் இந்தத் தேர்தல் காலத்தில் “செம” உழைப்புக்கே முயற்சிக்கின்றன. பத்திரிகைகள் மட்டுமல்ல, தொலைக்காட்சி, தனியார் வானொலிகள் உள்ளிட்ட ஏனைய ஊடகங்களும்தான். இது ஊடகப் பேரம். 

இவை இப்படிக் கேட்பது ஒன்றும் புதியதல்ல. ஜனாதிபதித் தேர்தல் தவிர்த்து ஒவ்வொரு தேர்தலின்போதும் இவை இப்படித்தான். தேர்தல் வியாபாரக் கடையை விரிக்கின்றன. அதிலும் பாராளுமன்றத் தேர்தலில் கதையே வேறு. பாராளுமன்றத் தேர்தலில் போட்டி சூடாக இருப்பதால் வியாபாரமும் அமோக நடக்கும். 

எனவே, தேர்தல் அறிவிப்பு வந்தால் கூடுதலாகச் சந்தோசப்படும் தரப்பில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஒன்று. ஒரு சில ஊடகவியலாளர்களே இதில் விலக்கு. அவர்கள் பெருந்திரள் போக்கில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்கள். ஏனையோர் இந்தக் கடையை, இந்தப் பேரத்தை வெற்றிகரமாக நடத்த முற்படுகிறார்கள். ஆக, இவர்களுக்கு தங்களின் லாபத்தில் குறியே தவிர, மக்களின் நலனில் இல்லை. அரசியற் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கிற தன்னலனே இங்கும் செயற்படுகிறது. 

இதைச் சரியாகச் சொன்னால், “ அரசியல்வாதிகளாகிய நீங்களும் உழைக்கிறீர்கள். நாங்களும் உழைக்கிறோம், அவ்வளவுதான்” என்ற நிலைப்பாடு. 

ஆனால், இதையெல்லாம் வலு சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு இந்த ஊடகங்களில் பலவும் தாமே தமிழ்ச்சமூகத்தின் ஞானக் கண், உயிர்மூச்சு, வழிகாட்டி – திசைகாட்டி, தமிழ்த்தேசியத்தின் பாதுகாப்பரண் என்ற விதமாகத் தோற்றம் காட்ட முற்படுகின்றன. இதற்குள் காண்பிக்கப்படும் ஜனநாயக வித்தைகள் வேறு. 

தேர்தலின் ஆரம்ப நாட்களில் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் எல்லாத் தரப்பினருக்கும் சந்தர்ப்பத்தை – வாய்ப்பை - அளிப்பதாக ஒரு தோற்றம் காண்பிக்கப்படும். இது சில நாட்களுக்கு அல்லது சில வாரங்களுக்கு மட்டும்தான். அதாவது எல்லாத் தரப்பு வேட்பாளர்களையும் உரித்தெடுக்கும் வரை மட்டுமே. 

பிறகு மெல்ல மெல்ல இந்தக் கதை நலிந்து, குறைந்து இல்லாமற்போய் விடும். பிறகு நடப்பது வேறு கதை. 

தேர்தல் நாட்கள் நெருங்க நெருங்க – இறுதி வாரத்தை அண்மிக்கும்போது அரச எதிர்ப்பும் ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடிய தரப்பைப் பற்றிய எச்சரிக்கையூட்டல்களும் மேலெழும். அரச எதிர்ப்புக்குத் தலைமை தாங்கக் கூடியவர்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விதமான ஆலோசனைகள் முன்வைக்கப்படும். இது ஏறக்குறைய தாம் தீர்மானித்த தரப்பை நோக்கிச் சனங்களைத் திரட்டுவதற்கான ஒரு உத்தியே. 

அப்பொழுது அதுவரையும் தோற்றம் காட்டப்பட்ட ஜனநாயகத் திரை கிழிந்து தொங்கும். ஆனாலும் அதைத் தெரியாதவாறு எதிர்ப்புவாதம் கட்டமைக்கப்படும். மற்றவர்களுக்கு அல்லது ஏனைய தரப்புகளுக்கு வாக்களிப்பதெல்லாம் தவறு, தேசத்துரோகம், இனநலனுக்கு எதிரானது என்ற கருத்துப் பலப்படுத்தப்படும். அதாவது மக்களுடைய சுய சிந்தனைக்கான இடம் மறுதலிக்கப்பட்டு, சனங்கள் மூளைச் சலவைக்குட்படுத்தப்படுவார்கள். 

இதைச் சற்று அழுத்தமாக அல்லது நேரடியாகவே சொல்வதென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கும் மற்றத் தரப்பினரின் கருத்துகளுக்கு இடமளிக்கின்ற இந்த ஊடகங்கள் நாட்செல்லச் செல்ல கூட்டமைப்புக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும். 

வழமையாக இதுதான் நடப்பதுண்டு. இந்தத் தடவையும் இதில் பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. 

யார் சமஸ்டி நோக்கிச் சிந்திக்கிறார்கள்? யார் அதைப்பற்றிப் பகிரங்கத் தளத்தில் பேசுகிறார்கள்? யார் ஒற்றையாட்சிக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுக்கிறார்கள்? மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைக் கோருவது யார்? யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி கோருவது யார்? சிங்கள இனவாத ஒற்றையாட்சி முறைக்கு ஓரளவுக்கேனும் எதிர்ப்புக் காட்டுவது யார்? என்னதானிருந்தாலும் வடக்குக் கிழக்கு முழுவதிலுமுள்ள மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய தரப்பு கூட்டமைப்புத்தானே என்று சொல்லப்படும். 

எவ்வளவுதான் தவறுகளிருந்தாலும் கூட்டமைப்பைப் பலப்படுத்துவது, அதை வெற்றியடையச் செய்வதே ஒரே வழி. அதுவே சிங்களத் தரப்பை எதிர்கொள்வதற்கான ஒரே தெரிவு. சிங்களத் தலைவர்களை எதிர்கொள்ளக் கூடிய ஒரே தலைவர் சம்மந்தனே என்ற விதமாக ஊடக நிலைப்பாடுகள் அமையும்.   தேர்தலுக்கு முதல்நாளும் தேர்தல் அன்றும் இதனை நீங்கள் நன்றாக அவதானிக்கலாம். 

அதுவரையிலும் கூட்டமைப்பின் அரசியல் தவறுகள், பலவீனங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசித் தீர்க்கும் இந்த ஊடகங்கள் எப்படி இறுதிச் சந்தர்ப்பத்தில் இப்படிக் குத்துக் கறணம் அடிக்கும் என்று நீங்கள் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் அது தேசியக் குற்றம். இனத்துரோகமாகும். 

இதேவேளை கூட்டமைப்பைத் தாம் ஆதரித்தாலும் அதனுடைய அரசியல் தவறுகளை விமர்சிப்போம். எச்சரிப்போம். கண்டிப்போம் என்ற தோற்றப்பாட்டை நம் மனதில் சாதுரியமாக இவை உருவாக்கி விடுகின்றன. ஜனநாயக நெறிமுறைகளை அனுசரித்தே தாம் இயங்குவதாகவும் காண்பித்து விடுகின்றன. இதற்குள் ஏனைய தரப்பினரிடம் கறக்கக் கூடியதை எல்லாம் கறந்தெடுத்தும் விடுகின்றன. 

தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளையில் இவை வெளியிடும் செய்திகளையும் வெளிப்படுத்தப்படும் ஆசிரியர் கருத்துகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். குறிப்பாகத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, தமிழ் மக்கள் தங்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமைக்குரல் உலகத்துக்கு மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைச் சிங்கள தேசமும் சர்வதேச சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படும். 

அடுத்த வாரத்தில் இது இன்னொரு விதமாக வடிவமெடுக்கும். 

தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்திருக்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டு மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மக்களின் ஆணையைப் புரிந்து கொண்டு வெற்றியடைந்த தரப்பினர் (தமிழ்த்தரப்பு) நடக்க வேண்டும் என்ற அறிவிப்புகள் வெளிவரும். 

இந்தச் சீனெல்லாம் ஒரு வருசத்துக்குத் தாக்குப் பிடிக்குமோ தெரியாது. அடுத்த ஆண்டில் இந்தத தொனி மாறிவிடும். அப்போது, “மக்களின் ஆணையை மறக்கிறார்கள். அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். மக்களின் நலனை விடச் சொந்த நலன் முக்கியமாகி விட்டதா? என்ற மாதிரியான கருத்துகள் மேலெழும்.  

இரண்டாவது ஆண்டில் “வழக்கம்போல மக்களை ஏமாற்ற முற்படுகிறார்கள். மக்களின் அபிலாஷைகளை மறந்து செயற்படுகிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றமாகும்” என்ற மாதிரிக் கண்டனங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும். 

மூன்றாவது ஆண்டில் “இவர்களை நாம் நம்பவே முடியாது. ஏமாற்றிப் பிழைப்பவர்கள். இனியும் மன்னிக்க முடியாது” என்று திட்டுவார்கள். அடுத்த தடவை மக்கள் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படும். 

வெற்றியடைந்த அரசியல் தரப்பிலிருந்து இதற்கெல்லாம் பதிலே கிடைக்காது. இவர்களும் அதைப் பற்றிப் பெரிய அளவில் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் திட்டுதல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். 

நான்காவது ஆண்டில் “தேர்தல் வரட்டும். அப்போது பார்க்கலாம். அல்லது புதியதொரு அணியை நாம் உருவாக்குவோம்” என்ற மாதிரி ஏதோ புதிய முயற்சிகள் அமர்க்களமாக நடப்பதைப்போலொரு தோற்றம் காண்பிக்கப்படும். 

அதாவது சனங்களுடைய மனதுக்கு இதமாக ஒவ்வொரு கால கட்டத்திலும் கிளுகிளுப் பூட்டப்படும். ஆனால், அடிப்படையில் மாற்றங்கள் நிகழ விடமாட்டார்கள். 

என்ன விதப்பட்டும் தங்களின் பழைய பெருங்காய டப்பாவை மேசையில் தூக்கி வைத்து விடுவார்கள். கேட்டால் ஒப்பீட்டளவில் கூட்டமைப்பானது மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் அமைப்பு என்று சப்புக் கொட்டுவார்கள். இதில் படித்தவர்கள், ஏராளமாக எழுதிக்கொண்டிருப்போர் எல்லாம் அடக்கம். இவர்களில் எவரும் எதையும் வரலாற்றோடும் விஞ்ஞான பூர்வமாகவும் அணுகுவதில்லை. இவர்களுடைய மனதில் நிறைந்து கிடப்பதெல்லாம் தமிழ்க்குறுவாதமே. 

உண்மையில் சிங்கள மேலாதிக்கத்தை இவர்கள் எதிர்ப்பதாக இருந்தால், தவறான தலைமை சிங்களத்தரப்பிலிருந்தால் அதை எதிர்கொள்ளத் தக்க சிங்களத் தலைமையையே உருவாக்க வேண்டும். அல்லது அப்படியான சக்திகளை இனங்கண்டு அவற்றை வளர்க்க வேண்டும். 

இதை ஒரு போதுமே தமிழ் ஊடகப் பரப்போ தமிழ்ப் புத்திஜீவிகளாக தம்மை அடையாளம் காட்ட முற்படுவோரோ செய்வதில்லை. 

எனவே இந்தத் தடவையும் தேர்தல் திருவிழா வழமையைப் போல வலு விமரிசையாக நடக்கும். வழமையைப் போலவே ஊடக ஏய்ப்புகள் நடக்கும். வழமையைப்போலவே தமிழ்ப் பெருமிதங்கள் நிகழும். வழமையைப்போலவே எல்லாம் அந்தப் பழைய சுழல் வட்டத்தில் போய் முடியும்.   

கருணாகரன்

Comments