கசப்பும்… இனிப்பும்… | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும்… இனிப்பும்…

இருபத்து மூவாயிரம் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கத்துடன் பொருள் தரும் “நர்மதாவின் தமிழ் அகராதி’ (2002) எனக்குப் பெரிய தோன்றாத் துணை.  

அதன் 782ஆம் பக்கத்தில் “வசந்தன்: மன்மதன்” - “வசந்தம்: மகிழ்ச்சியும் உல்லாசமும் நிலவும் காலம் (The joyful period of one’s Life)- -_-“வசந்த காலம்: செடி, கொடி, மரம், போன்றவை பூக்கத் தொடங்கும் காலம்” (Spring season) எனப் பதிவு.  

நம்மகத்தில் இயங்கும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு, மேலே இரண்டாவதாகக் குறிப்பிட்ட பெயருடன் பிறந்து, பதினோராம் அகவையில் மகிழ்ச்சியும் உல்லாசமும் வழங்கும் முனைப்பில்!  

வாழ்த்திவிடுகிறேன் முதலில் ஆனாலும் வாலிபத்தை நோக்கிபீடு நடைபோடும் ஆளுமைக்காரர்கள் என் பேனா முனை வழங்கும் ஒரு ‘கசப்பை’ உட்கொள்ள வேண்டி நிற்கின்றேன்.  

* ஹலோ வசந்தம் * மியூசிக் ஸ்டூடியோ * சண்டே கபே * ட்ரெண்ட் விடுங்க * நம்ம ஹிட்ஸ்  *மியூசிக் எக்ஸ்பிரஸ் * ஒஸ்கார் * றீல் பெட்டி  

இவற்றை வாசித்து முடித்ததும் சட்டென்று நம் எண்ண அலைகளில் மோதுவது, ‘அட! பாதிக்குப் பாதி ஆங்கிலம், வசந்தக் காற்றில் வீசுகிறதே!  

வீசுவது பெரிய ‘தமிங்கில’ வீச்சே!  

அதே நேரத்தில் * தலைவாசல் * நினைத்தாலே இனிக்கும் * தேன் சிந்தும் ராகங்கள் * சந்திரோதயம் * தொடுவானம் *சுற்றி வரும் பூமி * வாங்க பழகலாம் * எங்கேயும் எப்பொழுதும் - --முழுக்க முழுக்க தமிழ் மணமும் கமழுகிறது வசந்த காற்றிலே!  

ஒரு காற்றின் திசை மேற்கிலும், மற்றொன்று கிழக்கு (அல்லது வடக்கு) நோக்கியும் வீசுகிறது. வீசலாமா?  

ஒரு பதில் தயார் நிலையில் இருக்கும். ‘இளவட்டங்களைக் கவர அப்படி! கிழடு கட்டைகளைக் கவர இப்படி!”  

ஹ ஹா ஹா! ‘வசந்தம்’ அலைவரிசைப் பிரதானி தினேஸ் சுந்தர் வரைந்துள்ள கட்டுரையொன்றில், ‘எதிர்வரும் காலங்களில் ‘வசந்தம்’ நிகழ்ச்சிகளில் ஒரு போக்கைக் கடைப்பிடித்து மாற்றத்தை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, ஏனைய தொ.கா அலைவரிசைகளின் வழியில் பிரதி செய்து ஒளிபரப்பாமல் எங்கள் மண்ணின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில் நிகழ்ச்சிகளைப் படைப்பதே வசந்தத்தின் சிறப்பாக இருந்திருக்கிறது, இருக்கு” என்கிறார்.  

நல்லது ‘ஏனைய தொ.கா. அலைவரிசை’ என இவர் குறிப்பிடுவது முக்கியமாக ‘தமிழ் நாட்டுப் பெட்டிகளையே’ என யூகிக்கிறேன். அவர்களது “தமிங்கிலம்” நமக்கு வேண்டாமையா வேண்டாம்!  

தெரியுமா சங்கதி. தலையில் ஏற்படும் பொடுகு இருக்கிறதே பொடுகு, ‘டாண்ட்ரப்’ (Dandruff) என்றே தமிழகத் தொ.கா. விளம்பரங்களில் உபயோகிக்கிறார்கள்!  

கிழக்கின் – திருமலையில் 1921 ஜுலை 02ல் உலகின் வெளிச்சம் கண்ட அந்தப் பாலகன் இன்று இருப்பாரேயானால் அகவை தொன்னூற்றொன்பது! (99)  

எவ்வாறாயினும் மறைந்தும் மறையாதுள்ள அவரை ‘வாழ்க வாழ்க அய்யா அவர்களே’ என வாழ்த்தி கலை – இலக்கிய – ஊடக வாழ்க்கையைப் ‘புரட்டி இனிப்புச் சுவைப்போம்’.  

இளம் பருவத்திலேயே தேனக மட்டுநகர் வாசியாகிய பொழுது அவர் ஏற்றியது “ஐக்கிய தீபம்” (1946)! தொடர்ந்து “உதயம்” (1947). அப்பொழுது இருபத்தாறு அகவை. அடுத்து பிறந்த நாளில் ஏரிக்கரைப் படகுச் சவாரி! (‘தினகரன்’ துணை ஆசிரியர் – 1948)  

ஆக, அரை நூற்றாண்டு (1997) வரை அற்புதமான இதழியல் ஊடகப் பணி.  

'சுதந்திரன்'- (1950)  

'தமிழின்பம்' -(1962)  

'வீரகேசரி-' (1964)'  

தினபதி,- சிந்தாமணி' – (1966)  

'மாணிக்கம்' – (1976 )  

'சூடாமணி' – (1997)  

என இலங்கை தமிழ்  இதழ்களின் ஜாம்பவான்’ ஒருவர் பரிணமித்தார்!  

அவரை 'சிவநாயகம்' என்று பலரும் அழைத்தார்கள். ஆனால் அந்த ‘ஏணி’ யில் கால் பதித்த எங்களைப் போன்றோர் ‘எஸ். டி. எஸ். அய்யா’ என்ற வார்த்தையைத் தவிர வேறொன்றும் அறிய மாட்டார்கள்.  

‘அய்யாவுக்கு அகவை தொன்னூற்றொன்பது’ - எனக் கடந்த இரண்டாம் திகதி, உடல் நலக் குறைவின் மத்தியில் உரத்துக் குதூகலித்தார் அவரது பிரதம சிஷ்யர்களில் ஒருவரான சிவராஜ ஜோதி. ‘இனிப்பாகச் சொல்லுவீங்களா” என்றும் கேட்டார். சொல்வது மட்டுமென்ன, இதோ இனிப்பாக வழங்கிக் கொண்டுமிருக்கின்றேன்.  

அந்த ‘ஏணி’யைப் பலரும் மறக்கலாம். ஆனால் நான்? “தினபதி” முதலாவது இதழைச் சுடச்சுட வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  

முன்பக்கத் தலைப்புச் செய்தியாக ‘விசேட நிருபர் எம்.எம். மக்கீன்’ என்பவரின் தகவல் ஒன்று அறிய வைக்கப்படுகிறது. மறக்கத்தான் முடியுமா?  

என் ‘தான் கலந்த’ பதிவை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு விசாலமாக நோட்டமிட்டால் இலக்கியத் தாகம் மேலிட்டவர்களாகத் தவியாய்த் தவித்த கிழக்கிலங்கை மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய கவிஞர் அப்துல் காதிர் லெப்பை. பித்தன் கே.எம்.ஷா, புரட்சிக் கமால், அ.ஸ அப்துஸ்ஸமது, ஈழ மேகம் எம்.ஐ.எல். பக்கீர் தம்பி, யூ.எல். தாவூது, யுவன் எம்.ஏ.கபூர், அண்ணல், மருதூர்க் கொத்தன் ஆகியோரை கதை, கவிதை, கட்டுரைகளில் பிரபல்யமடைய வைத்து பிற்காலத்தில் எழுத்துலக ஜாம்பவான்களாக்கினார். இதில் பதுளையைச் சேர்ந்த சாரணா கையூமும் சேர்வார். உடல் நலிந்தும் இன்னும் கவிஞராகக் கொடிகட்டிப் பறக்கிறார்.  

“கிழக்கிலங்கையின் இலக்கிய முயற்சிகளை ஊக்குவித்து அத்துறையில் மட்டக்களப்பு பின் தங்கிவிடாது பார்த்துக் கொண்ட பெருமை இவரையே சாரும்” எனப் பிரபல யாழ். திறனாய்வாளர் இரசிகமணி கனக செந்திநாதன் தன் ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலின் (1964) 194ஆம் பக்கத்தில் பதிந்துள்ளது கல்லின் மேல் எழுத்து!  

அது மட்டுமன்றி, அய்யா அவர்கள், தன் இலக்கிய ஊடக வாழ்க்கையில் ஒரு முக்கிய சங்கல்பம் மேற்கொண்டவராக, ‘மரபுக்விதை’ என்ற பண்டைய கவிதை இலக்கியத்துறை மாண்டுவிடக்கூடாதென்பதில் மிகுந்த கரிசனை காட்டி ’50 களில் ‘சுதந்திரன்’ காலத்திலேயே ஒரு பரமஹம்சதாசனை, ஒரு ‘யுவன்’ எம்.ஏ. கபூரை, நீலாவணன், முருகையன், மகாகவி போன்றோரைப் பரிணமிக்கச் செய்தார்.  

பின், ‘வீரகேசரி’யில் சிலபொழுதுகள் சேவையாற்றி விட்டு பிரபல புத்தகப் பதிப்பாளர்களான எம்.டீ. குணசேன நிறுவனம் ஆரம்பித்த ‘தினபதி’ ‘தினஏடு’ ‘சிந்தாமணி’ வார இதழ் இரண்டினையும் தனதிரு கண்ணின் மணிகளாகக் கண்டு பிரதம நிர்வாக ஆசிரியராக மட்டுமின்றி, அப்பெரும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருள் ஒருவராகவும் மிளிர்ந்த சமயங்களிலும் மரபுக் கவிதை மறுமலர்ச்சியை மறந்தாரில்லை!  

அன்றைய ‘தினபதி’யில் நாள்தோறும் வந்த ‘கவிதா மண்டலம்’ மரபுக்கவிஞர்களுக்கு மகுடம் சூட்டியது. அவர்களுள் தலையாய கவிமணியாகச் சுடர்விட்டவர் இன்றைய ‘நம்ம’ காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன்! அவருடன் சட்டென்று என் நினைவலைகளில் எம். எச். எம். அஷ்ரப் (மர்ஹூம்), பாவேந்தல் பாலமுனை பாறூக், சோலைக்கிளி அதீக், ஆசுகவி அன்புடீன், கலாபூசணம் திக்குவல்லை கமால், மன்சூர் ஏ. காதர் வலம் வருகின்றனர்.  

எவ்வாறாயினும், மன்னார் கலைவாதி கலீல், சம்மாந்துறை அஸீஸ், மருதூர் அலிகான், பதியத்தலாவை ஃபாறூக், மாத்தளை கமால், கவிவாணன் அஸீஸ், கொழும்பு கலைக்கமல் (பாடகர்) மற்றும் பெண்மணிகள் றிஸ்வியா நஃபீல், சித்தி பரீதா, மும்தாஜ் போன்றவர்களையும் தேடலிட்டுப் பட்டியலிடவே வேண்டும். அப்படியும் யாரும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.  

இதேபோல், பல முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.  

நவமணியின் முதல் ஆசிரியரான  எம்.பி.எம். அஸ்ஹர், தினகரன் எஃப் எம். பைறூஸ் (மர்ஹூம்கள்) முதற்கொண்டு, இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் லத்தீப் பாறூக், எம்.எல்.எம். அய்யூப், கலைவாதி கலீல், நௌஷாத் முஹிதீன், பீ.எம். முர்ஷிதீன் ஆகியோருடன் ஓய்வு நிலை முஃபீதா உஸ்மான், நூறுல்ஐன் நஜ்முல் ஹூசைன் எனப் பெரிய ஊடகப்படையணி!  

அப்படியானால் தமிழ் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்களை அவர் உருவாக்கவில்லையா என்ற வினா எழும்பும்! இந்தச் சிறியப் பத்திக்குள் அவர்களைக் குறித்தும் இனிப்புகளை வழங்குவது சாத்தியப்படாதிருப்பது மிகக் கவலையே. ஆனால், தினபதி – சூடாமணியில் அவரது இன்றைய 99 அகவையைப் போல 99 விழுக்காடு அவர்களே!   மட்டுநகர் விகடகவி மாஸ்டர் சிவலிங்கம், கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம் ஆகியோர்கள் கூட ஆசிரியபீடத்திலிருந்தவர்களே!  

எஸ்.டி.எஸ் அய்யாவை இந்த பிறந்த நாளில் நன்றி உணர்வோடு நினைவு கூருவோம்.

Comments