"கருணாவின் மனைவியானாலும் எனக்கென்று தனிச்செல்வாக்குண்டு!" | தினகரன் வாரமஞ்சரி

"கருணாவின் மனைவியானாலும் எனக்கென்று தனிச்செல்வாக்குண்டு!"

அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு முஸ்லிம் தலைவர்களால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் அநீதிகளால்த்தான் ”கல்முனைக்கு கருணா அம்மான் வேண்டுமென்று” தமிழ்த் தரப்பு கோசம் எழுப்புவதாக என்று கருணா அம்மானின் மனைவியும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான வித்தியா கூறினார். தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேர்காணலின் முழு விபரம் வருமாறு...

கேள்வி: கருணா அம்மானின் ஆதரவோடும் செல்வாக்கோடும் தேர்தல் களத்தில் நிற்கிறீர்கள். எமது மக்கள் உங்களைப்பற்றி அறிய ஆவலாக இருக்கிறார்கள். முதலில் உங்களைப்பற்றி சொல்லுங்கள் 

நான் கருணா அம்மானின் மனைவிதான் அது உலகறிந்த உண்மை, அவரது செல்வாக்கோடுதான் தேர்தல் களத்தில் நிற்கிறேன் என்பதிலும் தப்பில்லை. அப்படியாயின் எனக்கு செல்வாக்கில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது? நான் இந்த மண்ணில் பிறந்தவள், எனக்கென்று சுற்றமும், உறவுகளும் இருக்கிறார்கள்  நானும் ஒரு பெண்புலி, ஒரு முன்னாள் போராளி. ஆகையால் எனது திறமையிலும், நான் வளர்த்துள்ள செல்வாக்கிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். முடிவு எதுவாகிலும் அதனை எற்றுக் கொள்வேன். 

கேள்வி: புலிகளோடு எப்போது இணைந்தீர்கள். எப்படி அம்மானைச் சந்தித்தீர்கள்

நான் உயர்தர வகுப்பில் சிவானந்தாவில் படித்துக் கொண்டிருந்த காலம் அக்காலத்தில் சிவானந்தாவில் உயர்தரத்திற்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். 1986 ஆண்டில் எனது விருப்பத்திலேயே புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டேன். எனக்கு பயிற்சி அளித்தவர் கருணாதான். இரண்டாவது பயிற்சி மணலாற்றில் கிடைத்தது. அப்போதெல்லாம் பெண்களை அவர் கணக்கெடுப்பதில்லை. பின்பு அவர் என்னை விரும்பினார், நானும் அவரை மனதார விரும்பினேன். தலைவரிடம் அனுமதி பெற்றோம் திருமணம் நடந்தது. அம்மானின் உயர்விலும், தாழ்விலும் நான் அவரோடுதான் இணைந்திருப்பேன். அது போராட்டமாகவோ அல்லது அரசியலாகவோ அல்லது வேறு ஏதாவதாகவோ இருக்கலாம். 

கேள்வி: இயக்கத்தில் இருந்து பிரிந்தபிறகு எப்படி உங்களை காப்பாற்றிக் கொண்டீர்கள் 

இந்தியாவில் இருந்தோம் அங்கும் பல இடங்கள். எல்லாவற்றையும் சொல்ல முடியாது அப்படி கேட்பது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எங்களை கரும்புலிகள் சுற்றி வந்தார்கள். மனிதர்களுக்கு இரண்டு கண்களைத்தான் இறைவன் படைத்திருக்கிறான். அம்மானுக்கு அப்படியல்ல அவருக்கு பல கண்கள். அவரது கண்கள் நித்திரையாய் இருக்கும்போதும் விழித்திருக்கும். அதனால்தான் நாங்கள் இப்போது உயிரோடிருக்கிறோம் 

கேள்வி: அரசியலுக்குள் நீங்கள் எப்படி உள்வாங்கப்பட்டீர்கள். யார் உங்களை அரசியலுக்குள் இழுத்துவிட்டவர்.   

என்னையும், அம்மானையும் அரசியலுக்கள் இழுத்தவிட்டவர் இந்த நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ. எங்களிடம் அவர் வந்தார் கதைத்தார். தேசியல் பட்டியலில் எனது கணவரை எம்.பியாக்கி அமைச்சர் பதவி தருவதாக கூறினார். 

அம்மான் அதனை ஒருபோதும் விரும்பவில்லை. அம்மான் அவரிடம் இரண்டு தடவைகள் தேசிய பட்டியலில் எம்.பி. பதவி தந்துவிட்டீர்கள் இனிமேல் அதனை நான் பெறுவதும் நீங்கள் தருவதும் நம் இருவருக்கும் அழகல்ல. 

ஆகையால் தான்தேர்தலில் நிற்கப்போவதாக கூறினார். அந்த நேரத்திலே என்னையும் தேர்தலில் நிற்குமாறும் கேட்டுக்கொண்டார். அம்மானின் வெற்றி உறுதியாகிவிட்டது. அவரோடு முன்னாள் போராளிகளும் முன்னாள் அரசியல் தலைவர்களும் கட்சி பேதங்களை மறந்து இணைந்திருக்கிறார்கள் அவர்களின் பலம் பெரியது, சக்திமிக்கது. 

எனது நிலையில் நான் மக்களிடமும் எனது சக முன்னாள் போராளிகளிடமும் சென்று அவர்களை என்னோடு இணைத்துக்கொண்டு செயற்படுகிறேன். கருணா அம்மானின் வழிநடத்தலும் எனக்கு நிறைய கிடைத்து வருகிறது. மக்கள் என்னை தேடிவந்து சந்திக்கிறார்கள். நான் அவர்களை தேடிப்போய்ச்  சந்திக்கிறேன்.இது எனக்கு வெற்றி வாயப்பைத் தரும். 

கேள்வி: ஆளும் அரசில் ஒரு இடத்தை அம்மான் தனக்கென இப்போதே பிடித்துக் கொண்டுவிட்டார் எனக் கூறுகிறார்கள் அப்படியாயின் அதை வைத்துக்கொண்டு என்னசெய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்?  

இந்த நிலையில் எமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எமது சக போராளிகளின் நல்வாழ்வுக்கு வழி சமைக்க வேண்டும். எங்களுக்கு என்னதான் பட்டமும் பதவியும் கிடைத்தாலும், எனது கணவரும் நானும் முன்னாள் போராளிகள். அதனை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம். ஆதலால் போராளிகளின் வறுமையைப் போக்குவதற்கு நாம் எமக்குக் கிடைக்கும் பதவியையும் அந்தஸ்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவோம். 

அவர்களுக்கு காட்டுகின்ற வழி நிலையானதாகவும். உறுதியானதாகவும் நீடித்து நிற்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அது நிறைவேறும். 

இது மட்டுமல்ல சாதாரண வறுமைப்பட்ட மக்களையும் இவர்களோடு இணைத்துக் கொண்டு அவர்களின் நல்வாழ்வுக்கு வழி செய்வோம். ஒட்டுமொத்தமாக கூறினால் தமிழர்களின் மத்தியில் வறுமை இருக்கக் கூடாது. 

கேள்வி: மகிந்த ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ ஆகியோரோடும் அவர்களது குடும்பங்களோடும் உங்களது குடும்பம் ஒரு இறுக்கமான அன்புப் பிணைப்போடு இருப்பதாக கூறப்படுகிறது.  இவர்கள் இருவரும் நாட்டின் தலைவர்கள்தான், இவர்களில் யாரை உங்கள் துடும்பத்திற்கு கூடுதலாகப் பிடிக்கும். 

அம்மானோடும் என்னோடும் இருவருமே ஒரு இறுக்கமான அன்புப் பிணைப்பை வைத்திருக்கிறார்கள். அம்மானின் நியாயமான கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்பதில் அவர்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருப்பதை நான் அறிவேன். 

போராட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் என்பன அவர்களுக்கு பிடிப்பதில்லை. எதையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை அவர்களை வேறுபடுத்தியோ, தரம் பிரித்தோ பார்க்க முடிவதில்லை. அதற்கு எமது மனம் ஒப்புதல் அளிக்காது. 

கேள்வி: அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானுக்கு அரசியல் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. இதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் எப்படி இருக்கிறது. 

அம்பாறை மாவட்டம் மூவின மக்களையும் கொண்ட மாவட்டம். காலம் காலமாக தமிழ்மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்து வந்தாலும் அதில் பயனில்லை. 

உதாரணத்திற்கு முன்னாள் எம்.பி.பியசேன. அவரால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை நிறுத்த முடியவில்லை. 

தமிழ் பிரதிநிதிகள் சரியாக இருந்திருந்தால், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உரிய அந்தஸ்தை எப்போதோ பெற்றிருக்க முடியும். 

இப்போது கருணா அம்மானுக்கு வரப்போகின்ற  அரசியல் அந்தஸ்தோடு கூடிய பெரிய அதிகாரப்பதவி கிடைக்கப் போகிறது. அதைவைத்து கடந்த  காலத்தில் தமிழர்கள் இழந்தவற்றுக்கு நிவாரணம் தேடிவிடலாம் என நம்மவர்கள் நினைக்கிறார்கள். இதில் தவறில்லை. புராணக்கதைகளில் வரும் சம்பவங்கள் போன்று இது இருக்கிறது. அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு  கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். இதனால்தான் கல்முனைக்கு கருணா அம்மான் வேண்டுமென்று தமிழத் தரப்பினர் கோசம் எழுப்புகிறார்கள். என்னை மட்டக்களப்பிலும், கருணாவை அம்பாறையிலும் எமது மக்கள் தெரிவு செய்யவேண்டும்.

நேர்காணல்: எஸ்.எஸ்.தவபாலன்

Comments