இந்தச் சந்தர்ப்பத்தையாவது சரியாகப் பயன்படுத்தட்டும் | தினகரன் வாரமஞ்சரி

இந்தச் சந்தர்ப்பத்தையாவது சரியாகப் பயன்படுத்தட்டும்

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் கடந்துவிட்டன. சிவில் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், தமிழ் மக்களின் மனக்குறைகள் மட்டும் இன்னமும் இழுபறிபட்டுக்கொண்டு, காலங்கடத்தப்படுகின்றன. 

பல தசாப்தங்களாக எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டிருந்த தமிழர்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைமை, கடந்த ஐந்தாண்டு காலத்தில் நல்லிணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டுத் தமிழ் மக்களின் துயர் துடைக்க மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாமல் போய்விட்டன. இதனால், மக்கள் மத்தியில் வெறுப்பையும் எதிர்ப்பையும் தாராளமாகச் சம்பாதித்துக்கொண்டுள்ள தமிழ் தலைவர்கள், பாராளுமன்றம் செல்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த அரசாங்கம் செய்யாத விடயங்களைப் புதிதாக வரும் அரசாங்கத்தைக்கொண்டு செயற்படுத்துவதாக அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். 

அப்போதைய நல்லிணக்க அரசாங்கத்துடன் செயற்பட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கப்போவதாகச் சொன்னவர்கள், இறுதியில் அரசாங்கத்தின் கட்சியில் நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கப் பாடுபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

எவ்வாறாயினும், கடந்த முறையைப்போன்று இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டிருக்கிறது. ஜனாதிபதி சார்ந்துள்ள கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்பதை அரசியல் சாணக்கியம் நிறைந்த தமிழ் தலைவர்கள் அறியாமல் இருக்கமாட்டார்கள். ஆகவே, ஜனாதிபதி சார்ந்துள்ள கட்சியின் அரசாங்கத்தைப் பெரும்பான்மை பலத்துடன் அமைப்பதற்குத் தமிழர்களும் தயார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அறிவித்துள்ளார். வேறு சிலர் எப்படியாவது பாராளுமன்றத்திற்குச் சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். கூட்டமைப்பிற்குப் பாடம் கற்பிப்பது என்பதும் தமிழ் மக்களுக்குக் கற்பிப்பது என்பதும் ஒன்றுதான். ஏனென்றால், எத்தனை கட்சிகள் வந்தாலும் கூட்டமைப்பைத் தமிழ் மக்களிலிருந்து பிரிக்க முடியாது என்பது சிலரின் அசட்டு நம்பிக்கையாக இருக்கின்றது. 

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குப் புறம்பாகத் தனித்துத் தமிழ்க் கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு பங்காளிக் கட்சிகளையே உதாசீனம் செய்யும் போக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பிறவிக்குணம் என்பது பொதுப்படையான குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டைப் பொய்யாக்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு உண்டு என்றே சொல்ல வேண்டும். 

புதிதாக உருவாகும் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ முன்கூட்டியே அறிவித்திருக்கிறார். அந்த சம்பந்தப்பட்ட தரப்பு நிச்சயமாக சம்பந்தன் மட்டுமாக இருக்கக் கூடாது என்பதே ஏனைய தமிழ் பிரதிநிதிகளின் எதிர்பார்ப்பு. கூட்டமைப்பு வடக்கில் சிலரைப் புறக்கணிக்கிறது என்பதைவிடக் கிழக்கு மாகாணத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. அதனால்தான், கிழக்கில் ஓர் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் நிலவுவதாகத் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். அதேநேரம், தமிழர் பிரச்சினை என்பது வெறுமனே வடக்கு சார்ந்ததோ அல்லது வடக்கு கிழக்கு மாத்திரம் சார்ந்ததோ அல்ல என்பதை சகல தரப்பினரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களை அரவணைத்து ஓர் ஒன்றுபட்ட கருத்துடன் கூட்டுத் தலைமையாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு நிரந்தரத் தீர்வை அரசாங்கத்திடன் முன்வைக்கக் கூடியதாக இருக்கும். இல்லாவிடில், பிரச்சினை தீர்க்கப்பட்டாலும், யாரோ ஏதோ ஒரு தரப்பு மீண்டும் குறைகூறிக்கொண்டே இருக்கும். அந்தக் குற்றச்சாட்டை இல்லாமற்செய்யும் வகையில், எல்லாத் தரப்பினரும் ஒரே கூட்டமைப்பாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். அவ்வாறில்லாவிடில், மீண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தைக் கடத்திவிட்டு மீண்டும் அழுது புலம்பும் நிலையே உருவாகும். 

இதுவிடயமாகச் சிந்திக்கும்போது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள ஒரு கருத்தையும் கருத்திற்கொள்ளக்கூடியதாகவிருக்கிறது. 

அதாவது சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் கூற்று. இவ்வாறான ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொள்வதற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குப் பெரிதாக விருப்பம் இல்லை என்ற விமர்சமும் இருக்கிறது. இந்த விமர்சனத்தையும் கூட்டமைப்பு உடைத்தெறிய வேண்டும். வடக்கு,கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தெரிவாகும் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குடையின்கீழ் செயற்பட்டுப் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். அந்த ஆதரவின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய முடியும் என்பதை வரலாற்றுப் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் தரப்பினர் எவ்வாறு தமது சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக ஒன்றுபடுகிறார்கள் என்பதையும் சிந்தித்துத் தமிழர் தரப்பு வீண் தன்முனைப்புத் தவிர்த்துச் செயற்பட்டு இந்தச் சந்தர்ப்பத்தையாவது சரியாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும்!   

Comments