அரசியல்வாதிகள் இதுவரை காலமும் என்ன செய்தார்கள்...? | தினகரன் வாரமஞ்சரி

அரசியல்வாதிகள் இதுவரை காலமும் என்ன செய்தார்கள்...?

ஒகஸ்ட் 5 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பல கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மக்களது இருப்பிடங்களை தேடி வாக்கு வேட்டைக்காக களமிறங்கியுள்ளனர். இந்தநிலையில் கடந்த பல வருடங்களாக தாம் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகள் தமக்கு எதை பெற்றுத் தந்தார்கள் என கேள்வி எழுப்புகின்றனர் வவுனியா, சிதம்பரநகர் மக்கள். அந்தவகையில், அகதிகளாக இடம்பெயர்ந்து 29 வருடமாக அடிப்படை வசதிகள் இன்றி வாழும் அம் மக்கள் பற்றிய பார்வையே இது.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரரேமதாச காலப்பகுதியில் ஏற்பட்ட தற்காலிக சமாதான உடன்படிக்கை காரணமாக இந்தியாவுக்கு சென்ற அகதிகளை மீள அழைத்து வர ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம் நடவடிக்கை எடுத்திருந்தது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக வவுனியா, ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சிதம்பரபுரம் பகுதியில் இருந்த காடுகளை அழித்து 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முகாமே சிதம்பரபுரம். காலப்போக்கில் தென்னிலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள், வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் என பலரும் அம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த காலங்களில் அவர்கள் படிப்படியாக குடியேற்றப்பட்டனர்.

வவுனியாவின் மறவன்குளம், ஆனந்தபுரம், ஆச்சிபுரம், செட்டிகுளம் என பல பகுதிகளில் முகாமில் இருந்த ஒரு தொகுதி மக்கள் கட்டம் கட்டமாக குடியேற்றப்பட சிலர் தமது சொந்த இடங்களுக்கு சென்று மீள் குடியேறியும்  இருந்தனர். இந்நிலையில் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு சொந்தக் காணிகள் இல்லாதவர்களாக 193 குடும்பங்கள் தொடர்ந்தும் முகாமிலேயே தங்கி இருந்தனர்.

25 வருடங்களின் பின் கடந்த 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் அப்போதைய மத்திய மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சினால் இம் மக்களை குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் முகாம் அமைந்திருந்த காணி மற்றும் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருந்த காணி என 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு இங்கு இருந்த 193 குடும்பங்களுக்கும் தலா 4 பரப்பு காணி வீதம் வழங்கப்பட்டுள்ளதுடன், மிகுதிக் காணி மைதானம், வீதி, பொதுக் கட்டிடம் என உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

25 வருட முகாம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக இம் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு இவர்கள் வாழ்ந்த முகாம் பகுதி ‘சிதம்பரநகர்’ எனவும் பெயர் மாற்றப்பட்டது. பல அரசியல்வாதிகள், நல்லாட்சி அமைச்சர்கள், வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வீட்டுத்திட்டம் தருவதாகவும், அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஆனாலும் இன்று வரை  வீட்டுத்திட்டம் மற்றும் மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படாமையால் அம் மக்கள் சிதம்பரபுரம் முகாமில் அகதிகளாக வாழ்ந்ததினைப் போன்றே தற்காலிக கொட்டகைக்குள் தற்போதும் வாழ்ந்து வருவதுடன், தினமும் மழையுடனும், வெயிலுடனும் போராடுவதாகவும் கூறுகின்றனர்.

கடந்த 20 ஆம் திகதி சர்வதேச அகதிகள் தினம். யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்தும் இலங்கையிலும் அகதிகள் உள்ளார்கள் என்பதற்கு 29 வருடங்களாக அல்லல்படும் எம்மை போன்றவர்களே சாட்சி என்கின்றனர் சிதம்பரநகர் மக்கள்.

தற்போது தேர்தல் காலம் என்பதால் மீண்டும் அரசியல்வாதிகள் வருகிறார்கள்.

இதுவரை நம்பி ஏமாந்தது போதும். இம்முறையாவது அரசியல்வாதிகள் எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வழங்கும் வாக்குறுதியை காப்பாற்றுவார்களா என்பதே இம் மக்களின் ஏக்கம்.

கி.வசந்தரூபன்

Comments