யார் வழிப்படுத்துவது இந்த தலைமைகளை? | தினகரன் வாரமஞ்சரி

யார் வழிப்படுத்துவது இந்த தலைமைகளை?

துக்கத்தைத் தருகின்ற விதமாகப் புதிய பாராளுமன்றத் தொடரில் தமிழ்ப்பிரதிநிதிகளும் சிங்களப் பிரதிநிதிகளும் மீண்டும் மோதிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். தலைப்புச் செய்திகளாக இவர்களுடைய சேதிகளே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. பலரையும் ரொம்ப எளிமையாகச் சூடேற்றுவதற்கு இந்த மோதல்கள் நன்றாகப் பயன்படுகின்றன. 

கவனித்துக் கொள்ளுங்கள், யுத்தம் முடிந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகும் இதுதான் நடக்கிறது என்பதை. யுத்தத்துக்குப் பிறகான அரசியலை (Postwar Politics) முன்னெடுப்பதற்குப் பதிலாக எல்லோரும் யுத்தத்துக்கு முந்திய, யுத்தகாலத்திய அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்பதையும். கூடவே கற்றுக் கொண்ட பாடங்கள், தேசிய நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, சமாதானம் என்பதெல்லாவற்றுக்கும் மாறாகவே சிந்திக்கிறார்கள் என்பதையும். 

இது மாபெரும் தவறு. காலப்பிழையை உருவாக்குவது. காலம் பிழைத்தால் அத்தனையும் பிழைத்து விடும். ஏனென்றால் காலமே எல்லாவற்றுக்கும் அடிப்படையானது.

ஆனால், இந்தத் தவறை, இந்த அரசியல் பிழையைக் கண்டு கொள்ளப் பலரும் தவறுகின்றனர். குறிப்பாக ஊடகங்கள். இன ரீதியிலான, இனமுரண்களை கூர்மைப்படுத்துகின்ற செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் முதன்மையளிக்கின்றன இந்த ஊடகங்கள். 

ஒரு எளிய உதாரணத்துக்காக, ஒன்பதாவது பாராளுமன்றம் கூடியபிறகு வெளியாகியிருக்கும் முதன்மைச் செய்திகளைப் பார்க்கலாம். 

“பௌத்தத்துக்கும் பெரும்பான்மையினருடைய பாதுகாப்புக்கும் முன்னுரிமை” என்ற அடிப்படையில் ஜனாதிபதி பேசியிருக்கிறார். இதற்கமைய புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கிறது எனவும், இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஷ்வரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பேசியிருக்கிறார்கள். 

“இலங்கைத்தீவில் சிங்களவர்களை விடவும் தமிழர்களுடைய வரலாறே தொன்மையானது. தமிழரே பூர்வீக குடிகள். தமிழ் மொழியே இலங்கையின் முதல் மொழி, மூத்த மொழி” என்று கூறியிருக்கிறார் விக்கினேஸ்வரன். 

“விக்கினேஸ்வரனின் இந்த உரையை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடா”தென சஜித் பிரேமதாஸ தலமையிலான எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரியுள்ளார். 

“இலங்கையில் தமிழ், சிங்களம் என்ற இரண்டு தேசிய இனங்கள் உள்ளன. இதைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். இல்லையென்றால், நாடு மீண்டும் இனமுரண் சகதிக்குள் சிக்குண்டு அழியும்” என்று இதே நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கூறியிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 

“தமிழ், சிங்களம் என்ற இரண்டு இனங்களுடைய தனித்துவத்தின் அடிப்படையில் ஒரு நாடு இரு தேசம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். சிங்கள மக்கள் எப்படி ஒருங்கு திரண்டு சிந்திக்கிறார்களோ அப்படியே தமிழ்மக்களும் சிந்திக்கின்றனர். எனவே இதைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு” என்று தெரிவித்திருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 

ஆக மொத்தத்தில் எல்லாத் தரப்புகளும் இனமுரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்துவதிலேயே கூடிய அக்கறையைக் கொண்டுள்ளன. இதில் எதிர்க்கட்சி, தமிழ்க்கட்சி, சிங்களக் கட்சி என்ற பேதங்கள் எதுவுமில்லை. 

ஆகவே அத்தனை தரப்புகளும் தவறையே செய்கின்றன. 

இந்தப் பழைய பாணியிலான மோதல்கள் அனைத்தும் இனத் தனித்துவம், இன வரலாறு, இன அடிப்படையிலான அரசியல் அதிகாரம் போன்றவற்றை உள்ளடக்கியதாகவே அமைகின்றன. இதைப்பற்றி அரசியல் மேடையில் பேசத் தொடங்கினால் இதற்கு முடிவேயிருக்கப்போவதில்லை. இதெல்லாம் போருக்கு முந்தியே தாராளமாகப் பேசப்பட்டவை. இப்படிப் பேசியதால்தான் இனமுரண்பாடே வளர்ந்தது. போர் விளைந்தது. பேரழிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. நாடு பொருளாதாரத்தில் கெட்டழிந்தது. இதற்குப் பிறகும் இனமுரண்களை வளர்க்கும் விதமாகப் பேசுவதென்றால்...! 

வரலாற்றிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் எதை நாம் கற்றுக் கொண்டோம் இது முட்டாள்தனமன்றி வேறென்ன? மக்களுக்கும் வரலாற்றுக்கும் இழைக்கும் துரோகமன்றி வேறெதுவாக இருக்க முடியும்? 

இனமுரண்பாடுகளை உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்குமாக யாரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. தங்களுடைய அதிகாரத்தை இந்த அரசியல்வாதிகள் விரும்பிய மாதிரிப் பயன்படுத்திக் கொள்வதற்கோ சீரழிப்பதற்கோ வழங்கவில்லை. அதுவும் இத்தனை அழிவுகளை அனுபவமாகக் கொண்டதற்குப் பிறகு. 

அறுபது ஆண்டுகால அரசியல் போராட்டங்கள், முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டம், போர் ஆகியவற்றுக்குப் பிறகு 'முழு நாடும் இலங்கையர்கள் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.

மாற்று அரசியல் வழிமுறைகள் எல்லாவற்றையும் கடந்து பாராளுமன்ற அரசியலுக்குள் மறுபடியும் முழுமையாக நுழைந்திருக்கிறோம். 

நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும்போது நாட்டில் வேறெந்த அரசும் உருவாகுவதற்கு எந்தவொரு வகையிலும் துணைபோவதில்லை என்றே சத்தியப் பிரமாணமும் செய்துக்கொள்கிறோம். ஆகவே இனி இதுதான் சரியான அரசியல். இதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் இங்கே கூறவில்லை. 

ஆனால், இவையெல்லாம் இன்றைய யதார்த்தம். புறக்கணித்து விலகிச் செல்ல முடியாத இன்றைய உண்மை என்பதை புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிப்பதற்கோ பலருக்கும் கடினமாக இருக்கலாம். ஆனால், இதைத் தவிர்த்து வேறு அரசியல் தெரிவுகளைச் செய்யக் கூடிய சூழலோ திராணியோ யாரிடத்திலும் இப்போதில்லை. 

இதனால்தான் தலையைக் கவிழ்ந்தபடி சத்தியப்பிரமாணத்தைச் செய்து கொண்டு பாராளுமன்றத்துக்குள் நுழைந்து விட்டால், நம்மவர்களுக்கு வேறு ஞானம் பிறந்து விடுகிறது. அப்படித்தான் இலங்கையின் அனைத்துச் சமூகங்களுடைய இருப்புக்கும் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் பல்லினத்தன்மைக்கும் பன்மைத்துவத்துக்கும் பொறுப்பாக நடந்து கொள்வோம் என்று உறுதியுரைத்தவர்களும் அதை மறந்து செயற்படுகின்றனர். 

இப்படி நாட்டினுடைய, மக்களுடைய எதிர்காலத்துக்கு மாறாகச் செயற்பட முனைவது ஏன்? அடுத்த தேர்தலை மனதில் கொண்டு, தாம் சார்ந்த இனப் பிரிவினரைத் திருப்படுத்துவதற்காகத்தானே. இதற்கேற்றமாதிரியே மக்களைப் பிளவு நிலையில் வைத்திருக்கும் பகை உளவியல் தந்திரமாகக் கட்டமைக்கப்படுகிறது. 

அப்படியென்றால் மறுபடியும் பகை வளர்ப்புத்தானா? யுத்தத்தை நோக்கிய பயணந்தானா? என்று நீங்கள் பதற்றமடையலாம். உண்மை அதுதான். யுத்தத்தை நோக்கிச்செல்லாது விட்டாலும் பகையை நோக்கிச்செல்வது என்பது நிச்சயமானது. ஆகவேதான் இதை நாம் கூட்டாகக் கண்டிக்க வேண்டியுள்ளது. மக்களிடையே இருந்து எழுகின்ற அழுத்தங்களே அரசியல்வாதிகளைத் திருத்தும். வழமையாக கட்சிகளும் தலைவர்களுமே மக்களை வழிநடத்துவதுண்டு. இங்கே மக்களே தலைவர்களையும் கட்சிகளையும் வழி நடத்த வேண்டியுள்ளது. 

எனவேதான் ஒவ்வொரு தரப்பும் தமது அரசியற் கருத்துகளை வெளியிடுவதிலும் அரசியற் தீர்மானங்களை மேற்கொள்வதிலும் மிகக் கவனமாக, மிகப் பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் இந்தச் சூழலை வளப்படுத்தும். இந்த நாட்டை மேம்படுத்தும். மேலும் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும் என அழுத்தமாகக் கூறுகிறோம். 

இந்தச் சிறிய அடிப்படை விசயத்தைக் கூடப் பெரிய தலைவர்களே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பொறுப்பான நிலையில் உள்ள கட்சிகளே இதைக்குறித்துச் சீரியஸாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை என்பதுதானே உண்மை. 

பாருங்கள், மேலே குறிப்பிட்டுள்ளவாறு கருத்துகளைக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் முஸ்லிம்களைப் பற்றியோ மலையக மக்களைப் பற்றியோ பேசவே இல்லை. இரண்டு தரப்பும் தமிழ், சிங்களத் தேசிய இனங்களுக்கு அப்பால் பிற இனத்தினரைப்பற்றிக் கவனம் கொள்ளவே இல்லை. இரண்டுக்குமிடையில் எது முதன்மையானது என்பதிலேயே இவர்களுடைய அக்கறையுள்ளது. இந்தப் புறக்கணிப்பு வாதமும் பாராமுகமும் இனவாதமன்றி வேறென்ன? பிற சமூகத்தினரைக் கலவரப்படுத்துவதன்றி வேறேது? 

இந்தப் பார்வை ஆபத்தானது என்பதை யாராவது மறுக்க முடியுமா? 

முஸ்லிம்களையும் மலையக மக்களையும் புறந்தள்ளி விட்டு இந்த நாட்டிலே அமைதியை உருவாக்கி விட முடியுமா? அல்லது அரசியல் தீர்வைப் பெற்று விட முடியுமா? அது நீதியானதாக இருக்குமா? ஆகவே இப்படிக் குறுகலாகத் தமிழ் – சிங்கள முதன்மைவாதம் என்று தங்களுக்குள் மோதுண்டு கொள்வது அறியாமை மட்டுமல்ல அநீதியானதும் கூட. 

இப்படிச் செயற்பட்டால் நிகழ்காலத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பாம்புகளாகவே இவர்களை வரலாறு நோக்கும். 

விக்கினேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் பதிவு செய்வது தவறு என்பதோடு பிரச்சினை முடிந்துவிடாது. அதைப் பதிவு செய்யாமல் கூட விட்டு விடலாம். அல்லது இலங்கையின் பூர்விகக்குடிகள் யார் என்பது என்பது தொடர்பில் தனியாகவே ஆயிரம் அமர்வுகளைப் பாராளுமன்றத்தில் நடத்தி விடலாம். இது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த வகையில் உதவும்? என்று நாம் கேட்டுப் பார்க்க வேண்டும். 

இதைப்போல, மனுஷ நாணயக்காரவின் இந்தக் கருத்தை ஐக்கிய மக்கள் சக்த்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா ஆதரிக்கப் போகிறாரா? மறுக்கப்போகிறாரா? 

அந்தக் கட்சியோடு இணைந்து அரசியற் கூட்டை வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்ன? 

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவற்றின் பதில் என்ன? 

விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க முனைந்தால் நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்னவாக அமையும்? அவை இந்த இடத்தில் விக்கினேஸ்வரனின் மீதான பழியைத் தீர்த்துக் கொள்ளுமா? அல்லது நீதிகாகப் போராடுமா? 

ஏற்கனவே நாம் கூறியமாதிரி ஆளும் கட்சி மட்டும்தான் பிரச்சினை. எதிர்க்கட்சி ஆதரவு என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. எல்லாத் தரப்பும் தத்தம் கட்சி நலன் சார்ந்து இனவாத அரசியலில்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. 

இதற்குப்பின்னால் நாம் இழுபடுவதா? இதிலிருந்து விடுபடுவதா? என்பதே மக்கள் முன்னால் உள்ள கேள்வி. 

சந்தேகமேயில்லை. மக்களே வழிப்படுத்த வேண்டும் இந்த அரசியலையும் இந்தத்தலைமைகளையும்.

கருணாகரன்

Comments