புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழித்தட ஒழுங்குவிதிகள் | தினகரன் வாரமஞ்சரி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழித்தட ஒழுங்குவிதிகள்

நாட்டில் கடந்த சில வருடங்களாக வீதி விபத்துக்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதன்மூலம் வருடாந்தம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதுடன் ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாகியும் வருகின்றனர். 

நாட்டில் 15நிமிடங்களுக்கு ஒரு வாகன விபத்து இடம்பெறுவதாக அறிய கிடைப்பதுடன் ஒரு நாளில் ஆகக் குறைந்தது ஒருவராவது வீதி விபத்தில் மரணிப்பதையும் காணமுடிகின்றது. 

காலத்திற்கு காலம் வீதி ஒழுங்கை பேணுவதற்காக பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதும் சட்டங்களை மதித்து அதனை பின்பற்றி செயற்படுபவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.

இந்த நிலையில் நாளுக்குநாள் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதை தடுக்க முடியாமலும் அதனூடான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த முடியாமலும் உள்ளது. 

இத்தகைய பின்னணியிலேயே அரசாங்கம் நாளை 21ம் திகதி முதல் வீதி போக்குவரத்து சேவையில் வழித்தட முறைமையை மீறும் குற்றங்களுக்காக கடுமையான சட்டங்களை பிரயோகிக்கத் தீர்மானித்துள்ளது. 

கடந்த வாரம் பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் புதிய வீதி வழித்தட முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஏற்கனவே அந்த முறைமை நடைமுறையில் இருந்த போதும் வாகனச் சாரதிகளின் அலட்சியப்போக்கு காரணமாக அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடியாமல் அது கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் தலைமையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இதுதொடர்பில் இடம்பெற்றுள்ளன. 

அதன் பிரதிபலனாகவே மேற்படி புதிய வழித்தட முறைமை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் பங்கேற்புடன் ஒரு வார காலமாக முடிந்தளவு சாத்தியப் பாட்டுடன் இந்தப் புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் இனியும் இந்த புதிய நடைமுறையை முறையாக பின்பற்றாத வாகன சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதேவேளை, நாளை முதல் வழித்தட சட்டத்தை மீறி செயற்படும் சாரதிகளுக்கு எதிராக 2000ரூபா தண்டப்பணம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தவறினால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர். 

மேற்படி சட்டத்தை மீறினாலும் கடந்த ஒருவாரகாலம் தண்டம் விதிக்கப்படாமல் சலுகைக்காலம்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் நாளை திங்கட்கிழமை முதல் இவ்விதிகளை  கடுமையாக அமுல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களின் நலன் கருதி கொழும்பு நகரிலும் அதனை அண்டிய நகர்ப்புறங்களிலும் மிக அதிகமான பொலிசார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் உரிய வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். 

குறிப்பாக பெண் பொலிசார் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் காணப்பட்டனர்.  அதனைப் பார்த்த பாதசாரிகளும் வாகன சாரதிகளும் ஓரளவேணும் வழித்தட சட்டங்களைப் பின்பற்றியதைக் காணமுடிந்தது. 

பஸ் வண்டிகளுக்காக தனியான வழித்தடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னர் மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் குறித்த வீதிகளில் அதே வழித்தடங்களில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

சில வீதிகளில் குறித்த வலதுபக்க வழித்தடடங்கள் 2காணப்படும் நிலையில் சில வீதிகளில் மூன்று வழித்தடங்களும் உள்ளன. எவ்வாறெனினும் இடது பக்க வழித்தடத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய முறைமை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வார காலமே ஆகியுள்ள நிலையிலும் சாரதிகள் அதற்கு பழக்கப்படாத நிலையிலும் கொழும்பிலும் அதனை அண்டிய நகரங்களிலும் பெரும்பாலான பகுதிகளிலும் அதிக வாகன நெரிசலை காணமுடிந்தது. 

 வாகன சாரதிகள் இவ்விதிகளுக்குப்  பழக்கப் பட்ட பின் இந்த வாகன நெரிசல் குறைவடையும் என பொலிஸ் ஊடக மற்றும் தகவல் தொழில் நுட்பத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்தார். 

மேற்படி வீதி ஒழுங்கை சாரதிகள் முறையாக கடைப்பிடிக்கின்றனரா என கண்டறிவதற்கு பொலிசாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விமானப் படையினரின் ட்ரோனர் கமரா மூலம் அது பதிவு செய்யப்பட்டு குற்றம் இழைக்கும் சாரதி களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

மேற்படி புதிய வழித்தட முறைமைகளின்படி பஸ் வண்டிகள் பயணிக்கும் வழித்தடத்திலேயே மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் பயணிக்கும்போது பல்வேறு அசௌகரியங்களுக்கும் கால தாமதத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக அதன் சாரதிகள் தெரிவிக்கின்றனர். 

இதனால் தமது வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் குறை கூறுகின்றனர். 

அதேவேளை பஸ் வண்டிகளுக்கு பின்னால் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் பயணிக்கும்போது பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு பஸ்கள் தரித்து நிற்கும் போது தாமும் அந்த பஸ்களுக்கு பின்னால் காலத்தை வீணாக்கிக் கொண்டு தரித்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர். 

எனினும் அத்தகைய பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு காலதாமதத்தை தவிர்த்துக் கொள்ளும் வகையில் செயற்பட உள்ளதாகவும் போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காலை வேளைகளில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றிச்செல்லும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள், வாடகைக்கு முச்சக்கர வண்டியை அமர்த்தி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் புதிய முறைமை தொடர்பில் போக்குவரத்து பொலிசார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். 

எனினும் சில பகுதிகளில் வாகன சாரதிகள் போக்குவரத்து பொலிசாரின் இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

ஆரம்பத்தில் சில அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்தாலும் காலப்போக்கில் அது வழக்கமாகி விடும். மாறாக வாகனங்கள் ஒன்றுக்கொன்று வழித்தடங்களை விட்டு முந்திச் செல்ல முற்படும்போது ஏற்படும் விபத்துக்கள் அதிகம் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

பொதுவாகவே நாட்டில் வீதி விபத்துக்கள் மூலம் அதிகம் பாதிக்கப் படுவது முச்சக்கர வண்டிச் சாரதிகளே. சில முச்சக்கர வண்டிச் சாரதிகள் பயணிகளை ஏற்றிக்கொண்டு எந்த பொறுப்புணர்வும் இன்றி தமது இலக்கை வேகமாக சென்று அடையவேண்டும் என்பதற்காக தன்னிச்சையாக, வீதி ஒழுங்குகளை பின்பற்றாது பயணிப்பது, பல விபத்துகளுக்கு காரணமாகின்றது. 

முச்சக்கர வண்டி ஒரு இலகு வாகனம் என்பதால் அது அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றது. எனினும் அதனை உணர்ந்து அதன் சாரதிகள் செயற்படுவது மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. 

வழித்தட முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கடந்த சில தினங்களாக முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளாகி பலர் மரணம் அடைந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

அதேபோன்று வீதிகளில் ரொக்கட் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் இளைஞர்களையும் நாம் அதிகமாக காணமுடிகின்றது. பொறுப்பில்லாத அவர்களது செயற்பாடுகளினால் தமது உயிருக்கும் பாதசாரிகளின் உயிருக்கும் ஏற்படும் இழப்பை அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. 

இத்தகைய சூழ்நிலையில் மேற்படி வழித்தட முறைமை பல்வேறு அசௌகரியங்களுக்கு காரணமாக அமைந்தாலும் விபத்துக்கள் குறைந்து மனித உயிர்கள் அநியாயமாக பலியாவதை தடுக்க முடியுமானால் இந்த புதிய முறைமையின் அறிமுகம் நன்மையையே விளைவிக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 

அசௌகரியங்களையும் காலதாமதத்தையும் விட மனித உயிர்களின் மதிப்பு மிக உயர்வானது. அதனைக் கருத்திற் கொண்டு அனைத்து வாகன சாரதிகளும் செயற்பட்டால் விபத்து மரணங்களை தவிர்த்துக்கொள்ள முடியும். 

அதேவேளை வாகன சாரதிகளைப் போன்றே பாதசாரிகளும் வீதியில் பயணிக்கும் போது தமக்கான வீதி ஒழுங்கு விதிகளை முறையாக பின்பற்றினால் தமக்கு நேரவுள்ள விளைவுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 

ஏனெனில் சில வீதி விபத்துக்களுக்கும் உயிர்கள் பலியாவதற்கும் பாதசாரிகளின் கவனயீனமும் காரணமாகின்றது. 

மொத்தத்தில் புதிய வழித்தட முறைமையை சுமையாகப் பார்க்காமல் அனைவரதும் நன்மைக்காக அது ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்பதைச் சிந்தித்து வாகன சாரதிகளும் பாதசாரிகளும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால், இந்த அசௌகரியங்கள் நன்மைக்கு வழிவகுக்கும் என்பது எமது தாழ்மையான கருத்து. 

அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயணிகள் போக்குவரத்து தொடர்பில் நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறையினருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

அதன்போது எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்கான வேலைத்திட்டங்களை அவர் தெளிவுபடுத்தியதுடன் பயணிகள் சிறந்த மனநிலையுடன் பயணிப்பதற்கு ஏதுவாக பொதுப் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ரயில்களில் சிறந்த வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

அதன் ஒரு அம்சமாக சிறந்த நிலையில் உள்ள சாதாரண பஸ் வண்டிகளை அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்தி குறைந்த கட்டணத்துடன் பெருமளவு பயணிகள் நன்மை பெறும் வகையில் சேவை வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

நகர்ப்புறங்களில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சொந்தக் கார்களில் பயணிப்பவர்களையும் பஸ்களில் பயணிப்பதற்கான நிலையை விரைவாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

நமது நாட்டில் மட்டுமன்றி உலக அளவில் வீதி விபத்துக்கள் இடம் பெறுவதும் அதனால் பாரிய விளைவுகள் ஏற்படுவதும் தவிர்க்கமுடியாததாகி வரும் நிலையில் இத்தகைய புதிய நடைமுறைகள் அவசியப்படுகின்றன. ஆனாலும் இப்புதிய நடைமுறை அமுல் செய்யப்படக்கூடாதென்றும் மீறி நடைமுறைப்படுத்தப்படுமானால் அதற்கெதிராக சட்ட உதவியை நாடப் போவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்தார்.

எமது நாட்டிலும் கூட 15நிமிடங்களுக்கு ஒரு வாகன விபத்து இடம்பெறுவதாக அறியமுடிகிறது. சில விபத்துக்களை மட்டுமே செய்திகளாக அல்லது காட்சிகளாக எம்மால் காணமுடிகின்றது. பெரும்பாலானவை யாரும் அறியாத விபத்துக்களாக இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 

அந்த வகையில் அரசாங்கம் அனைத்து மக்களினதும் நன்மை கருதி முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நம் அனைவரதும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமானது  என்பதை ஒவ்வொரு கணத்திலும் மறவாமல் செயற்படுவோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments