சாதகமற்ற அரசியல் சூழல்களை வென்று சாதிப்பாரா ஜீவன் தொண்டமான்? | தினகரன் வாரமஞ்சரி

சாதகமற்ற அரசியல் சூழல்களை வென்று சாதிப்பாரா ஜீவன் தொண்டமான்?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பின் இ.தொ.கா. வின் எதிர்காலம் குறித்து அவ்வப்போது எதிர்வு கூறல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால்   தனித்து நின்று ஜீவன் தொண்டமான் சவால்களை எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி முக்கியமாகிறது.
செளமியமூர்த்தி தொண்டமானின் அரசியல்  அணுகுமுறைகளை பின்பற்றி அவர்வழி நடந்தார் அமரர் ஆறுமுகன் தொண்டமான். அதே வழியை  பின்பற்றுவாரா ஜீவன் தொண்டமான்? அல்லது இளைமை துடிப்புடன் வழமையான கட்சி பாணியை அப்படியே பின்தள்ளி புதிய தேடலுடன் தன் பணியை தாங்கிச் செல்வாரா? அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா? காய்தல் உவர்த்தல்   இன்றி சில சிந்தனைச் சிதறல்கள் இனி. 

80 வருட தொழிற்சங்க வரலாறு, 40 வருட அரசியல் அனுபவம் இதுதான் இ.தொ.கா. 1939 ஜுலை 25 ஆம் திகதி நேரு இலங்கை வருகின்றார். பாரத் சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம். ஹரிஜன சேவா  சங்கம் ஆகிய அமைப்புகளை கூட்டிணைத்து இலங்கை இந்திய காங்கிரஸை உருவாக்குகிறார். இதுவே 1954களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று மாற்றம் கண்டது. ஏ. அஸீஸ் எஸ், தொண்டமான், கே. ராஜலிங்கம், எஸ். எம். சுப்பையா, வீ.கே. வெள்ளையன், மோத்தா, சீ.வீ. வேலுப்பிள்ளை போன்ற முக்கியமான மலையகத் தலைவர்களை அன்று உள்வாங்கியிருந்தது இ.தொ.கா.  

1954 இல் இ.தொ.கா.வின் தலைமைப் பொறுப்பையேற்ற எஸ். தொண்டமான் 1999 ஆம் ஆண்டு அவரது மரணம் நிகழும் வரை அதன் தலைவராக இருந்து அசத்தினார். 1977 இல் இ.தொ.கா. அரசியல் ரீதியாக அந்தஸ்தை உயர்த்திக் கொண்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் தொன்டமானுக்கு அமைச்சுப் பதவியை வழங்கியது. இதன் மூலம் ஐ.தே.கவின் அரசியல் தளம் மலையகத்திலும் விரிவடைந்தது. இதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு  பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து மீண்டும் அமைச்சரானார் தொண்டமான்.  

இப்படி காலத்துக்குக் காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்களுடன் சமரசத்தினை ஏற்படுத்திக் கொண்டு அமைச்சர் பதவியைப் பெற்று அரசாங்கத்தின் பங்காளியாக மாறிவிடும் தனமான அரசியல் அணுகுமுறையை வழக்கமாக்கிக் கொண்டது இ.தொ.கா. எஸ். தொண்டமான் தான் மரணிக்கும் வரை இலங்கை அரசியலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்தார்.  

இவரது மறைவுக்குப்பின் இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஆறுமுகன் தொண்டமான் தனது தாத்தாவின் அரசியல் போக்கினையே கடைப்பிடித்து வந்தார். எனினும் மலையக மக்களிடையே கற்ற சமூகம் ஒன்று தலையெடுக்க ஆரம்பித்து இ.தொ.காவின் இப்போக்கை விமர்சிக்கலானது. எனினும் இ.தொ.காவிற்கு சவாலாக இன்னுமொரு அமைப்பு இல்லாதிருந்த சூழ்நிலையில் இ.தொ.காவின் செல்வாக்கு மங்கிப் போகாமலே இருந்தது. இதனால் அக்கட்சி தனித்து நின்றே தீர்மானங்களை எடுத்தது.  

எனினும் தேசிய கட்சிகள் அதன் தயவை நாடவே செய்தன. அதிகமான அங்கத்தினர்களையும் வாக்கு வங்கியையும் கொண்டிருந்தபடியால் பெரும்பான்மையின கட்சிகளுக்கு இ.தொ. கா.வின் ஆதரவு தேவைப்பட்டது.  

2015இல் அதன் கணக்குத் தவறியது. ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தார்.  ஆறுமுகன் தொண்டமான். ஆனால் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். அதன் பின் பொதுத்தேர்தலில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட ரணில் பிரதமர் ஆனார். பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவையே ஆதரித்தது இ.தொ.கா.  

எனவே,  ரணில் - மைத்திரி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து 6 பாராளுமன்ற உறுப்பினர்களைக் பெற்றுக்கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சுப் பதவிகளைப் பெறலானது. அடிக்கடி புதிய அரசாங்கத்துடன் இணையும் இராஜதந்திர நடவடிக்கைகளை இ. தொ.கா. எடுக்கவே செய்தது. ஆனால் இறுதிவரை அது ஈடேறவில்லை. முத்து சிவலிங்கத்துக்கு பிரதி அமைச்சுப் பொறுப்பு மட்டுமே வாய்த்தது.  
பின்னர் இடைநடுவில் நடந்த 51 நாள் ஆட்சியில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரானார். ஆனால் அது நீடிக்க முடியாதபடி ஆட்சி கலைக்கப்பட்டது. 2020 பொதுத் தேர்தலில் மீண்டும் பொதுஜன பெரமுனையோடு கம்பீரமாக கைக்கோர்த்துக் கொண்டது இ.தொ.கா.  
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேர்தல் நாள் நெருங்கிய வேளையில் ஆறுமுகன் தொண்டமான் காலமானார். ஏற்கனவே வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் பெயர் சேர்க்கப்பட்டது. நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் மொத்தமாக  7 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது இ.தொ.கா. எனினும் இருவர் மட்டுமே வெல்ல முடிந்தது. நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று நம்பிக்கையூட்டினார்.  

இதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஆனார் அவர். இ.தொ.கா. அரசாங்கத்தின் அரவணைப்புக்கு உள்ளாகியிருக்கும் கட்சி. அரசியலில் அனுபவம் இல்லாத ஜீவன் தொண்டமான் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாதவராக இருக்கிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆளும் கட்சியின் அனுசரணையின்றி இ.தொ.காவால் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள தடுமாற வேண்டி இருக்கும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.  

ஏனெனில் அங்கத்தினர்களை பொறுத்தமட்டில் இன்றும் இ.தொ.கா பலமிக்க தொழிற்சங்கம். மறுவளமாக அரசியல் கட்சி. ஆனால் அதைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தக்கூடிய பக்குவம் ஜீவன் தொண்டமானுக்கு இருக்கின்றதா? இ.தொ.காவின் எதிரணியான தமிழ் முற்போக்குக் கூட்டணி பலமாகவே உள்ளது. 6 உறுப்பினர்கள் அதன் வசம் உள்ளார்கள். முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஒரு இராஜாங்க அமைச்சர் அக்கட்சியில் உள்ளார்கள். அவர்களது அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஈடுகொடுக்க வேண்டுமானால் அதற்கு அரசியல் அனுபவம் அவசியம் என்பதை மறுப்பதற்கு இல்லை.  

தவிர முன்னைய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தனிவீட்டுத் திட்டம், காணி விநியோகம், காணி உறுதி வழங்கல், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கூடிய 14,000 தனிவீட்டுத் திட்டம் என்பன மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இதுவரை பாதை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழாக்களை மட்டுமே இ.தொ.கா.வால் செய்ய முடிந்திருக்கின்றது. வரவு செலவுத் திட்டம் வந்த பின்னரே அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட முடியும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  
அமரர் ஆறுமுகன் தொண்டமான் மரணிக்கும் வரை இந்த வீடமைப்புத்திட்டம் பற்றி குறைகளை சுமத்தியே வந்திருந்தார். முறைகேடு, ஊழல், மோசடி இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்தார். அவரின் மறைவுக்கு பின்னர் ஜீவன் தொண்டமானும் தம் பங்குக்கு குற்றச்சாட்டுக்களைக் கூறத் தவறவில்லை. எனவே இத்திட்டத்தை அவர் ஆரம்பிக்கும் பட்சத்தில் தமது சாமர்த்தியத்தை நிரூபிக்க வேண்டிய சவால் வரவே செய்யும். அதை அநுபவம் இல்லாத அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை அறிய சிறிது காலம் எடுக்கும்.  

இ.தொ.காவைப் பொறுத்தவரை பலவீனமான ஒரு தலைமைத்துவம் இருப்பதாக நிலவும் கருத்துக்களைப் பொய்ப்பிக்க வேண்டும். சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் ஏற்படும் வேளையில் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். குறிப்பாக 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் இதனை இறுதிவரை சாதிக்க முடியாதவராகிப் போனார் அமரர் ஆறுமுகன் தொண்டமான். அந்த வாய்ப்பை ஜீவன் தொண்டமான் சுவீகரித்துக் கொள்வாரா?  

எதையாவது ஒன்றை சாதித்துக் காட்டி தனது சாதுரியத்தை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவே செய்கின்றது. இ.தொ.கா.வுக்கு சந்தா அவசியம் இல்லை என்ற சர்ச்சையை கிளப்பி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் செந்தில் தொண்டமான். அந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பு. இப்படி கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகளைச் சாமாளிக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. கட்சியில் உள்ள பிரபலங்கள் எல்லோரும் ஜீவனை விட அநுபவசாலிகள். இதே போலவே பங்காளி கட்சியுடனும் பக்குவமாக நடந்துக் கொள்ள வேண்டியுள்ளது. பகைத்துக் கொள்ளவோ, ஆதரவை விலக்கவோ   என ஆரவாரம் செய்யவோ வாய்ப்பே இல்லை.  

இதே நேரம் ஊடகத் தகவல்களின்படி த.மு. கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மலையக அரசியல் கட்சிகளை உள்வாங்கிக் கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவே கூறப்படுகின்றது. த.மு.கூட்டணி ஆட்சியில் இணையுமானால் அமைச்சுப் பதவிகள் பகிரப்படலாம். இவ்வாறான சூழ்நிலையில் இ.தொ.கா. அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக மட்டும் இருக்க வேண்டி நேரலாம். செல்வாக்குச் செலுத்த முடியாது போகும்.  

முன்னைய ஆட்சியில் இ.தொ.காவை இணைக்கவிடாது ஆறு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு த.மு. கூட்டணி அச்சுறுத்தியது. இதுபோல இ.தொ.காவுக்கு செயற்பட இடமில்லை. ஆக   த.மு. கூட்டணி அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில் வேடிக்கை பார்க்க மட்டுமே இ.தொ.காவால் இயலும். இதேநேரம் தனது தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள போராடவே அக்கட்சிக்கு காலம் சரியாக இருக்கும்.  
ஆனால் மலையக மக்கள் என்ன நினைக்கிறார்கள்.? யார் யாரோடு சேரப்போகிறார்கள் என்பதல்ல அவர்கள் கவலை. விலகி நின்று விதியை நொந்து கொள்வதை விட அதிகார வர்க்கத்துடன் இணைந்து நின்று எதையாவது செய்ய மாட்டார்களா? என்பது தான் அவர்கள் எண்ணப்பாடு. இ.தொ.கா. என்றாலும் த.மு.கூட்டணி என்றாலும் மலையக சமூகத்தின் மனோரதம் இதுதான்!   

Comments