மைக் பொம்பியோவின் கொழும்பு வருகையும் அமெரிக்க – சீன போட்டாபோட்டியும் | தினகரன் வாரமஞ்சரி

மைக் பொம்பியோவின் கொழும்பு வருகையும் அமெரிக்க – சீன போட்டாபோட்டியும்

சுமார் 15 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் மிகமுக்கியமான ஒரு இராஜதந்திரி கடந்தவாரம் 27ம் திகதி இலங்கை விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். அவர் வருகை தருவதற்கு முன்னரும் சரி பின்னரும்சரி எமது அரசியல் அரங்கில் பல்வேறு அபிப்பிராயங்களும் வாத பேதங்களும் முன்வைக்கப்பட்டன. 2004 சுனாமி சீற்றத்தின் பின்னர் அன்றைய ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகத்தில் பாது காப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் கொலின் பவல் இலங்கைக்கு வந்து சென் றதன் பின்னர் அமெரிக்காவின் அமைச்சரவை அமைச்சரின் வருகையாக மைக்கல் பொம்பியோவின் விஜயம் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் அமைச்சரவையில் உள்ள மிக முக்கியமானதும் சக்தி வாய்ந்துமான அமைச்சு வெளிவிவகாரத்துறைதான். இது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சைவிட முக்கியமானது. ஏனெனில், அமெரிக்கா தொடர்ந்தும் பலம் மிக்க நாடாகத் திகழ வேண்டுமானால் அதன் அயல் உறவுக் கொள்கைகள் எவ்வாறு அமைகின்றனவோ அவ்வாறே அந்நாட்டின் செல்வாக்கு உலகளாவிய ரீதியாக நீடிக்கும், அமெரிக்க அயல் நாட்டு கொள்கைகளின் பின்னரேயே அதற்குத் துணையாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயல்படும். 

அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அல்லது. அதன் அயலுறவு கொள்கைகள் குறித்து காரசாரமான விமர்சனங்கள் உலகெங்கும் வியாபித்திருந்தாலும் அது குறித்து அமெரிக்கா என்றைக்குமே கவலை கொண்டதில்லை. அதன் ஜனாதிபதிமார் குடியரசு கட்சியைச் சேர்ந்தவரானாலும் சரி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரானாலும் சரி, நம்மைப்போல ஐந்துவருடங்களுக்கு ஒரு தடவை தனது அடிப்படையான கொள்கைகளை அந்நாடு மாற்றிக் கொள்வதில்லை. ஏனெனில் எந்தவொரு ஜனாதிபதியானாலும் அவர் தமது கொள்கைகளை அமெரிக்க நலன்சார்ந்ததாகவே அமைத்துக் கொள்ள வேண்டும். 

அகண்ட சோவியத் ஒன்றியத்துக்கும் இத்தகைய கோட்பாடுகள் இருந்தன. சோவியத் தலைவராக பதவியேற்ற கோர்பச்சேவ், உள்ளுக்குள் இற்றுப்போய்க் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தை வோறொரு வகையில் பலப்படுத்த நினைத்து ‘பிரஸ்ட்ரோய்கா மற்றும் கிளாஸ் நோட்’ கோட்பாடுகளை முன் நிறுத்தினார். ஆனால் அவையே அவரது அழிவுக்கு மட்டுமின்றி சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது. இதற்கு முன்னரேயே 1980களின் இறுதியில் போலந்தில் ஏற்பட்ட கம்யூனிச ஆட்சிக்கு எதிரான தொழிலாளர் கிளர்ச்சி பெரும் போராட்டமாக வெடித்தது. அப்போராட்டத்தின் பெயர் சொலிடாரிட்டி. தலைமையேற்று நடத்தியவர் லீக் வலேஸா. போலந்து லெனின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் ஊழியர். அவரது கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் வெற்றி பெற்றது. 1990 இல் அவரது சொலிடாரிட்டி கட்சி வெற்றி பெற்று போலந்தின் முதலாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக பதவியேற்றார். போலந்து மக்களின் தமக்கு சுதந்திரமாக வாழ வழியில்லை என்ற ஏக்கத்துடன் 1970 மற்றும் 76ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உணவு தட்டுப்பாடும், கம்யூனிச ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றேயாக வேண்டும் என்ற வெறியை ஏற்கனவே உருவாக்கி இருந்த பின்புலத்திலேயே லீக் வலேசாலின் போராட்டம் வெற்றி பெற்றது. அது, சங்கிலித் தொடராக செயற்பட்டு கிழக்கு ஐரோப்பிய சோவியத் அனுசரணையுடனான அரசுகளையும் கவிழ்த்தது. இறுதியில் சோவியத் ஒன்றியமும் கலகலத்து சிதறியது. 

இந் நிகழ்வுகளுக்கு பின்னிருந்து அமெரிக்க உளவுத்துறையும், வெளிவிவகார அமைச்சும் தம் பாதுகாப்பு அமைச்சும் எவ்வாறெல்லாம் செயற்பட்டன என்பதை எவராலும் படு நிச்சயமாகக் கூறிவிட முடியாது என்றாலும் அமெரிக்காவின் கரம் அங்கெல்லாம் வலுவாகவே செயற்பட்டது என்பதை அவதானிகள் அறிந்தே வைத்திருந்தனர். 

அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் அனைத்துமே இரண்டு மிகமுக்கிய அடிப்படைகளைக் கொண்டதாகவே உருவாக்கப்படும். முதலாவது அமெரிக்க நலன்கள். இது அமெரிக்க பொருளாதார வளம் காப்பாற்றப்படல் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது, கம்யூனிசத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும் எதிரான அதன் நிலைப்பாடு. இந்த ஆதார கொள்கைகளுக்கு எதிராக ஒரு ஜனாதிபதி செயல்படுவதாகத் தெரிந்தால் அடுத்த தேர்தலில் அவர் தோல்வி அடையச் செய்யப்படுவார். அல்லது கொலை செய்யப்படலாம். 

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியின்பின்னர் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான Cold war என்றழைக்கப்பட்ட மறைமுக யுத்தமானது வலுவிழந்தது. இன்றிருப்பது ஸ்டாலின், நிகிட்டாகுருசேவ், பிரஸ்நேவ் காலத்து ரஷ்ய யூனியன் அல்ல. வீழ்ந்து கிடந்த ரஷ்யாவை விளாடிமிர் புட்டின் தூக்கி நிறுத்தியிருந்தாலும் அமெரிக்காவை ரஷ்யா அண்ணார்ந்து பார்க்க வேண்டிய நிலையிலேயே உள்ளது. அதாவது, அமெரிக்காவின் இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான முதன்மை எதிரியான ரஷ்ய பேரரசையும் சோவியத் சார்பு கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் கலகலத்துபோகச் செய்தாயிற்று. இன்று உலகின் தனியொரு வல்லரசு அமெரிக்கா மட்டுமே. 

இத்தகைய பின்னணியிலேயே சீன- அமெரிக்க உறவை நாம் பார்க்க வேண்டும். ரஷ்யா விட்டுச் சென்ற இடத்தை திட்டமிட்ட ரீதியாக சீனா நிரப்பிவருகிறது. ஏறக்குறைய ஆசிய வல்லரசாக சீனா மாறி வருகிறது. அதை திட்டமிட்ட ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களை வகுத்து, நிறைவேற்றியும் வருகிறது. கொஞ்சம் தாமதமாகவே இதைப் புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, சீனாவின் உண்மையான கனவு உலக வல்லரசாகத் திகழவேண்டும் என்பதேயாகும் என்பதால் அதைத் தடுத்து நிறுத்தும் வியூகங்களை வகுத்து வருகிறது. பிராந்திய அரசியலைக் கையாள்வதன் ஊடாகவே இது சாத்தியமாகும். 

1962 இந்திய – சீன யுத்தத்தின் போது சீனாவிடம் இந்தியா  வாங்கிக் கட்டிக்கொண்டது. பஞ்சசீலக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு, இந்தியாவுக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டிருந்த சீனப் பிரதமர் சூ என் லாய், திரும்பிச் செல்லும் போது கைகளை உயர்த்தி ஆட்டி, ‘இந்தி சீனி பாய்பாய்’ எனச் சொல்லிச் சென்றதை நம்பி வாளாவிருந்து விட்டார். இந்திய – சீன எல்லையோரமாக சீனா படையெடுத்தபோது எந்தவித முன்னாயத்தமுமின்றி இருந்த இந்தியப்படைகள் புறமுதுகு காட்டி ஓட வேண்டியதாயிற்று. இச் சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக வீற்றிருந்த ஜோன் கென்னடி இந்தியாவுக்கு அவசர அவசரமாக ஆயுதங்களை வழங்கினார். தன் முழுமையான ஆதரவை இந்தியாவுக்குத் தெரிவித்தார். இது சீனப் படைகளின் முன்னேற்றத்தைத்தடுத்தது. அருணாசலப்பிரதேசம் காப்பாற்றப்பட்டது. பின்னர் இந்தியா, ரஷ்ய சார்பு நிலைப்பாட்டை இந்திரா காந்தி காலத்தில் எடுத்தபோது அமெரிக்கா பாகிஸ்தான் சார்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதாயிற்று. ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்ய படைகளை விரட்டுவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளில் பாகிஸ்தானையே அது தளமாகப் பயன்படுத்தியது. அமெரிக்காவின் ஆசிய பிராந்திய (இந்திய பிராந்திய) வெளியுறவு கொள்கையில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது இரட்டைக் கோபுர தாக்குதலே. அதன் பின்னர் ‘உலக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அது பாகிஸ்தானைக் கைவிட்டு அதன் பரம எதிரியான இந்தியாவுடன் நட்பு கொள்ளத் தொடங்கியது.  

இந்த இந்திய – அமெரிக்க உறவு நரேந்திர மோடியின் காலத்தில் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் சோஷலிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையே நேருஜி காலமுதல் கைகொண்டு வந்துள்ள அதேசமயம் பாரதீய ஜனதா கட்சி வலதுசாரி போக்கை அடிப்படையாகக் கொண்டதாகவே இயங்கி வருகிறது. இந்துத்வா வலதுசாரி சிந்தனை கொண்ட தத்துவமாகும். அதனாலும், பிராந்திய நெருக்கடிகள் காரணமாகவும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும் பா.ஜ.க.வை அமெரிக்காவின் பால் உந்தித் தள்ளுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு என்ற வகையில் கம்யூனிசம் அதன் எதிரி. மாவோ சேதுங் காலத்து கம்யூனிச சீனாவும் அமெரிக்காவுக்கு சவாலாகவே இருந்தது. ஏனெனில் மாவோ பெருமளவு உள்நாட்டு பொருளாதார பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருந்தபோதும் தன் கம்யூனிச வல்லரசு கனவை அவர் என்றும் கைவிட்டதில்லை. இக்காலப் பகுதியில்தான், (1960-_70) இலங்கைக்கு கை கொடுக்கும் இலங்கை இறப்பர் சீன அரிசி என்ற உடன்படிக்கை கைச்சாத்தானதையும், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 

அறுபதுகளில் வியட்நம் யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த வேளையில் பலத்த பொருளாதார இழப்புகளையும் அதேசமயம் உள் நாட்டில் மக்களின் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் சமாளிக்கும் வகையில் வட வியட்நாமுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் விரும்பினார். அவரது வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹென்றி கிஸிஞ்சர் அக் காலத்தில் இரகசிய பீக்கிங் (பீஜிங்) விஜயங்களை மேற்கொண்டிருந்ததும் அமெரிக்க அதிபர் நிக்சன் பீக்கிங் சென்று மாவோவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதும் எழுபதுகளில் நிகழ்ந்த அசாதாரண அரசியல் சம்பவங்களாகும். கிஸிஞ்சர் முயற்சியால் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. தெங்கு, வடக்கு வியட்நாம்கள் ஒன்றிணைந்தன. அமெரிக்கா தன் கோட்டை கொத்தளங்களுடன் வியட்நாமை விட்டு வெளியேறியது. இச் சதுரங்கத்தில் முழுமையாக வெற்றி பெற்றது சீனா மட்டுமே! 

இது தொடர்பாக பின்னாளில் எழுதுகையில், குப்பிக்கள் சிக்கிக் கிடந்த பூதத்தை அவிழ்த்து விட்டு விட்டோமோ? என்று சீனா பற்றிக் குறிப்பிட்டிருந்தார் ரிச்சர்ட் நிக்சன். அவரது சர்வதேச விவகார ஆலோசகர் ஹென்றி கிஸிஞ்சர் இன்றைக்கும் தனது 97வது வயதில் தெளிவான அரசியல் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 

சீனாவில் தலைமை மாற்றங்கள் நிகழலாம், ஆனால் சீன- கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை சிந்தனைகள் மாற்றம் காண்பதில்லை. சீனா ஆவேசத்துடன் செயற்படக்கூடிய நாடு. தன் நோக்கங்களில் விட்டுக் கொடுப்புகளை செய்வதில்லை, என்று குறிப்பிடுகிறார் கிஸிஞ்சர். இன்றைய சீன – அமெரிக்க விரிசல் உறவை இரு நாடுகளுமே சரிவரக் கையாளத்தவறினால் முதலாம் உலக யுத்தத்துக்கு முன்பிருந்த சூழலை அது ஏற்படுத்தலாம் என்றும் மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி இட்டுச் செல்லலாம் என்றும் குறிப்பிடுகிறார் கிஸிஞ்சர். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்னரேயே நிக்சன் ஒரு பொருளாதார இதழில் எழுதியிருந்த கட்டுரையில் சீனாவை, ஆசியா எதிர்நோக்கும் பெரும் சவால் எனக் குறிப்பிட்டிருந்தார். அவை அனைத்துமே, அறுபதுகள் தொடக்கம் சீனாவை அமெரிக்கா எவ்வாறெல்லாம் அளந்து வைத்திருக்கிறது. என்பதையே வெளிப்படுத்துகிறது.  

சீனா என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அன்றைய அரபு வர்த்தகர்களின் சீனாவை நோக்கிய பட்டுப் பாதையே. அதே பட்டுப்பாதையை தற்போது சீனா கடல் மார்க்கமாக அமைக்க விரும்புகிறது. சீனாவில் ஆரம்பிக்கும் இப்பாதை, ஆபிரிக்காவை சென்றடைவதாக சீனா திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. ஆபிரிக்க நாடுகள், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை இந்த வலையமைப்பில் இணைத்துக் கொள்வதும் தனது தலைமையில் இந்து சமுத்திரநாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்துவதே சீனாவின் கடல் பட்டுப்பாதையில் இறுதி நோக்கமாகும். தனது இந்து சமுத்திர கடலாதிக்கத்துக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்குமென்றும் தனக்கு நிகரான வல்லரசாகத் தன்னை உயர்த்திக் கொள்ள இதை சீனா  பாவிக்கும் என்பதும் அமெரிக்காவின் அச்சம். 

ஏற்கனவே தனது பயணத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிராத இலங்கையை இறுதி நேரத்தில் சேர்த்துக் கொண்டு அமெரிக்க வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ கொழும்பு வந்து சென்றது ஏன் என்ற கேள்விக்கு ஓரளவுக்குத் தெளிவான பதிலை வாசகர்கள் தற்போது பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறோம். 

1962 இந்தோ- சீன யுத்தத்தின் பின்னர் இன்றுவரை சீனாவை எதிரியாகவே இந்தியா கருதி வருகிறது. இந்திய சீன இராணுவத்தினர் சமீபத்தில் மோதிக் கொண்டதை இங்கே சமீபத்திய உதாரணமாகக் கொள்ளலாம். எனவே, எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்ற வகையில் இந்தியா ஊடாக தன் சீன எதிர்ப்பு வியூகங்களை வகுக்கவும் நகர்த்தவும் அமெரிக்கா விரும்புகிறது.

இந்தியாவை பிரதானமாக முன் நிறுத்தி இந்தோனேசியா, மாலை தீவுகள், ஜப்பான், அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளை உள்வாங்கிய ஒரு சீனப் பட்டுப்பாதை எதிர்ப்பு கூட்டமைப்பை இந்து சமுத்திர பிராந்தியத்தில் உருவாக்குவது அமெரிக்காவின் திட்டமாகும். மைக்கல் பொம்பியோவின் இப் பிராந்தியத்துக்கான விஜயத்தை, அமெரிக்க வியூகத்துக்கான அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்நாடுகளை எடுத்துக் கொள்ளும் போது, இந்தியா, அவுஸ்திரேலியா, மாலைதீவு மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு, அமெரிக்கா விரும்பும் வலையமைப்பில் இடம் பெறுவதில் பெரும் பிரச்சினை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவும் சரி, இந்தியா உட்பட ஏனைய நாடுகளும் சரி பிரச்சினைக்குரி நாடாகப் பார்ப்பது இலங்கையைத்தான். ஏனெனில் சீனா இலங்கையிலேயே அதிக முதலீடு செய்துள்ளது. நாடெங்கும் பல பொருளாதார கட்டமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு துறைமுக அபிவிருத்தி, தாமரைத் தடாகம், தாமரைக் கோபுரம் என்பன சீன முதலீட்டுடன் உருப்பெற்ற திட்டங்கள் பல. இலங்கைக்கு கடன் வழங்க என்றைக்குமே சீனா பின் நின்றதுமில்லை. எனவே கடல் பட்டுப்பாதையின் ஒரு முனையமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் விளங்கும் என்பது இந்திய அச்சம். அதுபோலவே கொழும்பு துறைமுக நகரம். எனவே அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் சீன நகர்வுகளை உன்னிப்பாகவும் கவலையுடனும் அவதானித்து வருகின்றன என்று கொள்ள முடியும். 

ஒரு நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் மற்றொரு நாட்டின் முக்கியமான இராஜதந்திரி அந் நாட்டுத்தலைவருடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம். அப்பேச்சுவார்த்தை கடுமையான தொனியில் கூட நிகழலாம். ஆனால் பின்னர் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த இராஜாதந்திரி என்ன நடந்தது என்பதை விரிவாகப் பேசாமல் மேம்போக்கான பார்வையுடன் சமாளிக்கும் வகையில் உரையாடிச் செல்வதே வழமை. ஆனால் மைக் பொம்பியோ மென்மையான புன்னகையை உதிர்த்தபடியே உஷ்மான வார்த்தைகளை பேசிவிட்டுப் போனார். இலங்கை விவகாரங்களில் சீனா தலையீடு செய்கிறது என்று நிலமார்க்கமாக மட்டுமன்றி கடல் மார்க்கமாகவும் தன் ஆதிக்கத்தை இந்து சமுத்திரத்தில் விஸ்தரிக்க முனைவதாகவும் குறிப்பிட்டதோடு சீன அணுகுமுறையையும் அமெரிக்க அணுகுமுறையையும் ஒப்பிட்டும் பேசினார். இறைமையும் சுதந்திரமும் கொண்ட வளர்ச்சி அடையும் நாடாக இலங்கை விளங்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் ஆனால் சீனாவின் நோக்கம் வேறு வகையானது என்றார் பொம்பியோ. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஒரு உயர்மட்ட வெளிநாட்டு இராஜாதந்திரி வெளியரங்கமாக பேசும் போது இன்னொரு நாட்டை குற்றம் சாட்டிப் பேசியது இதுவே முதல் தடவையாக நிகழ்ந்திருக்க முடியும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் அதிகார, பொருளாதார மற்றும் பிராந்திய செல்வாக்கு ஆகிய போட்டா போட்டிக்கு இலங்கை எவ்வாறான போக்கைக் கடைபிடிக்கவுள்ளது என்பது எமக்கு முக்கியம். அமெரிக்கா அமைக்கவிரும்பும் கூட்டமைப்பில் இலங்கையும் இணைய வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாக இருக்கலாம். நட்பு நாடான சீனா அதை விரும்பாது. பொம்பியோ நாட்டைவிட்டு வெளியேறிய சமயத்திலேயே இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் எதிர்வினையாற்றி இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். முடிச்சுகள் உள்ளன. அவை  அவிழ்க்கப்பட வேண்டும். எப்படி என்பதே கேள்வி முள்ளில் விழுந்த சேலையை சேதமில்லாமல் எடுக்கத்தானே வேண்டும்! 

அருள் சத்தியநாதன் 

Comments