கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே தேவை | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே தேவை

இலங்கையில் இரண்டாவது அலையாகத் தோற்றம் பெற்றுள்ள கொவிட் 19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணம் உட்பட நாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. மக்களின் அன்றாட வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு நாளை (09 ஆம் திகதி) திங்கட்கிழமை முதல் இதனை நீக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்தின் சில பொலிஸ் பிரிவுகளிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியாகொட பொலிஸ் பிரிவிலும் கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான ஊரடங்கு தற்போது அமுலில் இருக்கின்றது. இந்த ஊரடங்கை நீக்குவது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.  

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் இரண்டாம் அலையாகத் தோற்றம் பெற்றுள்ள இத்தொற்று, பேலியாகொடை மீன் சந்தை ஊடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் இனம்காணப்படும் நிலையை அடைந்திருக்கின்றது. மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய பிரதேசங்களில் இத்தொற்று பதிவாகத் தொடங்கியதும் அப்பொலிஸ் பிரிவுகள் அடங்கலாக சில பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இருந்தும் இம்மாவட்டத்திலுள்ள வேறு சில பிரதேசங்களிலும் இத்தொற்று பதிவாக ஆரம்பித்தது. அதனால் அப்பிரதேசங்களுக்கும் இந்த ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டதோடு ஒக்டோபர் 22 ஆம் திகதி முதல் கம்பஹா மாவட்டம் அடங்கலாக முழு மேல் மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலுள்ள சில பொலிஸ் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.  

மக்களின் நடமாட்டத்தையும் போக்குவரத்தையும் மட்டுப்படுத்தி இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது. என்றாலும்  தொடர்ந்தும் ஊடரங்கு முன்னெடுக்கப்படுமாயின் மக்களின் அன்றாட வாழ்வாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் மாத்திரமல்லாமல் இந்நாட்டு எதிர்கால சந்ததியினரின் கல்வி நடவடிக்கைகளும் கூட பாதிக்கப்படும். அதுவே மருத்துவர்கள் உள்ளிட்ட துறைசார் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இது ஆளுக்காள் தொற்றிப் பரவும் ஒரு வைரஸாகும்.  

இந்தப் பின்னணியில் தான் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கி மக்களின் உச்சபட்ச பங்களிப்போடு இத்தொற்றின் பரவுதல் தொடரை முறித்து இதனைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகின்றது. ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இத்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். அதுவே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும். அதாவது மக்களின் அன்றாட வாழ்வாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படாத வகையில் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதன் நிமித்தம் இத்தொற்றைத் தவிர்த்துக்கொள்ளத் தேவையான சுகாதார வழிகாட்டல்களும் அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று தொடர்பிலான சந்தேகங்கள் தொடர்பில் தொலைபேசி ஊடாகத்  தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளவென 24 மணி நேரமும் செயற்படும் 1999 என்ற தொலைபேசி இலக்கத்தை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது. எவருக்காவது இந்நோய்க்கான ஏதாவது  அறிகுறிகள் தென்படுமாயின் வைத்தியசாலையில் சிகிச்சை பெறச்செல்ல முன்னர் 0117966366 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியுமென்று சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்திருக்கின்றார். இத்தொற்று தொடர்பில் பி.சி.ஆர் பரிசோதனை ஏற்பாடுகளும் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க வைத்தியசாலைகளும் தயார்படுத்தப்பட்டு சிறப்பாக செயற்படுகின்றன. அதாவது இத்தொற்றை வெற்றிகரமாக முறியடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதேவேளை இத்தொற்றக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை வீடுகளில் சுய  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் நாடெங்கிலும் தற்போது 31,457 குடும்பங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 13,911 குடும்பங்களைச் சேர்ந்த  40,676 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இவ்வாறு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பொறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கப்படுகின்றன. ஊரடங்கு பிரதேசங்களிலுள்ள ஏனையவர்களுக்கு ஐயாயிரம் ரூபா  வழங்கப்பட்டுள்ளது.  

மேலும் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் நாட்டிலுள்ள ஆடைத்தொழிற்துறை, போக்குவரத்து, வாடகைப் போக்குவரத்து, வருமானம் ஈட்டும் சேவைகள், அரச அலுவலங்கள், தனியார் சேவைகள், பல்பொருள் அங்காடிகள். கடைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், ஆடை விற்பனை நிலையங்கள், விவசாயம், பொருளாதார மத்திய நிலையங்கள், பேக்கரி, வீதியோர விற்பனைகூடங்கள், நடமாடும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட 55 துறைகள் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளையும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர நாயகம் நேற்றுமுன்தினம் அறிவித்திருக்கின்றார். சமூக இடை வெளியைப் பேணுதலும் ஒன்றரை மீற்றர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறு இத்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உச்சபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. அதனால் தற்போதைய சூழலில் சுகாதார துறையினரதும் பாதுகாப்பு தரப்பினரதும் வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் மக்கள் உச்சளவில் கடைப்பிடித்து முன்னெச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பாடுவார்களாயின் ஊரடங்கு இன்றியே இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் மற்றும் முதியோர் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். அதனால்தான் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தற்போதைய சூழலில் மக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்தியுள்ளது. 

ஏனெனில் இத்தொற்றைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கோ, தவிர்த்துக் கொள்வதற்கோ இற்றைவரையும் தடுப்பு மருந்துகளோ சிகிச்சை முறைகளோ புழக்கத்திற்கு வரவில்லை. அதனால் இத்தொற்றின் பரவுதலைத் தவிர்ப்பதற்காக சுகாதார வழிகாட்டல்கள் தான் பெரிதும் உதவக்கூடியனவாக உள்ளன. அதாவது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை ஒவ்வொருவரும் சிறந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது இதன் பரவுதல் தொடரை முறித்து விடலாம். 

இருந்தும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் சூழலிலும் முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டின் பேரில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'இவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடுக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, 'கொவிட் 19 தொற்று தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' எனவும் கூறியுள்ளார். இது கொவிட் 19 தொற்று தொடர்பில் நிலவும் அசமந்தப்போக்கினதும், அசிரத்தை, கவனயீனத்தினதும் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. 

இவ்வாறான நிலையில் தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழனன்று கூடிய கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயணிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் கொவிட் 19 ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாகக் கண்காணிப்பதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு 'நாட்டை முடக்காது சுய ஒழுக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்' என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார். இதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

அதன் காரணத்தினால் தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எதுவொன்றுக்கும் வீட்டுக்கு வெளியே செல்வதை ஒவ்வொருவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிந்து கொள்ளவும், ஒன்றரை மீற்றர் சமூக இடைவெளியை பேணிக்கொள்ளவும், அவ்வப்போது கைகளை சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ளவும் தவறக்கூடாது. அத்தோடு கொவிட் 19 தொற்றின் பரவுதலைத் தவிர்ப்பதற்கான ஏனைய அடிப்படை சுகாதாரப் பழக்கங்களையும் உச்சளவில் பேணவும் வேண்டும்.  

உலகில் சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லாத் துறைகளுக்கும் இத்தொற்று பாதிப்பாக விளங்கினாலும் அதன் பரவுதலுக்கு மக்கள் துணை போகாவிட்டால் இது ஒரு போதும் அச்சுறுத்தலாக இராது. அதனால் தான் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கு மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் பெரிதும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.  

ஆகவே ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பொறுப்புணர்வுடனும் அதிக சிரத்தையுடனும் முழுமையாக கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். அது இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்த உதவுவதோடு நாட்டுக்கும் மக்களுக்கும் அளிக்கப்படும் பாரிய சேவையாகவும் அமையும். 

மர்லின் மரிக்கார்   

Comments