அமெரிக்காவின் இரும்புக் கரத்தில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கும் ஊடகவியலாளர் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவின் இரும்புக் கரத்தில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கும் ஊடகவியலாளர்

- விக்கிலீக்ஸ் ஜுலியன் அசாஞ்ச்

பிரிட்டிஷ் சிறையில் உள்ள ஜுலியன் அசாஞ்ச்சை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு அமெரிக்கா விடுத்திருந்த வேண்டுகோளை கடந்த ஜனவரி 4 ஆம் திகதி பிரிட்டிஷ் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

யார் இந்த ஜுலியன் அசாஞ்ச்?

அவரை ஏன் அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும்?  

அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

அவர் என்ன குற்றம் செய்தார்?  

அசாஞ்ச் அவுஸ்திரேலியாவில் பிறந்த ஒரு கணினியைக் கையாள்வதில் நிபுணர். கில்லாடி என்றும் சொல்லலாம். விக்கிலீக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 2006ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய சர்வதேச மற்றும் இலாபம் பெறாத அமைப்புதான் அது.  

49 வயதான அசாஞ்ச் இந்த அமைப்பின் வெளியீட்டாளரும் ஆசிரியருமாவார். 2010 இல் இந்த அமைப்பு ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக் தொடர்பான அமெரிக்க, இராணுவ ரகசியங்களை வெளியிட்டு பகிரங்கப்படுத்தியது. அதன் பின்னரே அசாஞ்ச் வெளிச்சத்துக்கு வந்தார்.  

அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியான செல்சே மன்னிங் என்றவரே இந்த இராணுவ ரகசியங்கள் பற்றிய தகவல்களை அசாஞ்சேவுக்கு வழங்கியிருந்தார். இதற்காக 2013 இல் கைது செய்யப்பட்ட செல்சே மன்னிங் 1917ஆம் ஆண்டின் உளவு பார்த்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 37 வருட சிறைத் தண்டனைக்கு உள்ளானார். எனினும் 2017 இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவி விலகுவதற்கு முன்னர் மன்னிங் மீதான 37 வருட சிறைத்தண்டனை குறைக்கப்பட்டது.  

அமெரிக்க தனிநபர்கள் அல்லது அமைப்புகள் எதுவும் அமெரிக்காவின் எதிரிகளுக்கு அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் எதனையும் வழங்குவதை தடுக்கும் வகையிலேயே இந்த உளவு பார்த்தல் சட்டம் உருவாக்கப்பட்டது.  

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியது என்ன?  

அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று 2010 ஏப்ரலில் ஈராக்கில் ேராய்ட்டர் செய்திச் சேவையின் நிருபர்கள் இருவர் உள்ளிட்ட 12 பேர் மீது தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட 39 நிமிட விடியோ படத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. செல்சே மன்னிங் மூலம் விக்கிலீக்ஸ் ஊடாக கசிந்த இந்த வீடியோவுக்கு உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் இடம்பெற்ற அமெரிக்க பிரசன்னம் தொடர்பான விவாதமும் சூடுபிடிக்கத் தொடங்கியது.  

அதேநேரம், 2010 ஜுலையில் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் ஏனைய பல்வேறு ஊடகங்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவ ஆவணங்களை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கன் குடிமக்களின் மரணங்கள், அமெரிக்க விமானத் தாக்குதல்கள், ஆப்கானிஸ்தானில் அல்- கைதாவின் பங்கு, ஆப்கானிஸ்தான் தலைவர்களுக்கு உதவும் நாடுகள் மற்றும் தலிபான் அமைப்பு ஆகியவை தொடர்பாக அதுவரை வெளியிடப்படாத தகவல்கள் இந்த ஆவணங்களில் அடங்கியிருந்தன.  

இத்துடன் ஈராக் யுத்தம் தொடர்பான 3,91,832 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அமெரிக்க இராணுவ சரித்திரத்தில் பாரிய அளவிலான குடிமக்கள் மரணங்கள் பற்றிய தனியொரு தகவல் தொகுப்பாக இந்த ஆவணங்கள் அமைந்தன.  

2010 நவம்பரில் அமெரிக்க ராஜதந்திர சேவைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இது கேபிள்கேட் ஊழல் என்று பொதுவாக அறியப்படுகிறது. மொத்தம் 2,50,000க்கு மேற்பட்ட ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன. இவை 1996 முதல் 2010 பெப்ரவரி வரையிலானவை. உலகளாவிய ரீதியில் அமைந்துள்ள 270 அமெரிக்க தூதரகங்கள் மற்றும் உதவித் தூதர் அலுவலகங்களின் பகுப்பாய்வு மற்றும் உள்ளக செயற்பாடு தொடர்பாக இந்த ஆவணங்கள் தகவல் தந்திருந்தன.  

இதனையடுத்து அசாஞ்ச் கைது செய்யப்பட்டார். இராணுவ ஆவணங்களை கணினி மூலமாக வலிந்து இராணுவ தகவல் தொகுப்புகளுக்குள் நுழைந்து இரகசியங்களைத் திருடி பகிரங்கப் படுத்தியதாக அமெரிக்காவின் வெர்ஜீனிய மாநில நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இராணுவ ஆவணங்களை கணினி மூலமாக வலிந்து தலையீடு செய்தமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் முன்னாள் இராணுவ அதிகாரியான செல்சே மன்னிங்குக்கு உதவியதாக கூறப்பட்டது.  

2019 மே மாதம் அசாஞ்ச் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 1917 ஆம் வருட உளவு பார்த்தல் சட்டத்தின் கீழ் 2010 இல் செல்சே மன்னிங்கிடம் இருந்து பெற்ற அமெரிக்க இராணுவ மற்றும் ராஜதந்திர ஆவணங்களை வாங்கி சேகரித்து வெளியிட்டதாக 17 குற்றச்சாட்டுகள் அவர் மீது மேலதிகமாக சுமத்தப்பட்டன. இந்த சட்டத்தின் கீழ் கைதான முதலாவது பிரசுரிப்பாளர்/வெளியீட்டாளர் இவர்தான்.  
இவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணங்களில் அமெரிக்காவின் குவான்டனாமோ பே சிறையில் இருந்த ஈராக்கிய கைதிகளின் விபரங்களும் உள்ளடங்கியிருந்தன. 

அசாஞ்ச்சுக்கு என்ன நடக்கும்?  

பிரிட்டிஷ் நீதி மன்றத்தில் கடந்த ஜனவரி 4ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதேவேளை இந்த வழக்கு பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படலாம் என்றும் சில தரப்பினர் கூறுகின்றனர்.  

அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் உளவு பார்த்தல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவார். அந்த சட்டத்தின் கீழ் அவருக்கு 175 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது ஆகக்குறைந்த தண்டனையாக 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.  

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் நாடு கடத்தல் மிகவும் அபூர்வமாகும். 2012 இல் கணினி தொடர்பாக வலிந்து தலையீட்டை மேற்கொண்டமைக்காக கெரி மெக்கினோன் என்பவரை நாடு கடத்துமாறு பிரிட்டனிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டபோதும் அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை.  

அமெரிக்க இராணுவ தளங்கள் தொடர்பான தகவல்களை திருடியமைக்காக அந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அது நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. அதேபோல் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி பிரிட்டிஷ் பிரஜை ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவரின் மனைவியான அனா செக்கூலஸ் என்பவரை நாடு கடத்துமாறு இவ்வருட ஆரம்பத்தில் பிரிட்டன் விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்திருந்தது.  

இந்த வழக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?  

பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் தீர்ப்பை விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர்களின் ஆதரவாளர்கள் பலர் வரவேற்ற போதிலும் இந்த வழக்கு ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை என்று அவர்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  

அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால் இலவச பேச்சுரிமை மற்றும் உலகம் முழுவதும் உள்ள புலனாய்வு விசாரணையாளர்களின் செயற்பாடுகள் பாரதூரமான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் என்று உரிமை அமைப்புகள் கூறுகின்றன. அசாஞ்ச் குற்றம் சாட்டப்பட்டால அது பாரதூரமானதாக அமையும் என்று சர்வதேச மன்னிப்பு சபையும் கூறுகிறது.  

இந்நிலையில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவித்தல் உரிமைகளை பாதுகாக்கும் அமெரிக்காவின் முதலாவது திருத்தச் சட்டத்தின் கீழ் அசாஞ்ச்சுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சவாலுக்குட்படுத்தப்படலாம் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.  

2010 நவம்பரில் அசாஞ்ச் சுவீடனில் இருந்தபோது பாலியல் குற்றச்சாட்டொன்று தொடர்பாக அவர் மீது சர்வதேச பிடிவிறாந்தொன்று விடுக்கப்பட்டது. அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியமைக்காக அவரை சுவீடனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் ஒரு முயற்சியே இந்த குற்றச்சாட்டு என்று கூறிய அசாஞ்ச் 2012 இல் லண்டனில் இருந்த ஈக்வடோர் தூதரகத்தில் அடைக்கலம் கோரினார். ஈக்வடோர் அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கியது. அவர் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று ஈக்வடோர் கூறியது. அசாஞ்ச் மீதான சாட்சியங்கள் வலுவிழந்து விட்டதாகக் கூறி சுவீடன் 2019 இல் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.  

2016 அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது ஜனநாயக கட்சியின் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் சிலவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. ஆரம்ப தேர்தல் நடவடிக்கைகளின் போது ஜனநாயக கட்சியின் தேர்தல் கமிட்டி ஹிலரி கிளின்டனை விட அவரை எதிர்த்து நின்ற அதே கட்சியின் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸை ஆதரித்திருந்ததாக இந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரியவந்தது.  

2019 ஏப்ரல் 11ஆம் திகதி ஈக்வடோர் அதிகாரிகளுடன் முரண்பட்டதையடுத்து அசாஞ்ச்சின் அடைக்கலம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து பிரிட்டிஷ் பொலிஸார் லண்டனில் இருந்த ஈக்குடோர் தூதரகத்துக்குள் நுழைந்து அசாஞ்ச்சை கைது செய்தனர்.

பிணைச் சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு 50 வார சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. அவர் தற்போது பெல்மார்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை இப்போது சீராக இல்லை.  
இந்த நிலையிலேயே அவரை நாடு கடத்துமாறு அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை பிரிட்டனின் மாவட்ட நீதிபதி லனெஸா பெரய்ட்ஸர் கடந்த ஜனவரி 4 ஆம் திகதி நிராகரித்திருந்தார். அவ்வாறு நாடு கடத்தினால் அசாஞ்ச்சின் மன உளைச்சல் மேலும் அதிகரிக்கலாம். அது அவரை தற்கொலைக்குக்கூட கொண்டு செல்லலாம் என்று நீதிபதி கூறியதுடன் அசாஞ்ச்சின் பிணை மனுவையும் நிராகரித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அமெரிக்காவுக்கு 14 நாள் அவகாசம் உள்ளது.  

ஊடக சுதந்திரத்துக்கு அமெரிக்கா பிரசித்தி பெற்ற நாடு. ஐந்து நட்சத்திர சுதந்திரம் நிலவும் நாடு என்று நம்பப்படும் அந்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டால் ஜுலியன் அசாஞ்ச் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே சுதந்திர சிந்தனையாளர்களின் வாதமாக உள்ளது.  
இங்கே ஊடக சுதந்திரம் என்றால் அதன் எல்லை எங்கே என்ற கேள்வி எழுகிறது. இராணுவம், பாதுகாப்பு, தாய்நாடு, தேசபக்தி என்ற பெயர்களில் மனித உரிமைகளை மூர்க்கத்தனமாக மீறி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருந்த நிலையை உடைத்துக் காட்டியவர் ஜுலியன் அசாஞ்ச். அவர் சாதாரண மனிதர்களுக்கு ஒரு ஹீரோ. ஆனால் நாடுகளுக்கு துரோகி. எனவே ஜுலியன் இரண்டு வகையாகப் பார்க்கப்படுகிறார். இராணுவ இரகசியம் வெளிப்படுத்தப்படக் கூடாது என்பது ஒரு பக்கம் என்றால் அப்படிச் சொல்லிச் சொல்லியே எல்லா அக்கிரமங்களையும் செய்யலாமா? என்பது மறுபக்கம்.  

ஜுலியன் செய்தது சரியா, பிழையா? நீங்கள் யார் பக்கம்.  

உங்கள் மனநிலையை பொறுத்து நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

ராம்ஜி

Comments