கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

நான் ‘கசப்பும் இனிப்பும்’ வழங்க ஆரம்பித்த சமயத்தில் ஒரு தீர்மானத்துடனேயே பேனாவைப் பிடித்தேன். 'எந்த அரசியலையும் எழுதக் கூடாது, எழுத டசன் கணக்கில் இருக்கிறார்கள், அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்' என்று.

ஆனால் பாருங்கள், பல காலங்களுக்கு முன் ‘பதினாறு வயதினிலே’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படங்களில் கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டிய ஒரு கன்னடத்துக் கண்டக்டர் கலைஞன் என் அபிமான நடிகராகி அப்புறம் நாளடைவில் அபிமானம் குறைந்து அடியோடு ரசிப்பிலிருந்து அகற்றப்பட்டு விட்ட ‘ரஜனிகாந்த்’ என்கிற சிவாஜிராவின் இன்றைய நிலை பார்த்து நானும் தமிழக அரசியல் சாக்கடையில் முக்குளித்து எழும்ப வேண்டிய ஓர் இக்கட்டு.

அந்த வகையில் ஓர் அரசியல் கசப்பை சக எழுத்தாள சகோதரர்கள் வழியிலிருந்து வித்தியாசப்பட்டு வழங்க முயல்கின்றேன்.

பொதுவாக ஒரு பிரபலமான நபரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவமொன்று நிகழ்ந்து விட்டால் ‘ஆட்டம் குளோஸ்’ என ஆரவாரப்படுவது மனித இயல்பு.

ரஜினியைக் குறித்து இப்பொழுது இந்த வார்த்தைதான் பலராலும் பலதடவை உரத்து ஒலிக்கப்படுகிறது.

நான் வேறுபடுகிறேன்! இந்த ஆசாமியின் ஆட்டம் குளோஸ் ஆகவில்லை. ஆட்டம் போட வேண்டிய சமயம் மறுபடியும் ஆட்டம் போடுவேன் அண்ணாத்தே! என்று மீண்டும் குரல் கொடுத்தே தீருவார்.

இவருக்கு முன் அரசியல் ஆட்டம் போட்ட எம்.ஜி.ஆர். ஒரு தேர்தலில் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே பிரசாரம் செய்து தமிழக சட்டசபை உறுப்பினரானது போல், இவரும் தன் போயஸ்கார்டன் மாளிகை தனியறையில் படுத்துக் கொண்டு அல்லது உட்கார்ந்தவாறே ஒலிவாங்கி கொண்டு ரசிகர்களுக்கு அறிவிப்பொன்று விடுத்தாரேயானால் வாக்குகளை அள்ளி வீச இளைஞர் பட்டாளம் இளித்துக் கொண்டு காத்து நிற்கிறது.

இன்றைய சூழ்நிலையில் இளம் வாக்காளர் பெருக்கம் தமிழகத்தில் அதிகம். அரசியல் அரிச்சுவடி அறியா மதலைகள் அவர்கள். கடந்த 04.01.2021 திங்கட்கிழமை ‘தினத் தந்தி’ செய்தியின் படி பிரபல சேலம் மாநகரத்தில் ரஜினி ரசிகர்கள் பெருங் கூட்டமாக அரசு அதிபர் அலுவலகம் முன் திரண்டு “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வா! தலைவா வா” என வானமே அதிர கூக்குரலிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மற்றும் பல நகர இளைஞர்களும் நாய்க் குரைச்சல் போடலாம்.

இதுவே நடிகருக்கு நடிக்கத் தேவைப்படும் அருமருந்து! “ரசிகக் குஞ்சுகளே! குட்டிகளே! கோடி கோடியாகக் கலாநிதி மாறன் ‘அண்ணாத்தே’ படத்திற்குக் கொட்டியிருக்கிறார். நான் உடலையும் செக் செய்து, படத்திலும் நடித்து முடிக்கணும். ஆகவே நான் காட்டுகிற கட்சிக்கு வாக்களித்து ஆன்மிக அரசியல் கொண்டு வாங்க! வருவீங்களா?” என ஜெயலலிதா பாணியில் கோரலாம் வீட்டிலிருந்தபடி!

உடனே, அந்தப் புதிய வாக்காளர்களும் (யுவ, யுவதிகள்) “கொண்டு வருவோம்” என்று கூக்குரல் இடுவார்கள்.

உச்சிக் குளிர்ந்து போகும் சுப்பர் ஸ்டார், தன் சகநண்பர் சமகாலக் கலைஞர், உலக நாயகன் கமல்ஹாஸனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிச் சின்னத்தைக் காட்டி, “வாக்குகளை வழங்குங்கள்” என்பாரா?

நடக்காது! “என் ஆன்மிகக் கடவுளர்கள் வட நாட்டுப் பக்கத்திலிருக்கிறார்கள். அவர்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன். அதற்குள் ரத்தப் பரிசோதனையையும் முடித்துக் கொள்கிறேன் என்று போடுவார் போடு!

“ஓகே.... ஓகே.... ” என்று இளம் குஞ்சுகளும் குரல் கொடுப்பார்கள்.

இவ்வாறாக, தமிழ்நாட்டில் அடுத்தடுத்த மாதங்களில் எக்கச்சக்கமான தமாஷ்கள் நடக்கவுள்ளன. இதற்கிடையில் படுவேகமாக தேர்தல் சமயத்தில் அவரது ‘அண்ணாத்தே’ திரையரங்குகளில் தோன்றி அவரும் மறைமுகமாக சுப்பர் ஸ்டாரின் சாணக்கியங்களை முன்னெடுக்கலாம்!

ஆக எதிர்வரும் மாதங்களில் கொரோனா கொடூரங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு காணப் போகும் தேர்தல், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் திரைப்படமாகவே அமையும்.

இன்றைய கசப்பில் கமலைத் தவிர்த்திருக்கிறேன். தனியாக இன்னுமொரு சமயம் வழங்கப்படும்.

எவ்வாறாயினும் “அரசியலிலிருந்து ஓய்வு, ஆட்சி நடத்தி ஊழல் களையப் போகிறேன்” என எவர் சொன்னாலும் கணக்கில் எடுக்க மாட்டேன்.

கசப்பு 02

படத்தில் பொலிஸ் தொப்பியுடன் காணப்படுகிறவர் ஒரு நடிகையன்று. நல்லதொரு பொறுப்பான குடும்பப் பெண். ஆனாலும் அவர் உயர் பதவியிலிருக்கும் பொலிஸ் அதிகாரி. இவர் விசித்திரமான கின்னஸ் சாதனை ஒன்று புரிந்திருப்பது போல் என் கணிப்பு.

அவரது இருபதாண்டு சேவைக் காலத்தில் நாற்பது தடவை இடமாற்றம் பெற்று இரும்பு போல் வளையாமல் தன் நடவடிக்கையில் முனைப்பாக இருக்கிறார். இந்தளவுக்கு இவர் இடமாற்றங்கள் பெற இலஞ்சங்கள் பெற்றாரா? முறையற்ற சலுகைகள் வழங்கினாரா? நிரபராதிகளைத் தண்டித்தாரா?

இவையெல்லாம் ஒன்றுமில்லை! செய்த மாபெரும் தவறுகளில் சிலவற்றின் பட்டியல் இவை:

* இப்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவாகிய ஜெயலலிதா தோழிக்கு பிரத்தியேக வி.ஐ.பி. சலுகைகள் வழங்க இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற எத்தனித்த ஓர் உயர் பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைகளை வெளிச்சமிட முயன்ற போது உடனடியாக இடமாற்றம்.

* இடமாற்றம் பெற்ற இடத்தில் இன்னொரு அதிகாரியின் ஊழலை வெளிக் கொணர்ந்த பொழுது அங்கிருந்து இடமாற்றம்!

* உமா பாரதி என்ற இந்திய அரசின் அமைச்சர், சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் (பெருநாள் தொழுகை வளாகம்) கொடி ஏற்ற முயன்ற போது அவரைத் துணிந்து கைது செய்தார். உடனே இடமாற்றம்!

இதேபோல் இன்னொரு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை (எம்.எல்.ஏ) கைதுசெய்து சிறையில் அடைக்க, தொடர்ந்தது இடமாற்றம்!

இப்படியே ஒரு நேர்மையான கடமை தவறா ஒரு சேவையாளரது (அதுவும் பெண்) பதவி இடங்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதித்திருப்பது : “என் பணிக் காலத்தை விட இரண்டு மடங்கு எனக்கு பணி இடமாற்றம் செய்திருக்கிறார்கள்! உண்மைகளை வெளிச்சமிட்டு குற்றமிழைப்பவர்களை மக்கள் முன் அடையாளப்படுத்துவதால் இந்த இடமாற்றங்கள் அதனாலென்ன தொடரும் என் தனிவழிப் பணி”

தற்சமயம் இந்த ரூபா ஐ.பி.எஸ். தண்ணீர் இல்லாக் காடொன்றுக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்! ஆம் பெயருக்கேற்றவாறுஒரு ரூபவதிதான்! அவர் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் தான்!

இனிப்பு

2021 புத்தாண்டு பிறந்த நாளன்றே பிரமாதமான இனிப்பை வாழ்த்துக்களுடன் வழங்கினார் ஒரு முக்கியமானவர்.

“உங்களுக்கு மட்டுமே இப்போதைக்கு பிரத்தியேகமாக இந்த இனிப்புச் செய்தி! உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம்” என்றும் தெரிவித்தார்.

அவர், இனிய இளைய தலைமுறைக் கலாநிதி, கலைக் குடும்பத்து சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ்!

அரசாங்கம் சிங்கள – தமிழ் நாடக அபிவிருத்திக்காக அமைத்துள்ள "டவர் மண்டப அரங்க மன்றம்" தமிழ்ப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அவர்!

அவர் வழங்கிய இனிப்பு தித்திப்பு, இந்நாட்டு சிங்கள – தமிழ்க் கலைஞர்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு இரு காப்புறுதித் திட்டங்கள்! ஒன்று, விபத்துகளுக்கானது மற்றொன்று பொதுவான அனைத்து நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு!

இலங்கை மேடைக் கலைத் துறைக் கலைஞர்கள் வரலாற்றில் முதல்தடவையாக முத்தான திட்டமிது.

இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் கலைமாமணிகள் 35 – 75 அகவைகளுக்கு உட்பட்டவர்களாக இருப்பர். என்றாலும் ஐந்து முதுபெரும் மூத்த நாடகத் துறையினருக்கும் (பவளவிழா கொண்டாடிவிட்டு மேலும் நடை பயில்வோர்) சிறப்புச் செய்யும் வகையில் அவர்களுக்கும் காப்புறுதி!

ஆக 50க்கும் 55க்கும் இடைப்பட்ட ஒரு தொகைத் தமிழ்க் கலைஞர்களும், ஐந்து முதுபெரும் வித்தகர்களும் அடுத்தடுத்த வாரங்களில் காப்புறுதி அங்கீகார மடல்களையும் அடையாள அட்டைகளையும் பெறவுள்ளனர்.

இத்திட்டங்களின் பிதாமகர் யார் என்று அறிந்தால் இன்ப அதிர்ச்சி! ஆரம்ப காலத்தில் ஒரு மேடைக் கலைஞராகவும் பின் திரைப்பட நட்சத்திரமாகவும் துலங்கி அரசியலில் பிரகாசிக்கும் பிரதமர் மகிந்த ராசபக்ச! அன்னவர், ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச தலைமையில் இயங்கி தன் பிரதிநிதியாக மூத்த சிங்கள நாடகக் கலைஞர் 'ஹிட்லர்' புகழ் டக்ளஸ் சிறிவர்தனவைத் தேர்ந்து பணிப்பாளர் நாயகப் பதவியில் அமர்த்தி காரிய சாதனை!

அவரோ, இந்தியப் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் அரங்கக்கலை பயின்று, கலாநிதியான இளவல் சண்முக சர்மா ஜெயப்பிரகாசுக்குப் பொறுப்பு கொடுத்து இந்தக் காப்புறுதித் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றப் பணிப்பு!

உலகை ஆட்டுவிக்கும் ஒரு கிருமியின் அட்டகாசத்திற்கு மத்தியில் மன உளைச்சல்களைத் தீர்க்கும் ஒரு மாமருந்தாக 'கலைஞர் நல் வாழ்வுக் காப்புறுதி' நடைமுறைப்படுத்தப்பட திட்டமிட்ட ஆட்சியாளர்களுக்கும் செயல்படுத்துபவர்களுக்கும் கலைஞர்கள் நன்றிக் கடன்பட்டவர்கள்.

முக்கிய அடிக்குறிப்பு : இந்த நற்பணி நல்லபடியாக நிறைவேற உழைக்கும் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் சிறிவர்தன, இன்னும் இரு மாதங்கள் மட்டுமே சேவையில் நீடிக்கும் சாத்தியக் கூறுகள். அவரது பதவிக்கு இன்னொருவர்! விண்ணப்பிக்க பத்திரிகையில் விளம்பரம்! கடவுளே! இதென்ன கோலம்

Comments