வருமானமாக ரூ.36.98 பில்லியனை பதிவு செய்தது செலிங்கோ லைஃப் | தினகரன் வாரமஞ்சரி

வருமானமாக ரூ.36.98 பில்லியனை பதிவு செய்தது செலிங்கோ லைஃப்

நிதியாண்டு 2020க்கான திரட்டிய வருமானமாக 36.98 பில்லியன் ரூபாயை அடைந்துள்ள செலிங்கோ லைஃப் நிறுவனம், கடும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் வணிகத்தின் அளவைப் பெருக்கவும் முதலீட்டு வருமானங்களை அதிகரிக்கவும் தாம் கொண்டுள்ள திறனை வெளிப்படுத்தியுள்ளது.

15.2 சதவீதம் என்ற இந்த வருமான வளர்ச்சியானது, டிசெம்பர் 31, 2020 அன்று முடிவடைந்த 12 மாதங்களில் 22.07 பில்லியன் ரூபாயாக அமைந்த மொத்த எழுதப்பட்ட காப்புறுதி வருமானம், 14.9 பில்லியன் ரூபாயாக அமைந்த முதலீடும் ஏனைய வருமானமும் ஆகியவற்றால் சாத்தியமானது என, ஆயுள் காப்புறுதியின் முன்னிலை நிறுவனமான செலிங்கோ லைஃப் வெளிப்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது செலிங்கோ லைஃப் வெளிப்படுத்திய மொத்தக் காப்புறுதி வருமானமானது 17.9 சதவீத அதிகரிப்பையும், முதலீடும் ஏனைய வருமானமும் வெளிப்படுத்திய அதிகரிப்பு 11.3 சதவீதமாகவும் காணப்பட்டது.

ஆயுள் காப்புறுதி வணிகத்தில் செலிங்கோ லைஃப் வெளிப்படுத்திய வளர்ச்சியின் காரணமாக, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் சந்தை முதலிடத்தை 17ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் தக்கவைத்துக் கொண்டது.

மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டில் நிகரக் கோரிக்கைகளாகவும் மற்றும் சலுகைகளாகவும் 12.2 பில்லியன் ரூபாயை தனது வாடிக்கையாளர்களுக்கு செலிங்கோ லைஃப் செலுத்தியிருந்தது.

முன்னைய ஆண்டோடு ஒப்பிடும்போது, இது 15.7 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியது. அத்தோடு, 9.42 பில்லியன் ரூபாயைத் தனது ஆயுள் நிதியத்துக்கு அந்நிறுவனம் மாற்றியதோடு, இதன்மூலமாக டிசெம்பர் 31, 2020 அன்று ஆயுள் நிதியத்தை 106.74 பில்லியன் ரூபாயாக விரிவுபடுத்தியது. இது, 10.94 சதவீத வளர்ச்சியாகும்.

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் மொத்தச் சொத்துகள் மாதாந்தம் 1.4 பில்லியன் ரூபாய் என்ற சராசரியில், மொத்தமாக ஆண்டில் 17.6 பில்லியன் ரூபாயால் அதிகரித்து, 150 பில்லியன் ரூபாய் என்ற மைல்கல்லை ஆண்டின் இறுதியில் அடைந்திருந்தது.

அதேநேரத்தில் நிறுவனத்தின் முதலீட்டு நிதி இந்த 12 மாதங்களில் 14.36 சதவீதத்தால் அதிகரித்து, டிசெம்பர் 31, 2020 அன்று 133.7 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது.

Comments