பெருந்தோட்டக் கட்டமைப்பின் பிடியில் இருந்து விடுபட்டாக வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டக் கட்டமைப்பின் பிடியில் இருந்து விடுபட்டாக வேண்டும்!

'பொது நிர்வாக செயற்பாடுகளுக்குக் கீழ் பெருந்தோட்ட மக்கள் முற்றுமுழுதாக  உள்வாங்கப்பட்டால் மட்டுமே தமது  அபிலாஷைகளைப் பெறக்கூடியதாக இருக்கும்.  இம்மாற்றம் ஏற்படாத பட்சத்தில் பிற சமூகத்திடம் இருந்து  ஒப்பீட்டளவில்  மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம்  ஏற்படும்' 'தோட்டம் - கிராமங்களுக்கு இடையிலான ஒட்டுறவின்மை தோட்டக் குடியிருப்புகள்  சாதீய ரீதியில் பகிரப்பட்டமை கூட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளேயாகும்.  பெருந்தோட்ட மக்களின் சகல தேவைகளும் தோட்ட நிர்வாகங்கங்களாலேயே  நிறைவேற்றப்பட்டன. தேவைகளே அவைகளை   தீர்மானித்தன. தேவையானவற்றை தோட்ட  நிர்வாகங்களே வழங்கும். அவைகளால் மட்டுமே தம்மை பராமரிக்க முடியும் என்ற  நம்பிக்கை விதைக்கப்பட்டு அமோகமாக அறுவடையும் பெறப்பட்டது'

சம்பள நிர்ணய சபைக்கூடாக தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இது எவ்வளவு காலத்துக்கு தொடரும்? எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பு எவ்வாறு நிகழும் என்பதை ஊகிக்க முடியாதுள்ளது. 
மலையக தொழிற்சங்கங்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் இடையிலான முரண்பாட்டினை மேலும் முறுக்கி விடவும் சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் உதவியுள்ளது. இதன்மூலம் கூட்டு ஒப்பந்தம் சவாலுக்கு உட்படுத்தப்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் தமது முடிவை கம்பனித் தரப்பு மீள் பரிசீலனை செய்யுமா? எனினும் கம்பனிகள் தொழிற்சங்கங்களோடு இவ்விடயத்தில் இணங்கிப் போகலாம் எனும் எதிர்வு கூறல்களும் இல்லாமல் இல்லை. 

எது எப்படியோ பெருந்தோட்டக் கட்டமைப்புக்கூடாக கம்பனி தரப்பின் பிடி கைநழுவ ஆரம்பிக்குமாயின் அது நல்ல சகுணமே என்று கருதுவோரும் உளர். எனினும் பெருந்தோட்டக் கட்டமைப்பின் கிடுக்குப்பிடி, அதற்கு இரையாகிப் போகும் தொழிற்சங்கங்களின் பலவீனம் இரண்டுமே நான்கு தலைமுறைகளை முடக்கிப் போடும் சங்கதிகளாக உள்ளன. 

இதன் வளர்முகமும் இதனால் தளர்வடைந்து போயுள்ள ஒரு சமூகம் எப்படி வழி நடத்தப்பட்டது என்பது பற்றிய தேடல் இது... 

மலையக சமூகம் இன்று பின்னடைவு கண்டிருப்பது ஒன்றும் புதிய தகவலல்ல. அயல் நாட்டு உள்நாட்டு சமூக பரிமாணங்களோடு ஒப்பீடு செய்யும்போது இந்த யதார்த்த நிலைமை தெளிவாகப் புரியும். சமூக ரீதியிலான ஆய்வுகளை உள்வாங்கிக் கொண்டு ஏற்ற இறக்கங்களை இனங்கண்டு அதற்கேற்யுடையதான  சமூக அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் முதன்மைப்படுத்தாமை மலையகத் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளாகும். ஏனெனில் அன்றாட பிரச்சினைகளுக்குத்  தீர்வுகாணும் வகையில் தொழிற்சங்க அரசியல் முன்னெடுக்கப்பட்டமையே இதற்கு அடிப்படையாக அமைகின்றது. 

இலங்கையைப் பொறுத்தவரை பெருந்தோட்டத் தொழிலாளர்களது சமூகநலன் பாதுகாப்பு என்பது ஆரம்ப காலந்தொட்டே தொழிற் சட்டத்துக்கு கீழேயே இருந்து வருகின்றது. இதனை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு பெருந்தோட்ட முகாமைத்துவத்திடம் உள்ளது. ஆனால் பெருந்தோட்ட முகாமைத்துவம் தோட்டத் தொழிலாளரின் நலனைவிட தமது ஆதாயத்தில் மட்டுமே அக்கறை காட்டி இயங்குவதால் தோட்ட மக்களுக்கான சேவையை மிக அடிமட்ட ரீதியிலேயே மேற்கொண்டு வருகின்றது. பெருந்தோட்ட முறைமைகளுக்கான ஆட்சேர்ப்பு என்பது இப்படித்தான் ஆரம்பித்தது. 

இலங்கை போன்ற நாடுகளில் பெருந்தோட்ட முறைமை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவின் சில இடங்களிலும் கரீபியன் தீவுகளிலும் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் குறிப்பு. ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கி கப்பல் மூலமாக இந்நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டதே வரலாறு. இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் அடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்பட்டார்கள். பிற்பட்ட காலத்தில் அடிமை நிலை வர்த்தகத்துக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டு அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. இதனாலேயே ஆங்கிலேய அரசாங்கம் அண்டை நாடான இந்தியாவிலிருந்து ஆட்களை திரட்ட வேண்டி ஏற்பட்டது. ஏனெனில் இலங்கையில் பெருந்தோட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது இத்தோட்டங்கள் அடிமை தொழிலாளர்களை நம்பியிருக்கவில்லை என்பர் வரலாற்றாய்வாளர்கள்.  ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இவர்கள் உள்வாங்கப்பட்டனர்.

இந்த ஒப்பந்தமானது ஐந்தாண்டு வரையறையைக் கொண்டிருந்தது. கங்காணிமாரின் பொறுப்பில் வந்தவர்களும் இவர்களுக்குள் அடங்கினார்கள். குறிப்பிட்ட காலம் பெருந்தோட்டங்களில் வேலை செய்த பின்னர் மீண்டும் தாய்நாடு திரும்பலாம் என்ற அடிப்படையிலேயே இவர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டார்கள். ஆனால் இவ்வாறு வந்தவர்கள் பிற்காலத்தில் தாம் குடியேறிய புதிய நாடுகளிலேயே வாழ தலைப்பட்டமை ஒரு திருப்பமாக அமைந்தது. இதனால் இலங்கை போன்ற நாடுகளில் இது சமூக, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கவே செய்தது. தவிர புதிதாக ஒரு தேசிய இனமாக இவர்களை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் தோற்றுவித்தது.  ஆரம்பக்காலத்தில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தோட்டங்களில் இருந்து மாறி வேறு தோட்டங்களுக்கோ, வேறு இடங்களுக்கோ சென்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மறுபடியும் அவர்களை அதே தோட்டத்திற்குக் கொண்டு வரலாம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. 

பெருந்தோட்ட கட்டமைப்பு ஆரம்பத்திலிருந்தே சிங்கள கிராமங்களோடு திட்டமிட்ட இடைவெளியை ஏற்படுத்தியதன் பயனை அடைந்தே வந்துள்ளது. சிங்கள கிராமத்தவர்கள் போல காணியுரிமை, வீட்டுரிமை என்ற அகவுணர்வு வந்துவிடாதபடி தொழில் ரீதியான ஒரு வாழ்விட பின்புலத்தைக் கொண்டதே மலையக சமூகம் என்று சுயவிமர்சனம் செய்து கொள்ளும்படியான ஒரு நிலைமையைத் தோற்றுவிப்பதில் பெருந்தோட்டக் கட்டமைப்பு எதிர்பார்த்த வெற்றியைத் தக்கவைத்தே வந்துள்ளது.  

தோட்டம் - கிராமங்களுக்கு இடையிலான ஒட்டுறவின்மை தோட்டக் குடியிருப்புகள் சாதீய ரீதியில் பகிரப்பட்டமை கூட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே ஆகும். பெருந்தோட்ட மக்களின் சகல தேவைகளும் தோட்ட நிர்வாகங்கங்களாலேயே நிறைவேற்றப்பட்டன. தேவைகளே அவைகளை   தீர்மானித்தன. தேவையானவற்றை தோட்ட நிர்வாகங்களே வழங்கும். அவைகளால் மட்டுமே தம்மை பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு அமோகமாக அறுவடையும் பெறப்பட்டது. ஒரு வகையில் இது எழுதப்படாத அடிமை சாசனம். 1930களில் பெருந்தோட்ட மக்களின் நிலையை அரை அடிமை நிலையென கணித்து கண்டனம் வெளியிட்டது இந்திய அரசு. ஆனால் அதிலிருந்து இம்மக்களை விடுவிக்க எதனையும் செய்யவில்லை. இதனாலேயே வெளிநாட்டு கம்பனிகள் வெளியேறிய பின்னும் சுதேசிய நிர்வாகம் அதே அடிமை நிலை போக்கிலேயே இம்மக்களை நடத்த ஆரம்பித்தது. 

பொது நிர்வாக செயற்பாடுகளுக்குக் கீழ் பெருந்தோட்ட மக்கள் முற்றுமுழுதாக உள்வாங்கப்பட்டால் மட்டுமே தமது அபிலாஷைகளைப் பெறக்கூடியதாக இருக்கும். இம்மாற்றம் ஏற்படாத பட்சத்தில் பிற சமூகத்திடம் இருந்து ஒப்பீட்டளவில் மட்டுப்படு த்தப்பட்ட வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதே பலரின் அபிப்பிராயமாகும். தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்குனர்கள் என்ற வட்டத்துக்குள் முடக்கப்பட்டால் மட்டுமே பொது நிர்வாக சேவைகள் பெருந்தோட்ட பிரதேசங்களையும் சென்றடைய முடியும். 

தேயிலைத் தோட்டத் தொழிலைக் கைவிடுவதே பெருந்தோட்டக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான மார்க்கம் என்றும் சிலர் எண்ணுகிறார்கள்.

பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு முறையே மலையக அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடுகின்றதே தவிர அத்துறைசார் தொழில் அல்ல. எனவே தான் அத்தொழிலைக் கூலித்தொழில் என்ற நிலைமையிலிருந்து விடுவித்து கெளரவமான தொழில் என்ற உணர்வை உருவாக்க வேண்டியது அவசியமானது. 

மலையகத்தில் புதிய கிராமங்கள் அமைப்பதும் ஆசிரியர் தொழில் பெற்றுக் கொடுப்பதும் அடிப்படை ரீதியிலான சமூக மாற்றத்துக்கு வழிவகுத்துவிடப் போவதில்லை. வாழ்விடவுரிமை, வேலைவாய்ப்பின்மை இரண்டும் மட்டுமே பின்னடைவுக்கான காரணங்கள் அல்ல. தோட்டத் தொழிலையும் ஆசிரியர் தொழிலையும் விட்டால் வேறு தொழில் வாய்ப்புகள் கிடையாது. பொருளாதார வளத்துக்கான ஊக்கிகள் எதுவும் காணப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் தோட்டங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்கள் மீண்டும் மலையகம் திரும்புவதற்கான வகையில் தொழில் பேட்டைகள் ஏற்படுத்தியாக வேண்டும். 

எனினும் பெருந்தோட்ட கட்டமைப்பின் இறுக்கமான கெடுபிடிகள் விடுபடும் வரையில் இது சவால்களையும் நிர்வாக ரீதியிலான சிக்கல்களையும் தோற்றுவிக்கவே செய்யும் என்பதை மறுப்பதற்கு இல்லை.   பெருந்தோட்டக் கட்டமைப்பின் பிடியில்  இருந்து விடுபட்டாக வேண்டும்!

பன். பாலா

Comments