சமுத்திர பாதுகாப்பு கொள்கை பற்றிய அவதானம் | தினகரன் வாரமஞ்சரி

சமுத்திர பாதுகாப்பு கொள்கை பற்றிய அவதானம்

கொழும்பு துறைமுகத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த  கப்பல் தீ பிடித்த சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலத்தில் இந்நாட்டு கடல் எல்லையில் நடைபெற்ற இரண்டாவது மோசமான சம்பவம் இதுவாகும். சாதாரண விபத்துக்குள்ளான கப்பல்கள் பற்றிய தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. ஆசியாவில் கடற்படை மத்திய நிலையமாக வளர்ச்சியடைய கூடிய பின்னணி இலங்கைக்கு உண்டு. துறைமுகத்தை அபிவிருத்தி செய்து கப்பல் போக்குவரத்துக்கு இடமளிப்பதோடு அதன்மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனத்தை செலுத்த வேண்டியதும் முக்கியமாகும்.

அண்மையில் நடந்த விபத்து குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அக்கப்பலில் கொண்டு வரப்பட்ட இரசாயனங்கள் கடலில் கலந்துள்ளன. மீன்கள், ஆமைகள் மாத்திரமல்ல ஆழ்கடலில் வாழும் உயிரினங்களும் இதனால் பாதிப்படைந்துள்ளன. அழிவடைந்த கொள்கலன்களில் காணப்பட்ட இரசாயன கழிவுகள் மேற்கில் மாத்திரமல்ல தென்பகுதி  கடற்கரை வரை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இடம்பெற்றுள்ள அழிவிலிருந்து மீள பத்து தொடக்கம் முப்பது வருடங்கள் தேவைப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியுள்ளது. மக்களின் வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமுத்திர பிராந்தியத்துக்கும் ஏற்பட்டுள்ள அழிவு மதிப்பிட முடியாதுள்ளது. வழக்கு தொடுத்து பெறும் நட்டஈட்டால்  மாத்திரம் திருப்தியடைந்து விட முடியாது.

கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கும் பின்னணியில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நிலைமை குறித்து  கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.  துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு கடல் விபத்துகளின் போது உடனடியாக செயற்படக்கூடிய கட்டுப்பாட்டு மத்திய நிலையமொன்று நாட்டுக்குத் தேவை. இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கு உடனடியாக சேவைகளை வழங்க முடியும். அது விசேடமான பிரிவுக்கு செய்யும் முதலீடாகும். பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்களில் குறைந்தளவு ஊழியர்களே காணப்படுவார்கள். அத்தியாவசியமானவர்களை தவிர அவசர தேவையின்போது செயல்படும் குழுவினர்கள் இல்லை. கப்பல் நிறுவனத்துக்கோ காப்புறுதி பிரிவினருக்கோ அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ள காலதாமதம் ஏற்படும்.
சமுத்திரத்தில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு அவசர நிவாரண ேசவைகளை வழங்குவது நாட்டுக்கு புதிய சந்தர்ப்பமாகும். அதற்காக அரசாங்கம் கொள்கைகளை தயாரிக்க வேண்டும். சர்வதேச தரத்திலான கட்டுப்பாடு தேவை. தனியார் துறையும் அதனை செயல்படுத்தலாம். தேவையான சந்தர்ப்பங்களில் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இணைவதற்கு சந்தர்ப்பம் உண்டு. அண்மை கால சம்பவங்களை கருத்திற் கொள்ளும் போது அக் கப்பல்களின் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளியிலிருந்து நிபுணர்களை அழைக்க நேரிட்டது. அதற்கு சில நாட்கள் எடுத்ததனால் ஏற்பட்ட இழப்புகளை குறைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமற் போனதை குறிப்பிட்டாக வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் பற்றியும்  கவனம் செலுத்துவது நல்லது. உலகில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்துகளில்  நூற்றுக்கு எண்பது சதவீதமான மசகு எண்ணெய், வாயு மற்றும் நிலக்கரி போன்றவை இந்து சமுத்திரத்தினூடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. சர்வதேச கடலில் ஐம்பது வீத கொள்கலன்கள் இந்துசமுத்திரத்தினூடாகவே கொண்டு செல்லப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கையை அண்டிய கடற்பிரதேசங்களில் பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கைளும் அதிகரித்து வருகின்றன. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை மேம்படுத்துவது அரசின் திட்டமாகும். இந்திய மற்றும் இலங்கை அரச தனியார் இணைந்த முதலீட்டுடன் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் ஒரே வரிசை ஒரே பாதை   கொள்கைபடி அமையவுள்ள சமுத்திரத்தினூடான பட்டுப்பாதை இன்னுமொரு சிக்கலான பக்கமாகும். கொழும்பு துறைமுக நகரம் எதிர்காலத்தில் சந்தடிமிக்கதாக மாறும் போது செல்வந்தர்கள் சொந்த கப்பல்களில் உல்லாசப் பயணிகளாக கொழும்பு நகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானவற்றை கருத்தில் கொள்ளும்போது கடற்படை மத்திய நிலையமாக மாத்திரமல்ல ஆசியாவிலேயே கடற்படை நிவாரண மத்திய நிலையமாகவும் உருவாக வாய்ப்புண்டு.

இலங்கை திறமையான மனித வளத்தை கொண்ட நாடு. தற்போதுள்ள தொழில்நுட்ப பின்னணியுடன் உலகில் சிறந்த நிபுணர்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு தடைகள் இல்லை. தேவையான முதலீடுகளுக்கு இடமளிக்க வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை விரைவு படுத்துவது முக்கியமாகும். ஹம்பந்தோட்டை துறைமுகம் இவ்வாறான அவசர பிரிவொன்றை பராமரிப்பதற்கு பொருத்தமான இடமாகும். துறைமுகம் மாத்திரமல்ல மத்தல விமான நிலையமும் இவ்வாறான அவசர சேவை வழங்கலுக்கு சிறப்பான இடமாகும். இவ்வாறான திட்டங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கூட கிடைக்கும். பல நிறுவனங்கள் கடற் கொள்ளைக்காரர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் சேவையை வெற்றிகரமாக நடத்திச் செல்கின்றன. அதன் அனுபவம் நாட்டுக்கு உண்டு. இவ்வாறான அம்சங்கள் குறித்து மீண்டும் சிந்திப்பது அவசியமாகும். தீப்பிடித்த கப்பல் தொடர்பாக பரஸ்பர கருத்துகளை கூறி கோஷம் எழுப்புவதற்கு பதிலாக நாட்டுக்காக முன் வைக்கக் கூடிய புதிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடாது இருப்பது ஏன்?

Comments