கசான் சர்வதேச திரைப்பட விழாவில் சிங்களப் படத்துக்கு சிறந்த நடிகர் விருது | தினகரன் வாரமஞ்சரி

கசான் சர்வதேச திரைப்பட விழாவில் சிங்களப் படத்துக்கு சிறந்த நடிகர் விருது

ரஷ்யாவின் ததாரிஸ்தான் குடியரசின் பூரண ஒத்துழைப்புடன் வருடாந்தோறும் நடைபெறும் கசான் சர்வதேச முஸ்லிம் திரைப்பட விழாவின் (kazan International Muslim Film Festival) 18வது விழா, கடந்த (11ம் திகதி) இரவு பழங்கால நகரமான கசான் நகர பிரமிட் வளாகத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. அங்கு  உலகப் பிரசித்தி பெற்ற திரைப்படங்கள் உள்ளிட்ட கடந்த இரண்டு வருடங்களில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற 10திரைப்படங்கள் திரையிடப்பட்டன. விழாவின் முக்கிய போட்டிப் பிரிவில் 'சிறந்த நடிகர்' விருது 'த நியூஸ் பேப்பர் ' திரைப்படத்தின் பிரதான பாத்திரங்களில் நடித்த சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோருக்கு வழங்கப்பட்டது.  

2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கசான் திரைப்பட விழாவில் இலங்கைத் திரைப்படமொன்று விருது வென்றது இரண்டாவது தடவையாகும். முன்னர் 2018ஆம் ஆண்டு சமீர நாஒட்டுனவின் 'மோட்டார் பைசிக்கள்' திரைப்படத்துக்கு ரஷ்ய திரைப்பட விமர்சகர் அமைப்பால் வழங்கப்படும் சுயாதீன ஜூரி விருது வழங்கப்பட்டது. ஆனால் விழாவின் பிரதான ஜூரிகளால் வழங்கப்பட்ட விருது இலங்கை திரைப்படம்  ஒன்றுக்கு  கிடைத்தது இதுவே முதல்  தடவையாகும். 'த நியூஸ் பேப்பர்' திரைப்படத்துக்கு அது கிடைத்தது முக்கிய அம்சமாகும். அதேபோன்று கசான் விழாவுக்கு அனுப்பப்பட்ட    இலங்கையின் நான்காவது திரைப்படம் 'த நியூஸ் பேப்பர்' ஆகும். அதில் 'மோட்டர் பைசிக்கள்' மற்றும் 'த நியூஸ் பேப்பர்' பிரதான போட்டிப் பிரிவின்கீழும், சஞ்சீவ புஷ்பகுமாரவின் 'தெவன விஹகுன்' (2017) மற்றும் மாலக தேவபிரியவின் 'பஹுசித்தவாதியா' (2018) என்பன போட்டிக்கு வெளியிலான பிரிவின் கீழும் விழாவில் திரையிடப்பட்டன. 

FIAPF அனுமதி பெற்ற இந்தியாவின் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டாவது சிறந்த ஆசிய திரைப்படத்துக்கான (Second Best Asian Film) விருதை பெற்றதுடன், ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலும் 'த நியூஸ்பேப்பர்' திரைப்படம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதுவரை 'த நியூஸ் பேப்பர்' திரைப்படம்   காண்பிக்கப்பட்ட அனைத்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்றோ அல்லது விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோ உள்ளமை விசேட அம்சமாகும்.

கசான் திரைப்படவிழாவில் பெற்ற விருதுடன் இதுவரை சர்வதேச விழாக்களில் 'த நியூஸ் பேப்பர் 'திரைப்படம் பெற்றுள்ள விருதுகளின் எண்ணிக்கை எட்டாகும். அமைச்சர் பந்துல குணவர்தனவால் தயாரிக்கப்பட்ட 'த நியூஸ்பேப்பர்' திரைப்படத்தை ரஷ்யாவின் கசான் திரைப்பட விழாவுக்கு யூஎல்.கே பிலிம்ஸ் தனியார் நிறுவனம் பரிந்துரைத்து ஒருங்கிணைப்பு செய்தது. 

படங்கள் கசான் திரைப்பட விழா ஏற்பாட்டு குழுவின் அழைப்பின் பேரில் 'த நியூஸ் பேப்பர்'படத்தின் தயாரிப்பாளர் பந்துல குணவர்தன விழாவில் கலந்து கொண்டு சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோருக்கான விருதினை பெற்ற காட்சி.  

Comments