ஐரோப்பாவுடன் கைகோர்ப்பதன் மூலம் இந்திய பொருளாதாரம் வலுவடையும் | தினகரன் வாரமஞ்சரி

ஐரோப்பாவுடன் கைகோர்ப்பதன் மூலம் இந்திய பொருளாதாரம் வலுவடையும்

வெளிநாடுகளுடன் இராஜதந்திர உறவுகளையும் பொருளாதாரத் தொடர்புகளையும் வளர்ப்பதில் உலகநாடுகளிலேயே தலைசிறந்த தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கணிக்கப்படுகின்றார். வெளிநாடுகளுடன் எழுகின்ற சிறுசிறு கருத்து வேற்றுமைகளைக் கூட அகற்றி, அந்நாடுகளுடன் இராஜதந்திர உறவை மீளக்கட்டியெழுப்புவதில் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த அணுகுமுறையைக் கையாளுபவராக திகழ்ந்து வருகின்றார்.

அது மாத்திரமன்றி, எல்லைப்புறத்தில் இந்தியாவுடன் நீண்டகால சர்ச்சை நிலவி வருகின்ற பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனும் நட்புறவை வளர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியனவாகும். எனினும் பிரதமர் நரேந்திர மோடியின் நட்புக்கரத்தைப் பற்றிக் கொள்வதில் அவ்விரு நாடுகளும் அக்கறை செலுத்தவில்லை. அதனால் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நட்புறவு வலுப்படுவது சாத்தியமற்ற காரியமாகவே போகின்றது.

இது ஒருபுறமிருக்க, உலகின் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மோடி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். உக்ரைன்- ரஷ்ய போர் நீண்ட காலமாகத் தொடருவதன் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்றே தரவுகள் கூறுகின்றன.

உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இந்திய பொருளாதாரம் ஸ்திரமான நிலைமையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஐரோப்பாவுக்கு மேற்கொண்ட பயணங்களின் போதும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களில் பெரிதும் அக்கறை செலுத்தினாரென்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐரோப்பிய விஜயத்தின் போது முதலில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் சென்றிருந்தார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டென்மார்க் சென்றிருந்தார்.

டென்மார்க்கில் இரண்டாவது, இந்தியா - நோர்டிக் மாநாட்டில் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியுடன் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் நட்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், கூடுதல் ஒத்துழைப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தனது விஜயத்தின் போது கூறியிருந்தார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெர்மன் சான்சலர் Olaf Scholz உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்திருந்தன. இந்தியா – ஜெர்மனி இடையேயான கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டமும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில், ஜெர்மனியின் புதிய சான்சலர் Olaf Scholz பங்கேற்றிருந்தார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு மோடி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சென்றிருந்தார். அங்கு, அவர் அந்நாட்டுப் பிரதமர் Mette Frederiksen ஐ சந்தித்தார். முதல் முறையாக டென்மார்க் சென்றிருந்த நரேந்திர மோடி, இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற வர்த்தக தொழில் அதிபர்கள் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

முன்னதாக பேர்லினுக்கான மோடியின் பயணம், பிரதமர் ஸ்கோல்சுடன் விரிவான இருதரப்பு விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக ஒத்துழைப்பைப் பொறுத்தவரை இது முக்கிய சந்திப்பாகும். இந்தியா தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு மோடியின் ஐரோப்பிய விஜயம் பெரிதும் பயனளிக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- ஜெர்மனி இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் நீண்டகால வர்த்தக உறவுகள் ஒன்றாகும். ஐரோப்பிய கண்டத்தில் 10இலட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். ஜெர்மனியிலும் கணிசமான அளவு இந்தியர்கள் உள்ளனர். ஐரோப்பாவுடனான இந்திய உறவுகளுக்கு இந்திய வம்சாவளியினர் உறுதியான பங்களிப்பு வழங்கி வருகின்றனர். எனவே தனது சமீபகால பயணத்தின் வாயிலாக ஐரோப்பாவுடனான உறவுக்கு மேலும் உரமூட்டியுள்ளார் மோடி.

பிரதமர் மோடி தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது, பாரிசில் ஜனாதிபதி மக்ரோனை சந்தித்துப் பேசினார்.

ஐரோப்பிய பிராந்தியம் பல சவால்கள் மற்றும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சமயத்தில், மோடி அங்கு விஜயம் செய்திருந்ததுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான விடயங்களில் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரை மோடியின் இப்பயணம் மிகுந்த பலன் தருமென்பதே பொருளாதார வல்லுநர்களின் நம்பிக்கையாகும். இந்தியா தனது பங்கேற்பு நிகழ்ச்சிகள் மூலம், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான தனது இலட்சியத்துக்கு முக்கிய நண்பர்களாக ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றது.

இந்த ஆண்டில் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஜெர்மனியில் இருந்து தான் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் வெளிநாட்டுத் தலைவருடனான அவரது முதல் தொலைபேசி உரையாடலும் ஜேர்மனிய அரச தலைவருடன்தான் நடைபெற்றது.

உலகப் பெருந்தொற்றான கொவிட் தாக்கம் வீழ்ச்சியடைந்ததையடுத்து, உலகில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருகின்ற மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அண்மையில், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் அவுஸ்திரேலியாவுடன், குறுகிய காலத்தில் வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியா தடையற்ற வர்த்தக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் முன்னேற்றத்தை எட்ட உறுதி பூண்டுள்ளது.

எஸ்.சாரங்கன்

Comments