அரசாங்கத்தின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ள 22 ஆவது திருத்தம்! | தினகரன் வாரமஞ்சரி

அரசாங்கத்தின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ள 22 ஆவது திருத்தம்!

அரசியலமைப்புக்கான இருபத்திரண்டாம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கும் எதிர்த்து வாக்களித்திருந்தார்.

அரசாங்கத்தின் பலத்தைப் பரிசீலிப்பதற்கான பரீட்சையாக அமையும் என இந்த வாக்கெடுப்பு எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல தரப்பினரினதும் அமோக ஆதரவுடன் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் முன்னணி, அரசாங்கத் தரப்பிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்துள்ள சுயாதீனக் குழுவினர் உள்ளிட்ட அனைவரும் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இருந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபை முதல்வர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் சிலர் உள்ளடங்கலாக 44 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கும் இடையில் ஒரு நுட்பமான சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அரசியலமைப்புத் திருத்தம் குறித்த எதிர்பார்ப்புக்களுடன் காணப்பட்டிருந்தது.

22 ஆவது திருத்தச்சட்டமூலமானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசினால் இச்சட்டத்திருத்தம் முன்வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இச்சட்டமூலம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் திருத்தத்தில் முன்மொழியப்பட்டிருந்த சில திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதைதத் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கமைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய சட்டமூலத்துக்கான திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் இணங்கியது.

இதற்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட திருத்தங்கள் நீதி அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பல இதில் எவ்வித மாற்றமும் இன்றி உள்ளடக்கப்பட்டிருப்பதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். விசேடமாக இரட்டைப் பிராஜவுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது போன்ற விடயங்கள் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நீக்கப்பட்டிருந்தாலும், 22வது திருத்தத்தின் ஊடாக மீண்டும் கொண்டுவரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கும் அப்பால் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துவது, பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பலப்படுத்துவது போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான காலப்பகுதி குறித்த கரிசனை பொதுஜன பெரமுன கட்சியினரிடையே காணப்பட்டது.

பத்தொன்பதாவது திருத்தத்தின்படி நான்கரை வருடங்களுக்குப் பின்னரே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் நான்கரை வருடங்கள் இரண்டரை வருடங்களாகக் குறைக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் காலப்பகுதி 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இரண்டரை வருடங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் விரும்பவில்லை. மீண்டும் நான்கரை வருடங்கள் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

இது மாத்திரமன்றி இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை நீக்கும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.

இருந்தாலும், குழுநிலையில் திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர் கூறியிருந்தமையால், மேற்சொன்ன விடயங்களுக்கான திருத்தங்களைக் கொண்டுவருவதில் அவர்களுக்குச் சிக்கல் காணப்பட்டது. இதனால் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கிடையில் தயக்கம் இருந்தது.

இந்தக் காரணத்தினாலேயே கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த 22 ஆவது திருத்தச்சட்டமூலம் பிற்போடப்பட்டிருந்தது.

மறுபக்கத்தில், 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் முயற்சி என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 22 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லையென்றும், அவருக்கான அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் விவாதத்தில் கலந்து கொண்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இருந்தபோதும் நாட்டின் நன்மையைக் கருத்திற்கொண்டு அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் கூறியிருந்தனர்.

ஆளும் கட்சி சார்பில் உரையாற்றியிருந்த பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் பலர், கடந்த காலங்களில் தமது வீடுகள் பல தீக்கிரையாக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டினர்.

ஐந்து வருடங்கள் சேவையாற்றுவதற்கு மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை இரண்டரை வருடங்களில் இல்லாமல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதையும் அவர்கள் கூறியிருந்தார்கள்.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு இதுவரை சுமார் 21 தடவைகள் திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் மேலும் திருத்தத்துக்க உள்ளாக்காமல் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர வேண்டியதன் தேவையைப் பல உறுப்பினர்களும் தமது உரைகளின் போது சுட்டிக்காட்டத் தவறவில்லை.

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் இரு தினங்களும் முழுநாள் விவாதம் நடைபெற்றது. குழுநிலையில் அராங்கத்தினால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 22 ஆவது திருத்தச்சட்டமூலம் என்ற பெயரை 21 ஆவது திருத்தச்சட்டமூலம் என மாற்றுவதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கமைய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் சபாநாயகரினால் கையொப்பமிடப்பட்டு சான்றுரைப்படுத்தப்பட்டதும் 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக நடைமுறைக்கு வரும்.

பி.ஹர்ஷன்

Comments