கூட்டு ஒப்பந்தத்தை மீட்டுத் தருவாரா ஜீவன்?; எதிர்பார்த்திருக்கும் பெருந்தோட்ட மக்கள் | தினகரன் வாரமஞ்சரி

கூட்டு ஒப்பந்தத்தை மீட்டுத் தருவாரா ஜீவன்?; எதிர்பார்த்திருக்கும் பெருந்தோட்ட மக்கள்

பழமொழிகள் யாவும் அநுபவப் பகிர்வுகளே ஆகும். அப்படியொரு பழமொழிதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது. இப்போது பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள விவகாரத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கின்றது. 1000 ரூபா சம்பளம் என்பது அரச சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்ட விடயம். இதற்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. இதேவேளை சம்பள நிர்ணய சபையின் பணிப்பை ஏற்று நாங்கள் நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கி வருகிறோம் என்கிறது கம்பனி தரப்பு. இதனை கடந்த நான்காம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.  

இனி என்ன கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சமாச்சாரம் என்று யோசிக்கலாம். சங்கதி இருக்கிறது. 1000 ரூபா முழுமையாக கிடைக்கிறது என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் நிலையின் சம்பள நிர்ணய சபையும் இல்லை. பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் இல்லை. அவை ஒதுங்கிக் கொள்ள, விட்டது தொல்லை என்ற ரீதியில் தோட்ட நிர்வாகங்கள் அட்டகாசம் புரிவதாக தொடர்ச்சியாகவே புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

அப்படி என்னதான் செய்கின்றன  இந்த நிர்வாகங்கள்?  

கம்பனி தரப்பு 1000 ரூபா அடிப்படைச் சம்பளமும் ச.நி.சபை 100 ரூபா கொடுப்பனவும் வழங்க வேண்டும் என்பது ஏற்பாடு. ஏற்கனவே ஒருநாள் பெயருக்கு 10-    /  18 கிலோ கொழுந்து பறிக்கப்பட்டு வந்தது. இப்போது 20 கிலோ முழுமையாக பறித்தால் மட்டுமே முழுப்பெயர் என்று செயல்படுகின்றன தோட்ட நிர்வாகங்கள். இது தவறும் பட்சத்தில் கிலோ ஒன்றுக்கு 50 ரூபா வீதமே சம்பளம் வழங்கப்படும் என்று கூறுகின்றது கம்பனி தரப்பு. இதனால் 1000 ரூபாவை முழுமையாகப் பெற முடியாது அதிருப்தியில் இருக்கின்றார்கள் தொழிலாளர்கள். 

அவ்வளவு தானா சமாச்சாரம் என்றால் அதுதான் இல்லை. வேலை நாட்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப தீர்மானிக்கின்றன நிர்வாகங்கள். இதனடிப்படையில் தினமொன்றுக்கு 700 ரூபா என்ற அளவிலேயே சம்பளம் கிடைக்கின்றது. அத்துடன் இவ்வளவு காலமும் தோட்ட நிர்வாகங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த சகலவிதமான நலன்புரி நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. செமையான தாக்கு! 
சம்பள நிர்ணய சபை சம்பளத்தை மட்டுமே தீர்மானித்தது. அதன் பின் விளைவுகள் பற்றி மலையக தொழிற்சங்கங்கள் கூட உணர்ந்திருக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களோ சம்பள அதிகரிப்போடு முன்னரைப் போலவே சமூக நலன் சார்ந்த சலுகைகளையும் பெறமுடியும் என்றே நம்பியிருந்தனர்.

ஆனால் நடப்பதோ வேறு. இதைக்கண்டும் காணாதது போல கபட நாடகம் ஆடிவந்த தொழிற்சங்கங்கள் தற்போது வழக்கு முடிந்தால் எல்லாம் வழமைபோல வந்து சேரும் என்னும் நம்பிக்கையை ஊட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 1000 ரூபா சம்பள நிர்ணயத்தோடு சகலமும் அடங்கிவிடும் என்று எதிர்பார்த்திருந்த தொழிற்சங்கங்கள் தற்போது தொழிலாளர்களுக்கு முகம்கொடுக்கத் தயங்குவதாகத் தெரிகின்றது. 

இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்பதைப் பெருந்தோட்ட மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் அவர்கள் புதிய போராட்டம் ஒன்றை துவங்கியுள்ளார்கள். என்ன போராட்டம் அது என்கிறீர்களா? கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படல் வேண்டும் என்னும் கோரிக்கைப் போராட்டம். கண்டி மடுல்கல்லை தோட்ட மக்களே இந்தப் பொதுப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். கூட்டு ஒப்பந்தத்துக்கு அப்பால் நின்று 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளமை தமக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளதாகவும் இதன் காரணமாக தோட்ட நிர்வாகங்கள் அடாவடித்தனமாகி செயற்படுவதாகவும் இவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். கூட்டு ஒப்பந்தம் இன்மையால் தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக இயங்குகின்றன. இதனால் தாம் இன்னல்களுக்கு முகம் கோடுக்க நேரிடுவதாக மக்கள் கூறுகின்றார்கள்.  

மீண்டும் கூட்டு ஒப்பந்தம் செயற்பாட்டுக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் முன்பு போல தொழிலாளர் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதே இவர்களின் போராட்டத் தொனி. இது ஆரம்பம் மட்டும்தான். முழு பெருந்தோட்டச் சமூகமும் இம் முடிவுக்கு வரலாம்.

இன்று கூட்டு ஒப்பந்தம் செயற்படவில்லை. சம்பள நிர்ணய சபை சம்பள விவகாரத்தில் தலை நுழைத்ததன் மூலம் கூட்டு ஒப்பந்த விதிகள் மீறப்பட்டு விட்டதாக காரணம் காட்டி கம்பனி தரப்பு ஒப்பந்தத்தில் இருந்தது தாம் விலகுவதாக அறிவித்திருந்தது. 

அப்படியெல்லாம் கம்பனி தரப்பு முடிவெடுக்க இடமில்லை. இந்த ஒப்பந்தம் சட்ட நுணுக்கங்களுடன் உருவாக்கம் பெற்றது. நினைத்தபடி நடக்க இயலாது என்று சப்பைக் கட்டு  கட்டப்பட்டது. 

ஏனெனில் கூட்டு ஒப்பந்தம் சம்பள விவகாரத்தை மட்டும் கையாளும் ஒன்றல்ல. தொழிலாளர்களின் சேமநலன்களை முறைப்படுத்தும் அம்சத்தையும்  கொண்டது. இன்று இவையனைத்தும் பறிபோயிருக்கும் பின்புலத்தில் மக்கள் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள். 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றே தீரவேண்டும் என்ற வெறியில் இருந்த இ.தொ.கா, கூட்டு ஒப்பந்தத்துக்கு அப்பால் நின்று அதை வாங்கித்தரவே செய்தது. ஆனால் இதன்மூலம் கூட்டு ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்தது புத்திசாலித்தனமான காரியமல்ல என்று பலரும் கருதுகின்றார்கள்.

1992களில் 402 பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டன. அப்போதே உருவாக்கம் பெற்றது தொழிலாளர்களின் வேதன நிர்ணயத்துக்கான கூட்டு ஒப்பந்தம்.

இது அமுலுக்கு வந்ததும்  இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு நன்மை விளைவிக்கும் என்று உறுதியாக நம்பினார் அமரர்  செளமியமூா்த்தி தொண்டமான். ஓப்பந்தம் வலுவானதே. ஒப்பந்த விதிகளும் கவர்ச்சிகரமானவையே. விட்டுக் கொடுப்பதன் மூலம் இணக்கப்பாடு எட்டப்படுவதையே இந்த ஒப்பந்தம் வரவேற்றது. தொழிலாளர் சம்பந்தப்பட்ட தொழில் பிணக்குகளை தமக்குள்ளேயே பேசி தீர்ப்பதன் மூலம் தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நெருக்கமான  சேர்ந்தியங்கும் போக்கு பேணப்படலாம் என்பதில் அமரர் ஆறுமுகன் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

கூட்டு ஒப்பந்தம் பல தடவைகளில் சவால்களுக்கு உட்படாமல் இல்லை. ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் விட்டுக் கொடுப்பதன் மூலம் ஒப்பந்தம் கை நழுவிப் போகாதபடி கட்டிக் காத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்.
ஆனால் அநேகமான சந்தர்ப்பங்களில் கூட்டு ஓப்பந்த பேச்சுவார்த்தைகளின் முடிவு கம்பனி தரப்பினைச் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றன. ஏன் இப்படி? தொழிற் சங்கங்களின் பலவீனமே காரணம். தமது பக்க நியாயத்தை ஆணித்தரமாக வலியுறுத்துவதற்கு திராணியில்லாத தொழிற்சங்கங்கள் சரணடைய நேரிட்டது.  

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது எமது வாதம் நியாயமானது என்பதை உறுதியாக நிலை நிறுத்துவதன் மூலம்  நமக்கு சாதகமான முடிவை  ஏற்படுத்தலாம் என்று  கருதினார் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான்.

இதனை இறுதிவரை சாதித்துக் காட்ட முடியாத  கைச்சாத்திடும் உரிமை கொண்ட மலையக தொழிற்சங்கங்கள் இன்று தடுமாறிக் கொண்டிருக்கன்றன. 

கூட்டு ஒப்பந்தம் செயலற்றுப் போயுள்ளமை கம்பனி தரப்பின் சுமைகளைக் குறைத்துள்ளன என்றே கூற வேண்டும்.    2003ஆம் ஆண்டுக்கான 13ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்த தொழிலாளர் நலன்களுக்கான எற்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்புக்கான வாய்ப்புகள் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளன.  

வழங்கப்பட வேண்டிய வேலை நாட்கள் (மாதாந்தம் 25 நாட்கள் வேலை) என்ற அடிப்படையில் தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்க செயற்குழுக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள்  இடம்பெற்றன.  தோட்ட மட்டத்தில் உற்பத்தியை ஊக்கவிக்கும் முனைப்புகள் இந்த இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வை வலுப்படுத்த உதவியாக இருக்குமென்னும் எதிர்பார்ப்பு.

பறிக்கப்பட வேண்டிய கொழுந்தின் நிறை, மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு, தோட்ட சுகாதார வசதிகள் மேம்பாடு என்று பல விடயங்கள் ஒப்பந்தத்துக்குள் அடங்குகின்றன.  

ஆனால் இன்று அவையாவும் செயலிழந்து போயுள்ளன. கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பது கம்பனி தரப்புக்கும் சாதகத் தன்மையையே உண்டாக்கும்.

எனவே இரு தரப்புக்குமே பயன்தரும் பல அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் கூட்டு ஒப்பந்தம் திருத்தங்களுடன் நடைமுறைக்கு வருவது நல்லதுதான்.

1000 ரூபா சம்பள அதிகரிப்பு என்னும் தனது தந்தையாரின் அபிலாஷையை பூர்த்திசெய்த ஜீவன் தொண்டமான் அவர் கரிசனையுடன் கட்டிக்காத்து வந்த கூட்டு ஒப்பந்தத்தை மீட்டுத் தருவாரா? பெருந்தோட்ட மக்கள் இதனையே எதிர்பார்க்கிறார்கள்.   

பன். பாலா   

Comments