ஆட்சியை கவிழ்ப்பதே அரசுக்கு எதிரான சக்திகளின் குறிக்கோள்! | தினகரன் வாரமஞ்சரி

ஆட்சியை கவிழ்ப்பதே அரசுக்கு எதிரான சக்திகளின் குறிக்கோள்!

அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி, ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திலேயே அரசுக்கு எதிரான போராட்டங்கள் திட்டமிட்ட குழுக்களால் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னரணதுங்க தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேகபேட்டியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கே: அரசாங்கத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்குள்ளேயே தீர்த்துக் கொள்வதன் அவசியத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அரசாங்கம் சவால்களுக்கு முகங்கொடுத்தால், அதில் உள்ள அனைவரும் இணைந்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும். மாறாக ஒரு தரப்பினர் ஒரு மாதிரியும், மற்றுமொரு தரப்பினர் பிறிதொரு விதமாகவும் நடந்து கொண்டால் கட்சியின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் குழம்பிப் போய் விடுவார்கள். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பது சட்டவாக்க உறுப்பினர்களின் பொறுப்பாகும். உதாரணமாக, சேதனப் பசளைகளை ஊக்குவிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் சிறந்ததொரு முடிவு எடுக்கப்பட்டது. எதிர்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை வெற்றிகரமாக்குவதற்கு அனைவரும் இணைந்து அரசுக்கு ஆதரவை வழங்க வேண்டும்.

எனினும், போராட்டங்களின் போது விவசாயிகள் முன்வைத்த கருத்துகளுக்கு சில அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையற்ற விதத்தில் பதிலளித்துள்ளனர். ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சரவைக் கூட்டம் அல்லது அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடித் தீர்த்துக் கொள்ள முடியும். அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் தீர்மானங்கள் எட்டப்பட்ட பின்னர் சில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் வெளியே வந்து வேறு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்படும் கருத்துக்கள் என்பதை உணர முடிகிறது. அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

கே: நனோ நைட்ரஜன் திரவப் பசளை இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகின்றார். இது பற்றி உங்கள் நிலைப்பாடு யாது?

பதில்: ஏதாவது மோசடி இடம்பெற்றிருந்தால், அதுபற்றி முறைப்பாடு செய்யப்பட்டால் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படும். விவசாயிகளுக்காக உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பது இங்கு முக்கியமாகும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் யாராவது மோசடி செய்திருந்தால் எதிர்க்கட்சி என்ற ரீதியில் பொலிஸில் அல்லது நீதித்துறையில் முறைப்பாடு செய்ய முடியும். சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை நடத்தி மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

கே: சம்பளப் பிரச்சினை தொடர்பில் தமக்குத் திருப்திகரமான தீர்வை வழங்கும் வரை போராட்டங்களைத் தொடரப் போவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் கூறுகிறது. இது பற்றிக் கூறமுடியுமா?

பதில்: நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் மற்றும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்த நாம் இணங்கினோம். அவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு சில வருடங்களில் தீர்வை வழங்கவும் நாம் இணக்கம் தெரிவித்தோம். எனினும், தமது அரசியல் நோக்கத்தை அடைவதற்காக மாணவர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். வடக்கில் இருந்த மக்களை எல்.ரி.ரி.ஈயின் தலைவர் பிரபாகரன் மனித கேடயங்களாகப் பயன்படுத்தியதைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது. நான் கல்வி அமைச்சராக இருந்துள்ளேன். எனது தாயார் ஆசிரியையாக இருந்தவர். ஆசிரியர்களுக்கு சில அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி எமக்கும் தெரியும். இதனைச் சரிசெய்ய அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கொவிட்-19தொற்றுநோய் ஏற்பட்டது. இதனால் பொருளாதாரம் சில பின்னடைவுகளைச் சந்தித்தது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் பகடைக்காய்களாக வைக்கப்பட்டு தொழிற்சங்கங்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தவறானது. ஆசிரியர்கள் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாமல் இருந்தால் எப்படி இருக்கும்? அவர்களின் சொந்தப் பிள்ளைகள் இவ்வாறான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டால்அவர்களுக்கு எப்படி இருக்கும்? தமது மாணவர்களுக்காக ஆசிரியர்கள் இக்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை ஏனைய நாடுகளில் நாம் காண முடிகிறது. ஜனாதிபதியும், பிரதமரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினை வழங்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

கே: நாடளாவிய ரீதியில் தேவைப்படும் உரத் தேவைக்கு ஏற்ப பெரும்போகத்துக்குத் தேவையான உரம் வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சரினால் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இந்தப் போராட்டங்களுக்குத் தலைமைத்துவம் வழங்குபவர்கள் யார் என்று பார்த்தால், ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளும் ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்களே காணப்படுகின்றன. இப்போராட்டங்களின் பின்னணியில் உள்ள நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான நோக்கமாகும். நாடு அசௌகரியத்துக்கு உள்ளாகும் போது அதற்கான தாக்கத்தை மக்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது குறுகிய அரசியல் நோக்கத்தைக் ககைவிட்டு, கடமையை நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும். ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் நோக்கங்களைக் கொண்டவை.

கே: அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் கெரவலப்பிட்டிய யுகதனவி எரிசக்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளன. இது பற்றி உங்கள் கருத்து

பதில்: முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் நடைபெற்ற போது முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரவில்லை. சங்கிரி-லா ஹோட்டலை அமைப்பதற்கு கொழும்பில் அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருந்த காணி வழங்கப்பட்டது. சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். நாங்கள் அமெரிக்காவுடன் இணையவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும்.

சில முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்காவுடன் நாம் கைகோர்க்க முயற்சிக்கும்போது சில தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்த ஒப்பந்தத்துக்கு அமைய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் 40 வீதம் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், 15 வருடங்களின் பின்னர் இது மீண்டும் எமக்கு வழங்கப்படும். பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் நிலையில் முதலீடுகளைச் செய்ய அரசாங்கத்திடம் போதிய பணம் இல்லையென்பதால் வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படுகின்றன. முதலீடுகள் நமக்குப் பொருளாதாரப் பலன்களைத் தரும் வகையில் செய்யப்பட வேண்டும். கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் இந்த முதலீட்டுக்கு வேறு ஏதேனும் மாற்று இருந்தால், இதை விமர்சிப்பதை விட எவரும் சுட்டிக் காட்டலாம்.

அர்ஜூன்

Comments