தோட்டக் கட்டமைப்பிலிருந்து மலையக சமூகம் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தோட்டக் கட்டமைப்பிலிருந்து மலையக சமூகம் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும்

கடந்த வாரம் புலம் பெயர்தல் சமூக மாற்றத்துக்கு அடையாளமாக இருக்க முடியாது. அது இருப்பையே கேள்விக்குறியாக்கும் என்பதை பதிவிட்டிருந்தோம். இது பற்றி ஊடகத்துறைசார் நண்பரொருவர் சில சந்தேகங்களை அலைபேசி வாயிலாக எழுப்பினார். அதனையொட்டிபுலம்பெயர்வதற்கான பின்புலமானது எந்தெந்த வகையில் சமூக மற்றத்துக்கான அடிப்படை அம்சங்களை ஆட்டம்காண வைக்கிறது என்பதை இங்கு பதிவிட விழைகின்றோம்.

மலையக சமூகம் இன்று பின்னடைவு கண்டிருப்பது ஒன்றும் புதிய தகவல் அல்ல. அயல் நாட்டு உள்நாட்டு சமூக பரிமாணங்ளோடு ஒப்பீடு செய்யும்போது இந்த யதார்த்த நிலைமை தெளிவாகப் புரியும். சமூக ரீதியிலான ஆய்வுகளை உள்வாங்கிக் கொண்டு ஏற்ற இறக்கங்களை இனம் கண்டு அதற்கேற்புடையதான சமூக அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் முதன்மைப்படுத்தாமை மலையகத் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளாகும். ஏனெனில் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் தொழிற்சங்க அரசியல் முன்னெடுக்கப்பட்டமையே இதற்கு அடிப்படையாக அமைகின்றது. இதனால் சமூக கெளரவங்களுக்கான தேடல்கள் இடம்பெறவில்லை. இதுபற்றிப் பொிதாக யாரும் அலட்டிக் கொள்ளவும் இல்லை. இதற்கு இன்னுமொரு பிரதான காரணமாக அமைந்ததுதான் பெருந்தோட்டக் கட்டமைப்பு. இலங்கையைப் பொறுத்தவரை பெருந்தோட்டத் தொழிலாளர்களது சமூக நலன் பாதுகாப்பு என்பன ஆரம்ப காலந்தொட்டே தொழிற் சட்டத்துக்குக் கீழேயே இருந்து வருகின்றது. இதனை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு பெருந்தோட்ட முகாமைத்துவத்திடம் உள்ளது. ஆனால் பெருந்தோட்ட முகாமைத்துவம் தோட்டத் தொழிலாளரின் நலனைவிட தமது ஆதாயத்தில் மட்டுமே அக்கறை காட்டி இயங்குவதால் தோட்ட மக்களுக்கான சேவையை மிக அடிமட்ட ரீதியிலேயே மேற்கொண்டு வருகின்றது. பெருந்தோட்ட முறைமைக்கான ஆட்சேர்ப்பு என்பதும் இப்படித்தான் அமைந்தது.  

இலங்கை போன்ற நாடுகளில் பெருந்தோட்ட முறைமை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவின் சில இடங்களிலும் கரீபியன் தீவுகளிலும் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களது குறிப்பு. ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கி கப்பல் மூலமாக இந்நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டுக் குடியேற்றப்பட்டதே வரலாறு. இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் அடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்பட்டார்கள். பிற்பட்ட காலத்தில் அடிமைநிலை வர்த்தகத்துக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டு அடிமைமுறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. அதனாலேயே ஆங்கிலேயே அரசாங்கம் அண்மை நாடான இந்தியாவில் இருந்து ஆட்களைத் திரட்ட வேண்டியேற்பட்டது. ஏனெனில் இலங்கையில் பெருந்தோட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது இத்தோட்டங்கள் அடிமை தொழிலாளர்களை நம்பியிருக்கவில்லை என்பர் வரலாற்றாய்வாளர்.  

ஓப்பந்தத் தொழிலாளர்களாகவே இவர்கள் உள்வாங்கப்பட்டனர். இந்த ஒப்பந்தமானது ஐந்தாண்டு வரையறையைக் கொண்டிருந்தது. கங்காணிமார்களின் பொறுப்பில் வந்தவர்களும் இவர்களுக்குள் அடங்கினார்கள். குறிப்பிட்டகாலம் பெருந்தோட்டங்களில் வேலை செய்த பின்னர் மீண்டும் தங்கள் தாய்நாடு திரும்பலாம் என்ற அடிப்படையிலேயே இவர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால் இவ்வாறு வந்தவர்கள் பிற்காலத்தில் தாம் குடியேறிய புதிய நாடுகளிலேயே வாழத் தலைப்பட்டமை ஒரு திருப்பமாக அமைந்தது. இதனால் இலங்கை போன்ற நாடுகளில் இது சமூக அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கவே செய்தது. தவிர புதிதாக ஒரு தேசிய இனமாக இவர்களை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் தோற்றுவித்தது. ஆரம்ப காலத்தில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தோட்டங்களில் இருந்து மாறி வேறு தோட்டங்களுக்கோ வேறு இடங்களுக்கோ சென்றால் அவா்களுக்கு எதிராக வழக்குக் தொடா்ந்து மறுபடியும் அவா்களை அதே தோட்டத்திற்குக் கொண்டு வரலாம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. இதை 20ஆம் நூற்றாண்டின் அடிமைத்துவம் என்று வர்ணிப்பார் மலையக ஆய்வாளர் பி.பி. தேவராஜ்.  

மலையக சமூகம் 1820முதல் 1840வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு குடியேற்றம் கண்டதால் நீண்ட வரலாற்றுப் பதிவினை கொண்டதாகக் காணப்படுகின்றது. இதனால் பிற சமூகங்களிலிருந்து வேறுபட்டதும் தனித்துவமானதுமான பாரம்பரிய, பண்பட்ட கலை, கலாசார பண்பியல்புகளின் நீட்சியினை நிலை நிறுத்திக்கொள்ள முடிந்திருக்கின்றது. மண்வாசனையுடன் கூடிய சொல்லாடல் வழக்கு, சரித்திரம் சார்ந்த இலக்கியங்கள், வாழ்வியல் பேசும் நாட்டாரியல் பாடல்கள். இங்கு மரபோச்சிக் கொண்டிருக்கின்றன. அரசியல் பொருளாதார ரீதியாக தனித்துவமான உட்கட்டமைப்பு வாழ்க்கை முறை இங்கு இம்மக்களை அடையாளப்படுத்துகின்றன.  

இத்தனை அம்சங்களும் இங்கு சிறப்புப் பெற்றிருக்கும் பின்புலத்தில் அடிமைத்தனம் எப்படி அங்கு அதிகாரம் செய்ய முடியும்?் பின்னடைவு கண்ட சமூகம் என்று அடையாளப்படுத்துவது தகுமா? என்னும சந்தேகம் எழுவது சகஜமே  

இங்குதான் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்திய ஆங்கிலேயரின் நிர்வாக கட்டமைப்பின் சாதுரியம் மறைந்திருக்கிறது. இந்திய வம்சாவளித் தமிழா்கள் செறிந்து வாழ்கின்ற மாவட்டங்களாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன. இது தவிர களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் குறைவான தொகையினர் வாழ்ந்து வருகின்றார்கள். அத்துடன் வட மாகாண மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் மலையகத்தவர்கள் வாழ்ந்து வருகின்றாரா்கள்.  

பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு உள்ளும் புறமும் வெளிமாவட்டங்கள் வாழும் மலையக சமூகம் பெரும் மாற்றங்கள் ஏதும் ஏற்படாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக அங்கலாய்ப்புகள் எழாமல் இல்லை. அடிமைத்தன சிந்தனையில் இருந்து விடுபடாத ஒரு சமூக கட்டமைப்பு இங்கு காணப்படுவதை மறுக்க முடியாது. ஆசிரியா் தொழிலும், மோட்டாா் சைக்கிள், முச்சக்கர, வண்டி, வீட்டு வசதி மட்டும் சமூக மாற்றத்துக்கான வித்திடல் ஆகிவிடுமா என்னும் கேள்வி எழுகின்றது. புத்திஜீவிகளின் பங்களிப்பு சமூகமாற்றம் குறித்து எந்தளவு பிரயோகிக்கப்படுகின்றது என்பதில் சர்ச்சைகள் இருக்கின்றன. கல்வியிலும் தொழில் மட்டத்திலும் உயர்ச்சி கண்டோரில் எத்தனை பேர் சமூக பிரக்ஞையுடன் சேர்ந்தியங்குகிறார்கள் என்பது ஆய்வுக்குரிய சங்கதி.  

பெருந்்தோட்டக் கட்டமைப்ப ஆரம்பத்தில் இருந்தே சிங்கள கிராமங்களோடு திட்டமிட்ட இடைவெளியை ஏற்படுத்தியதன் பயனடைந்தே வந்துள்ளது. சிங்கள கிராமத்தவர்கள் போல காணியுரிமை வீட்டுரிமை வேண்டும் என்ற அகவுணர்வு வந்து விடாதபடி தொழில் ரீதியான ஒரு வாழ்விட பின்புலத்தைக் கொண்டதே மலையக சமூகம் என்று சுய விமர்சனம் செய்து கொள்ளும்படியான ஒரு நிலைமையத் தோற்றுவிப்பதில் பெருந்தோட்டக் கட்டமைப்பு எதிர்பார்த்த வெற்றியைத் தக்கவைத்தே வந்துள்ளது. தோட்டம் கிராமங்களுக்கு இடையிலான ஒட்டுறவின்மை, தோட்டக் குடியிருப்புகள் சாதீய ரீதியில் பகிரப்பட்டமை கூட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளேயாகும். பெருந்தோட்ட மக்களின் சகல தேவைகளும் தோட்ட நிர்வாகங்களாலேயே நிறைவேற்றப்பட்டன. தேவைகளை அவைகளே தீர்மானித்தன. தேவையானவற்றை தோட்ட நிர்வாகங்களே வழங்கும். அவைகளால் மட்டுமே தம்மைப் பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு அமோகமாக அறுவடையும் பெறப்பட்டது. ஒரு வகையில் இது எழுதப்படாத அடிமை சானம். 1930களில் பெருந்தோட்ட மக்களின் நிலையை அரை அடிமை நிலையென கணித்து கண்டனம் வெளியிட்டது இந்திய அரசு.  

ஆனால் அதிலிருந்து இம்மக்களை விடுக்க எதையும் செய்யவில்லை. இதனாலலேயே வெளிநாட்டுக் கம்பனிகள் வெளியேறிய பின்னும் சுதேசிய நிர்வாகம் அதே அடிமை நிலை போக்கிலேயே இம்மக்களை நடத்த ஆரம்பித்தது. இன்று நாட்டில் கல்வி இலவசம், மருத்துவ சேவை இலவசம் என்பது பொதுவான வரப்பிரசாதங்களாகும். ஆனால் மலையக சமூகம் அந்த வாய்ப்புகளைப் பெறுகின்றதா என்றால் யோசிக்க வேண்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், போஷாக்கு நிலைகளில் மலையகம் பின்தங்கியே காணப்படுகின்றது. பெருந்தோட்டக் கட்டமைப்பு இவ்வளவு காலமும் இவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாலேயே இந்நிலைமை. வீடமைப்பு, வீதி போக்குவரத்து, சுகாதாரம் அனைத்தும் தோட்ட நிர்வாகங்களின் பொறுப்பில் இருந்ததால் தோட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமலே போயுள்ளன. பொது நிர்வாக செயற்பாடுகளுக்குக் கீழ் பெருந்தோட்ட மக்கள் முற்றுமுழுதாக உள்வாங்கப்பட்டால் மட்டுமே தமது அபிலாஷைகளைப் பெறக்கூடியதாக இருக்கும். இம்மாற்றம் ஏற்படாத பட்சத்தில் பிற சமூகத்திடம் இருந்து ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதே பலரதும் அபிப்பிராயமாகும். தோட்ட நிர்வாகங்கள், தொழில் வழங்குனர்கள் என்ற வட்டத்துக்குள் முடக்கப்பட்டால் மட்டுமே பொது நிர்வாக சேவைகள் பெருந்தோட்டப் பிரதேசங்களையும் சென்றடைய முடியும்.  

இன்று பிரதேச சபைகளின் அபிவிருத்திப் பணிகளை பெருந்தோட்ட மக்கள் பெறக்கூடிய வாய்ப்பு எற்பட்டுள்ளது. தனித்தனிவீடுகள் அமைக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இந்திய அரசாங்கம் 14ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொள்ள நிதி வழங்கியுள்ளது சொந்தமாக காணி உரிமை இல்லாத காரணத்தால் இந்திய வீடமைப்பு திட்டம் சற்று வேகம் குன்றியே இடம் பெறவேண்டியுள்ளது. பெருந்தோட்ட தொழில் கெளரவமான தொழில்தானா என்னும் கேள்வி மலையக இளைய தலைமுறையினர் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது.  

தேயிலைத் தோட்டத் தொழிலைக் கைவிடுவதே பெருந்தோட்டக் கட்டமைப்பலிருந்து வெளியேறுவதற்கான மார்க்கம் என்று சிலர் எண்ணுகிறார்கள். பெருந்தோட்ட நிா்வாக கட்டமைப்பு தடைபோடுகின்றதே தவிர அத்துறைசார் தொழில் அல்ல. எனவேதான் அத்தொழிக் கூலித்தொழில் என்ற நிலைமையில் இருந்து விடுவிக்கப்பட்டு கெளரவமான தொழில் என்ற உணர்வை உருவாக்க வேண்டியது அவசியமானது.  

மலையகத்தில் புதிய கிராமங்கள் அமைப்பதும் ஆசிரியர் தொழில் பெற்றுக்கொடுப்பதும் அடிப்படை ரீதியிலான சமூக மாற்றத்துக்கு வழிவகுத்துவிடப் போவதில்லை. இவை ஆரம்பம் மட்டுமே. வாழ்விட உரிமை, வேலை வாய்ப்பின்மை இரண்டும் மட்டுமே பின்னடைவுக்கான காரணங்களல்ல. இவை காரணிகளில் இரு அம்சங்களே தோட்டத் தொழிலையும் ஆசிரியர் தொழிலையும் விட்டால் வேறு தொழில் வாய்ப்புகள் கிடையாது. பொருளாதார வளத்துக்கான ஊக்கிகள் எதுவும் காணப்படவில்லை. இதனால் ஆயிரக் கணக்கானோர் தோட்டங்களைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இவா்கள் மீண்டும் மலையகம் திரும்புவதற்கான வகையில் தொழில்பேட்டைகள் ஏற்படுத்தியாக வேண்டும.் மலையக இளைய தலைமுறையினரைக் கருத்திற்கொண்டு வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படுவது தவிர்க்க முடியாத விடயம்.  

ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் 30வருடங்கள் முழுமைபெறாத கல்வி நிலை பின்டைவு மலையக சமூகத்துக்கு உண்டு. சகல தோட்டப் பாடசாலைகளும் அரசுடைமை ஆக்கப்பட்டதன் பின்னரே இலவசக் கல்வியின் பயன்பாடுகள் இங்கு கிட்ட ஆரம்பித்தன.

ஆரம்பக் கல்வி நிலை அண்மைக் காலங்களில் நல்ல நிலையை எய்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2ஆம் நிலைக் கல்வி ஓரளவு நல்ல வளர்ச்சியை கண்டிருக்கும் அதேவேளை 3ஆம் நிலைக்கல்வி உயர் கல்வி குறைந்த வளர்ச்சியைக் காட்டி (2017) நிற்கின்றது. இதன்படி தோட்டக் கட்டமைப்பின் தாக்கமானது தொழிலாளர்களை மட்டுமின்றி அவர்களின் பிள்ளைகளையும் பாதிக்கவே செய்கின்றது என்கிறார்கள் கல்வி இயலாளர்கள். இதனாலேயே பாடசாலை இடைவிலகல் என்பது மலையகத்தின் கல்வி அபிவிருத்தியில் பாரிய அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. சமூக அபிவிருத்தி என்பது வெளித் தோற்றங்களை வைத்து எடைபோடும் சமாச்சாரமல்ல.

அதன் அடையாளங்கள் இதர சமூகங்களுடனான ஒப்பீட்டின் பேரில் தீர்மானிக்கப்பட வேண்டியவை. அதனால் மாற்றம் காணமுடியாத சமூகம் என்று மட்டமாக யாரும் தீர்மானித்துவிட முடியாது. மாற்றங்களை மடக்கி நிற்கும் ஏதுக்கள் களைந்தெறியப்பட வேண்டியுள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் வாழ்வாதாரப் போராட்டத்துக்கான தீர்வு. இதனைப் பெற்றுத்தர வேண்டியது மலையகத் தலைமைகளின் கடப்பாடு.

தன்னுணர்வு பெறும் சமூகம் பின்னடைவைக் கடந்து பேரேழுச்சிக் கொள்ளும் என்பதே பன்னாட்டுச் சமூக சரித்திரங்கள் சொல்லும் பாடம்.   

பன்.பாலா

Comments