பெருந்தோட்ட குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணி உடனடித் தேவை | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணி உடனடித் தேவை

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7பேர்ச் காணியை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மனித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானத்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார். அரசாங்கம் வழங்கும் இக்காணியில் தோட்ட மக்கள் முறையான வீடுகளை தாமே நிர்மாணித்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறிவைத்தார். 

இங்கே இரண்டு கேள்விகள் எழுகின்றன. 7பேர்ச் காணியை வழங்குவதன் மூலம் பெருந்தோட்டத்துக்கான தனிவீட்டுத் திட்டம் கைவிடப்படுமா? இது முதலாவது கேள்வி. அப்படி காணி விநியோகம் இடம்பெறும் பட்சத்தில் தற்போது தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே எனும் நிலைப்பாடு எடுக்கப்படுமா? அதற்கான வாய்ப்புகளே தற்போதைய நிலையில் அதிகமாக காணப்படுவதாக மலையக தொழிற்சங்க வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. 

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்த கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை,வீடமைப்பு திட்டம் பற்றிய சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். மலையக மக்களுக்கு வீடமைப்பு முக்கியமில்லை. காணி உரிமையே  அவசியம். 150வருடங்களாக வாழ்பவர்கள் காணி உரிமை இல்லாமல் இருக்கின்றனர். தவிர சொந்தக் காணியில் வீடுகளைக் கட்ட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் பெருந்தோட்ட மக்கள் இருக்கின்றார்கள். காணியிருந்தால் வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியுமானவர்கள் மலையகத்தில் இருக்கவே செய்கிறாா்கள். எனவே இம்மக்களுக்கு வீடு வழங்குவதை விட காணி வழங்கவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

ஆக வீடுகளுக்குப் பதிலாக காணி வழங்குவதே பொருத்தமானது என்னும் நிலைப்பாட்டை கொண்டுள்ள இ.தொ.காவின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஆட்சிக் காலத்தில் 7பேர்ச் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அன்று பிரதியமைச்சராக இருந்த அமரர் சந்திரசேகரன் உடனே குரல் எழுப்பினார். 7பேர்ச் காணி வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் வெறும் கை முழம் போடாது. காணி கிடைத்தாலும் அதில் தமக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள திராணியற்ற நிலையிலேயே மலையக மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி சந்திரிகாவிடம் வலியுறுத்தினார். 

அதன் பயனாக கடனுதவி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 25ஆயிரம் வீடுகள் என்னும் இலக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 6000வீடுகள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டன. அப்போதைய நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் பொருளாதார ரீதியில் ஏதாவது பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுத் தரவுகள் எதுவுமே கிடையாது. ஒரு சிலரின் வளர்ச்சியை மேலோட்டமாக வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் எடைபோட முடியாது. உண்மையில் இன்று எத்தனை குடும்பங்கள் காணி கிடைத்தால் தனி வீடு கட்டிக் கொள்ளத் தயாராயிருக்கிறோம் என்று சொல்லப்போகின்றன? 

1000ரூபா தினக்கூலி பெற்றுக் கொடுத்ததால் இம்மக்களின் வாழ்வாதாரம் அதிரடியாக உயர்ந்து போயிருக்கிறது என்று யாராலும்  கூற முடியாது. ஏனெனில் அந்த 1000ரூபா சம்பள அதிகரிப்பை முழுமையாகப் பெற முட்டுக்கட்டைப் போடுவதாக தோட்ட நிர்வாகங்கள் மீது காட்டமான குற்றச் சாட்டுக்களை இ.தொ.கா தான் சுமத்தி வருக்கின்றது. அன்மையில் அதன் ஊடக செய்தி இதனை உறுதி செய்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பள அதிகரிப்பை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்கள் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைப்பு, அரைநாள் சம்பளம் வழங்குதல், மேலதிக கொழுந்து பறித்தலுக்கு கொடுப்பனவு வழங்காமை போன்ற அழுத்தங்களை தொழிலாளர்கள் மீது கம்பனி தரப்பு பிரயோகித்து வருகின்றது என்று புலம்புகிறது இ.தொ.கா. 

இதன்படி பார்க்கப் போனால் 1000ரூபா வேதன அதிகரிப்பால் பொருளாதார ஸ்திரம் எதுவுமே ஏற்பட்டிருக்க வாய்பில்லை. கொழும்பு போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட மக்கள் வேலை செய்து வருகிறார்கள். அநேகமான பெருந்தோட்ட இளைய தலைமுறையினருக்கு நாட்டின் நகரங்களே தஞ்சம். இவர்களில் சிலரது குடும்பங்கள் மட்டுமே இன்று தேயிலைத் தொழிலில் ஈடுபடுகின்றன.

இக்குடும்பங்களுக்கு 7பேர்ச் காணி கிடைக்கும் பட்சத்தில் பல முறைகேடுகளும் இடம்பெற வழியுண்டு. இன்று நகர வாழ்க்கையோடு தம்மை இணைத்துக் கொண்ட பல இளைஞர்கள் தோட்டங்களுக்குத் திரும்புவதை விரும்புவதாகத் தெரியவில்லை இப்படியானவர்களுக்கு காணி கிடைத்தால் அதை விற்றுவிட்டு கொழும்புப் போன்ற நகரங்களில் காணி வாங்கி செட்டில் ஆகிவிட எண்ணி விட்டால் என்ன நடக்கும்? 

லயக் காம்பிராக்களுக்கு மாற்றாக தனிவீட்டத் திட்டம் மூலம் வீடுகளைப் பெற்ற சிலர் அதனை விற்கவோ வாடகைக்கு விடவோ செய்துள்ள சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. வீடுகளுக்கே இந்தக் கதி என்றால் காணிகளைப் பற்றிப் பேசவா வேண்டும். பல குடும்பங்கள் இன்று பெருந்தோட்டத் தொழிலைக் கைவிட்டுள்ளன.

இக்குடும்பங்களின் வாழ்விடமாக மட்டுமே பெருந்தோட்டப் பிரதேசங்கள் காணப்படுகின்றன. பெருந்தோட்டங்களுக்கு வெளியே வேலை செய்தாலும் அப்படி யொன்றும் உபரிவருமானம் பெற்று உல்லாசித்திருக்கவில்லை இக்குடுபங்கள். வேலைக்குப் போனால் மட்டுமே வேளா வேளைக்குச் சாப்பாடு என்பதே நிலைமை. 

இவர்கள் 7பேர்ச் காணி விநியோகத்தில் ஓரங்கட்டப்படும் நடைமுறை கையாளப்பட்டால் லய வாழ்கைக்குப் முற்றுப்புள்ளி என்பதே கிடையாமல் போய்விடும். தவிர உழைத்து ஓய்ந்திருக்கும் முன்னாள் தொழிலாளா்கள், ஆசிரியர் தொழில் புரிவோர். ஒய்வுபெற்ற தோட்ட உத்தியோகத்தர்கள் என பலரும் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே வதிவிடங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறானவர்களுக்கு 7பேர்ச் காணி வழங்க கம்பனி தரப்பு இணங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இந்தியா வழங்கியுள்ள வீடுகளை நிர்மாணித்துக் கொள்ளவே இட ஒதுக்கீடு செய்வதில் கம்பனி தரப்புக் காட்டும் பிடிவாதம் கொஞ்ச நஞ்சமல்லவே!தவிர தற்போதைய நிலையில் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கு குறைந்த பட்சம் 15இலட்சமாவது வேண்டும்.

இந்திய அரசு தமது வீடமைப்புத் திட்டத்துக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் 12இலட்ச ரூபாவையே ஒதுக்குகின்றது. எஞ்சிய தொகையை இலங்கை அரசாங்கத்திடம் இருந்தே பெற வேண்டியுள்ளது. முன்னைய ஆட்சியில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தமது அமைச்சுக்கூடாக வழங்கினார். தற்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்தே வழங்கி வருகிறார். 

இவ்வாறான பிரச்சினைகள் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தில் வராமல் இருக்க வேண்டுமானால் தனிவீடுகளுடன் காணியும் உரித்தாக்குவதே உகந்த தீர்வாகவே இருக்க முடியும். காணியை இலவசமாக வழங்கிவிட்டு கடன்பட்டு வீடு கட்ட வழிவகுத்தால் அத பெருந்தோட்ட மக்களை தொடந்தும் கடனாளிகளாக்கி விடவே உதவும். 

எது எப்படியோ தனி வீட்டுத் திட்டம் என்றாலும் சரி, 7பேர்ச் காணியில் சுய வீடமைப்புத் திட்டம் என்றாலும் சரி தோட்டத்தில் வேலை செய்யாத அதேநேரம் பெருந்தோட்டப் பிரதேசங்களையே தமது பரம்பரை வதிவிடமாக கொண்டுள்ள பல்லாயிரக் கணக்கானோரையும் பங்காளியாக்கிக் கொண்டால் மட்டுமே முழுமை பெறும். இல்லாவிட்டால் தோட்டங்களைக் கிராமங்கள் ஆக்கும் கனவு மெய்ப்படாமலே போய்விடும் .

பன்பாலா

Comments