நுவரெலியா மாவட்டத்துக்கு புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் அமைக்கப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியா மாவட்டத்துக்கு புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் அமைக்கப்படுமா?

முன்பு ஐந்தாக இருந்த பிரதேச சபைகள் 12ஆக அதிகரிக்கப்பட்டதன்மூலம் அரசியல் அதிகாரப்பகிர்வினை விரிவாக்கம் செய்வதற்கு வழிபிறந்தது. எனினும் பிரதேச சபை சட்ட மூலத்தில் திருத்தம், பிரதேச சபைகள் அதிகரிப்பு மட்டுமே அரசியல் அதிகாரப் பகிர்வையோ, நிர்வாக அதிகாரப் பகிர்வையோ முழுமையாக பெற உதவ முடியுமா என்னும் ஆதங்கம் எழாமல் இல்லை

பிரதேச சபைகளும் பிரதேச செயலகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. பிரதேச சபைகள் அரசியல் அதிகார பகிர்வினை வழங்குகின்றன. பிரதேச செயலகங்கள் நிர்வாக அதிகாரப் பகிர்வினை வலியுறுத்தி நிற்கின்றன. எனினும் கடந்த காலங்களில் மலையக அரசாட்சி தளம் விரிவடைய வாய்ப்பில்லாமல் சட்டரீதியான தடைகள் மேலோங்கி இருந்தன. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான சட்டத்திருத்தங்களின் படி அந்த வாய்ப்புகள் எட்டப்பட்டன. ஆனால் பூரணத்துவமடையவில்லை. 

பிரதேச சபைக்கூடான வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெற்றாலும் கூட பிரதேச செயலகங்களின் அதிகரிப்பு என்பது இன்னும் கைகூடவில்லை.  

அதிகாரப் பகிர்வின் வரலாற்று பதிவுகளை சிறிது அலசுவோம். 

1924களில் கிராம சமுதாய சட்டத்தின் கீழ் கிராம சiபைகள் அமைக்கப்பட்டன. ஆனால் மலையக சமூகம் உள்வாங்கப்படவில்லை. இச்சட்டத்தில் திருத்தங்கள் பல பின்னாட்களில் ஏற்படுத்தப்பட்டாலும் பெருந்தோட்ட மக்களுக்கான வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வாக்களிக்கும் உரிமையில்லை. சேவைகளைப் பெற அனுமதியும் இல்லை. இதற்குக் காரணம் வலிமையான பெருந்தோட்டக் கட்டமைப்பு முறைமையே ஆகும். தோட்டப் புற மக்களின் அனைத்துச் தேவைகளும் அக்கட்டமைப்பைச் சார்ந்தே வாழவேண்டியிருந்தது. 

இதனால் தேசிய ரீதியிலான பொது வேலைத்திட்டங்கள் எதுவுமே தோட்டப் புறங்கiளை எட்டிப் பார்க்கவில்லை. ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாக தேசிய கொள்கை வகுத்தல்களிலுருந்து ஒரங்கட்டப்பட்டிருந்த நிலைமையை மாற்றியமைக்கும் வாய்ப்பு அண்மைக்காலத்திலேயே வந்தது.இதில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜின் பங்களிப்பும் முயற்சியும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. 

அது தான் 1987இல் உருவாக்கம் பெற்ற பிதேச சபை சட்ட மூலத்தின் 19ஆவது மற்றும் 33ஆவது சரத்துக்களை திருதுவதற்கான முன்னகர்வு. 19ஆவது சரத்து தோட்டப்புறங்களைத் தவிர்த்து விட்டிருந்தது. 33ஆவது சரத்து தோட்டங்களின் பாதைகள் அமைப்பதற்கு தோட்ட உரிமையாளர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே பிரதேச சபையின் நிதியினைப் பயன்படுத்தும் அனுமதி வழங்கி வைத்தது. 

இது ஓரளவுக்கு செயன் முறையாகிக் கொண்டிருந்தமையால் உட்கட்டமைப்பு வசதிக்கான பாதைகள், மின்சார வசதிகள், பள்ளிக்கூட கட்டுமானங்கள், சமூக நிலையங்கள் போன்றவைகள் தோட்ட நிர்வாகத்தின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ள முடிந்தது. அரச சேவைகள் என்றாலும் தோட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தால் மட்டுமே ஆகும் என்ற வரையறை குறையாகவே இருந்து வந்தது. ஏனெனில் 2008ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச சபைக்கு நேர்ந்த கதியை இதற்கு ஆதாரமாக வைக்கின்றார்கள் ஆய்வாளர்கள். இச்சபை தனது நிதியை தோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றிப் பயன்படுத்தியதைக் காரணம் காட்டி மத்திய மாகாண ஆளுநரால் இச்சபை கலைக்கப்பட்டது. இச் சமயத்தில் இச் சபையின் ஆட்சியதிகாரம் தமிழ் பேசும் பிரதிநிதிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுவிடமே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான குறைபாடுகளை அடிப்படையாக் கொண்டே இச்சட்ட மூலத்தில் திருத்தங்கள் தேவை என்னும் அழுத்தம் அதிகரித்து வந்தது.  

அதன் நிமித்தமே 2018ஆம் ஆண்டு திருத்தம் இடம்பெற்றது. அதன்படி 19ஆவது சரத்தின் 14ஆவது உப பிரிவின்படி கிராமிய வேலைகளைத் திருத்துதல் அல்லது பாரமரித்தல் என்ற வாக்கியங்களோடு தோட்டக் குடியிருப்புகள் என்ற வாசகம் இணைக்கப்பட்டது.

அதே சரத்தின் 22ஆவது உப பிரிவின்படி தெரிவு செய்யப்பட்ட கிராமங்களின் ஒருங்கிணைத்த அபிவிருத்தி என்னும் சொற்றொடரோடு தோட்டக் குடியிருப்புகள் என்ற பதம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் பிரதேச சபைக்கூடான அதிகாரப் பகிர்வினை அனுபவிக்கக் கூடிய வாய்ப்புகளை பெருந்தோட்ட சமூகமும் பெற முடிந்துள்ளது. 

முன்பு தனியார் கம்பனிகள் வசமுள்ள பெருந்தோட்டங்களை மட்டும் உள்வாங்கியிருந்த நிலைமை மாற்றம் பெற்று தனியார், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசு துறை பொறுப்பின் கீழ் வரும் தோட்டங்கள் அனைத்துமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தவிர முன்பெல்லாம் தோட்ட நிர்வாகம் கோரும் பட்சத்தில் அதன் அனுமதியுடன் பாதைகளைத் திருத்தலாம் என்னும் விதி இருந்தத. இப்போது தோட்ட நிர்வாகங்களின் கலந்தாலோசனையோடு இதனைச் செய்யும் அதிகாரம் பிரதேச சபைகளுக்குக் கிடைத்துள்ளது. 

இச் சட்டத்திருத்ததின் மூலம் தோட்டக் கட்டமைப்பின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருந்த பெருந்தோட்டப் பிரதேச பொது அபிவிருத்திப் பணிகள் இனி பிரதேச சபைகளுக்கூடாக மேற்கொள்ள முடியும். எதிர்காலத்ததில் பெருந்தோட்ட மக்களுக்கான குடியிருப்ப நிலைமைகள் மாற்றமடைந்து தனித்தனி வீடுகளைக் கொண்ட நவீன கிராமங்களாக மலர்ச்சி பெற இச்சட்டத் திருத்தம் உதவவே செய்யும். இதன் பின்னணியிலேயே நுவரெலியா மவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டது.  

முன்பு ஐந்தாக இருந்த பிரதேச சபைகள் 12ஆக அதிகரிக்கப்பட்டதன் மூலம் அரசியல் அதிகாரப் பகிர்வினை விரிவாக்கம் செய்வதற்கு வழிபிறந்தது.

எனினும் பிரதேச சபை சட்ட மூலத்தில் திருத்தம், பிரதேச சபைகள் அதிகரிப்பு மட்டுமே அரசியல் அதிகாரப் பகிர்வையோ, நிர்வாக அதிகாரப் பகிர்வையோ முழுமையாக பெற உதவ முடியுமா என்னும் ஆதங்கம் எழாமல் இல்லை. நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களை அதிகரிக்க முன்னைய ஆட்சி அனுமதி வழங்கிருந்தது. இதன்படி தற்போது ஐந்தாக காணப்படும் பிரதேச செயலகங்கள் பத்தாக உயர்த்தப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. 

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரேரணை அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் மாகணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபே வர்தனவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்து. தற்போது செயற்பாட்டில் உள்ள அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மேலதிகமாக மேலும் ஐந்து பிரதேச செயலகங்கள் அமையப் பெறவுள்ளன என்ற செய்திகள் வந்தன. 

இதன் மூலம் ஒரு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான சனத் தொகையினருக்கு சேவைகள் வழங்கக் கூடிய வகையில் மாற்றம் வருமென எதிர்பார்க்கப்பட்டது அதன் அடிப்படையில் நோர்வூட், தலவாக்கலை, திஸ்பன, ராகலை, மத்துரட்ட ஆகிய பகுதிகளில் புதிய பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. 

எனினும் அவை செயற்பாட்டுக்கு வரும் முன்னரே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மலையக மக்களின் நலன் கருதி வீடமைப்புத் திட்டத்தைப் போல இந்த நிர்வாக மாற்றமும் இடம் பெறும் என்று நம்பப்பட்டது. ஆனால் இதுவரை இதற்கான நகர்வுகள் எதுவுமே எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை முன்னைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தின்படி காலி மாவட்டத்தில் மட்டுமே பிரதேச சபைகளை அதிகரித்துள்ளது, தற்போதைய அரசாங்கம். இது மலையக சமூகத்துக்கு ஏமாற்றத்தையே தருகின்றது. 

வழமைபோல எம். திலகராஜ் மட்டுமே பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார். இ.தொ.கா இதனைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. வீடமைப்புத் திட்டம், மலையக பல்கலைக்கழகம் பற்றியெல்லாம் பேசும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொன்டமான் இது பற்றியும் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வரலாமே! இதில் ஏதும் கௌரவப் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. சமூகத்தின் தேவையைக் கருதி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதே நல்லது.    

பன். பாலா

Comments