தொழிலாளர்கள் சொந்தக் காணியில் வீடமைத்து வாழ்வது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

தொழிலாளர்கள் சொந்தக் காணியில் வீடமைத்து வாழ்வது எப்போது?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க குடும்பமொன்றுக்கு தலா ஏழு பேர்ச் காணி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருக்கிறார்.  

தற்போதைய அரசாங்கத்தில் தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இருக்கிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பொறுப்பிலேயே தோட்ட வீடமைப்பு இருக்கிறது. இந்த நட்புறவைப் பயன்படுத்தி மலையக மக்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் .  

1999ம் ஆண்டு ஒகஸ்ட் 16ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி வெற்றியீட்டி அரசாங்கம் அமைக்க மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரனின் ஒரு ஆசனமே உதவியது.  

அந்த ஒரு காரணத்திற்காகவே ம.ம.மு தலைவர் சந்திரசேகரனுக்கு தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அவர் தோட்டத் தொழிலாளர்கள் தனித்தனி வீடுகள் அமைக்க ஏழு பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சந்திரிகா குமாரதுங்க அதனை செயல்படுத்தினார்.  

அதன் பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இதுகாலவரை அந்த நடைமுறையை பின்பற்றி வந்தபோதிலும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்துவருகிறது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகளினால் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இன்றுவரை அந்த மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பல தேர்தல்கள் வந்துவிட்டன. தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய தொழிற்சங்க அரசியல் பிரதிநிதிகள் பதவிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிடுவதுமாக காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்களின் சிந்தனைக்கு இந்த மக்களின் பிரச்சினைகள் உரியமுறையில் கொண்டு செல்லப்படாமையும் காரணமாக இருக்கலாம்.  

அவிசாவளை பென்ரித் தோட்ட கீழ்ப்பிரிவில் தோட்டத் தொழிலாளர் குடும்பமொன்றிற்கு ஏழு பேர்ச் காணி தோட்ட நிர்வாகத்தினால் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் பெரியசாமி சந்திரசேகரன் தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் முப்பத்தைந்து தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் தமது வசதிகளுக்கேற்றவாறு வீடுகளை நிர்மாணித்து சுதந்திரமாக வாழ்கிறார்கள்.  

ஒருசிலர் தேசிய வீடமைப்பு அதிகார சபை, ஊழியர் சேமலாப நிதி, வங்கிகள் போன்ற நிறுவனங்களின் நிதி உதவிகளைப் பெற்று வீடுகளை நிர்மாணித்துக் கொண்டனர்.  

ஆனால் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி பகுதி தனியார் தோட்டங்களில் இவ்வாறான நிலைமைகள் இல்லை. காணிப்பகிர்வு விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுவதுடன் தொழிலாளர்களின் வீட்டு நிர்மாணத்திற்கான காணிகள் தோட்டக் கம்பனிகளினால் சரிவர ஒதுக்கப்படாமையும் பதவிக்கு வந்த அரசாங்கங்களும் போதுமான நிதியையும் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.  

இந்திய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாலாயிரம் வீடுகளை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கியிருந்தது. அந்த நிதியைக்கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் தொழிலாளர்களிடம் கையளிக்கப்பட்டன. அதன் பின்னர் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்கியது இந்திய அரசாங்கம். அந்த நிதியை பயன்படுத்தி முழுமையாக வீடுகள் நிர்மாணிப்பதில் பல்வேறு பிரச்சினைகள். வீடுகள் முறையாக கட்டப்படவில்லை எனவும் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை  

ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை உற்பத்திக்காக தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்களில் ஒரு சிலர் பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடாது வியாபாரம் மற்றும் கடைகளை ஆரம்பித்து நடத்தியவர்கள் ஓரளவு அபிவிருத்தி அடைந்த நிலையில் தங்களுக்கென சொந்தமாக நிலங்களை கொள்வனவு செய்தும் வீடுகளை நிர்மாணித்துக்கொண்டும் உள்ளனர்.  

அதே போல் இப்பிரதேசத்திலிருந்து கல்வி கற்றவர்களில் சிலர் வெளியிடங்களுக்கு சென்று தமக்கென சொந்தமான நிலம் வீடுகளை கொள்வனவு செய்துள்ளமையும் காணமுடிகிறது. ஆனால் இவர்களில் இன்றுவரை தோட்டத் தொழிலில் ஈடுபட்டுவரும் மக்களினது நில வீட்டுரிமைகள் கேள்விக்குரியாகவே உள்ளது.  

அந்த வகையில் முதலில் காணி உரிமை விடயத்தில் இவர்களுக்கு தோட்டப்புற நிலங்களை கொள்வனவு செய்வதற்கோ விற்பனை செய்வதற்கோ நிலையான சொந்தம் கொண்டாடுவதற்கோ எவ்வித காணி உரிமையும் இல்லை.  

ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ச்சியாக வைத்திருக்கும் நோக்கில் பிரித்தானியர்களால் லயன் முறையிலான தங்குமிட வசதிகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. எனினும் நில உரிமை மறுக்கப்பட்டிருந்தது. தற்போதும் தோட்ட முகாமைத்துவத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு அதே பழமையான வசதிகளற்ற 400சதுர மீட்டர் அடி கொண்ட லயன் வீடுகளே வழங்கப்பட்டுள்ளது.  

ஆரம்பத்தில் ‘இலங்கை பிரஜைகள்’ என்ற அங்கீகாரத்தினையும் பிரித்தானியர்கள் இவர்களுக்கு வழங்கியிருக்காததன் காரணமாக நாட்டின் ஏனைய பிரஜைகள் போல இவர்களால் தமக்கென சொந்தமாக ஒரு நிலத்தை கொள்வனவு செய்வதற்கோ வீடு கட்டுவதற்கோ வாய்ப்பில்லாமல் போயிருந்தது.  

மேலும் ஆரம்ப காலகட்டத்தில் தனியார் வசமாக பெருந்தோட்டங்களில் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு மேலாக இருந்த மக்களினது காணிகள் 1972இல்; அரசுடமையாக்கப்பட்டதுடன் பல தேயிலை தோட்டங்கள் துண்டாடப்பட்டு சிங்கள மக்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில் ஒரு நிலம் கூட தமிழ் தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கேனும் வழங்கப்படவில்லை.  

1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிலச் சீர்திருத்தச் சட்ட பிரகாரம் நிலச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டு தனியார் காணி உரிமைக்கு உச்ச வரம்பு கொண்டுவரப்பட்டதுடன் இதற்கமைய 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெருந்தோட்ட காணியாயின் 50ஏக்கர் எனவும் மற்றைய நிலமாயின் 25ஏக்கர் எனவும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.  

இந்த நிலை இன்னும் தொடர்கிறது. மலையகத்தில் கல்வி ரீதியில் ஓரளவு வளர்ச்சியடைந்திருப்பதாக நாமே கூறிக்கொள்கின்றோம். ஆனால் நமக்கென உரிமைகோர ஒரு காணித்துண்டையேனும் சொந்தமாக வைத்திருக்க முடிகிறதா என்றால் இல்லையென்பதே உண்மையாகும்.  

அன்றிலிருந்து இன்றுவரை தொழிலாளராகவே தோட்டக் கம்பனிகளையும் மாறிமாறி வரும் அரசாங்கங்களையுமே நம்பியிருக்க வேண்டிய நிலையிலேயே மலையகம் இருக்கிறது.  

மூன்று நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த மக்களுக்காக குரல்கொடுக்கும் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காகவும் வாக்கு வங்கிகளுக்காக மட்டுமே செயற்படுகின்றன.  

இந்த நிலையில் இளைய சமூகத்தினர் இவ்விடயத்தில் கூடிய கரிசனையுடன் செயற்படுவது அவசியமாகும். இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் அதேவேளை தொழிலாளர் குடும்பமொன்றிற்கு ஏழு பேர்ச் காணியை ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.     தொழிலாளர்களுக்கு காணி வழங்கி சொந்த வீடுகளில் சுதந்திரமாக வாழ வழிவகுக்க வேண்டும்.

இவதன்

Comments