அரப்பலாகந்த, லிஸ்க்லேன் பிரிவு​; செயலற்றுப்போன 17 லட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

அரப்பலாகந்த, லிஸ்க்லேன் பிரிவு​; செயலற்றுப்போன 17 லட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர்த்திட்டம்

இது குறித்து அன்றைய அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம் அவரது அதிகாரிகள், அமைச்சின் செயலாளராக இருந்த ரஞ்சனி நடராஜபிள்ளை, ட்ரஸ்ட் நிறுவனத்தின் அப்போதைய தலைவராக இருந்த வீ.புத்திரசிகாமணி, திலகராஜ்  எம்.பி மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலரின் கவனத்துக்கு கொண்டுவந்த போதிலும் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை

மக்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தரமானதாகவும் உறுதியானதாகவும் நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

வீடமைப்புத் திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்படும்போது அங்கு போக்குவரத்து வசதி உட்பட இதர வசதிகளும் குறிப்பாக, குடிநீர் வசதி இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சகல வசதிகளுடனும் கூடியது எனக்கூறி ஆரம்பித்து வைக்கப்படும்போது அங்கு அத்தியாவசியத் தேவையான குடிநீர் வசதியில்லாவிடின் அந்த வீட்டுத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை.

பெருந்தோட்டப் பகுதிகளில் கடந்த காலங்களில் நல்லாட்சியில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் இருந்து வருவதுடன் குறிப்பாக குடிநீர் வசதியில்லாத நிலையே காணப்படுவது மிகப்பெரிய குறைபாடாகும்.

களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் சிலவற்றில் குடிநீர் வசதியில்லாத நிலை இருந்து வருவதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

களுத்துறை, தெபுவன அரப்பொலகந்த தோட்டம், லிஸ்க்லேன் பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கிவந்த 29குடும்பங்களின் பாதுகாப்பு கருதி கடந்த நல்லாட்சியின் மலைநாட்டு, புதிய கிராமம் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து தோட்ட நிர்வாகத்தினால் பாதுகாப்பான இடத்தில் காணி ஒதுக்கப்பட்டு தலா 7பேர்ச் காணியில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ட்ரஸ்ட் நிறுவனத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு வீடும் 10லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கே இலவசமாகவே கையளிக்கப்பட்டது.

குடிநீர்த் திட்டத்துக்கென 17லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் குடிநீர்த் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படாத நிலையில் அவசர அவசரமாக வீட்டுத் திட்டத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திறந்து வைப்பதற்கு முதல் நாள் பவுசரில் நீர் கொண்டுவரப்பட்டு வீட்டுக் கூரைகளில் தண்ணீர்தாங்கிகளில் நீரை நிரப்பி வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டது.

இது ஒரு ஏமாற்று நடவடிக்கை என்பது பயனாளிகளுக்குத் தெரியும். ஆனால் வீட்டுத் திட்டத்தை திறந்து வைத்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த ஏமாற்று வித்தை தெரிந்திருக்கவில்லை. ஆனால் யாரோ சில அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த ஏமாற்று வித்தை அரங்கேற்றப்பட்டிருந்ததை ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்தார்கள். 

வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டு சில மாதங்களின் பின்னரே ட்ரஸ்ட் நிறுவனத்தினால் குடிநீர்த் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் பொருத்தமான இடத்தில் கிணறு தோண்டப்படாமல் மழைக்காலத்தில் கழிவுகள் நீரினால் அள்ளுண்டு செல்லும் நீரோடை ஒன்றுக்கு அருகில் கிணறு தோண்டப்பட்டு சிலிண்டர்கள் இறக்கப்பட்டு கிணற்றைச் சுற்றி சிமெந்து கற்களால் கட்டப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வீட்டுத் திட்டத்துக்கு அருகில் உயரத்தில் பொருத்தப்பட்ட சுமார் 20ஆயிரம் லீற்றர் நீரைக் கொள்ளும் பிளாஸ்ரிக் தண்ணீர்த் தாங்கியில் நீர் நிரப்பப்பட்டு அதிலிருந்து குடியிருப்பாளர்களுக்கு நீர் விநியோகிக்கும் முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆனால் இத்திட்டம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலை ஒருபுறமிருக்க, கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் களிமண் நிறமாக இருப்பதால் பயனாளிகள் இந்த நீரை குடிப்பதைத் தவிர்த்து மலசலகூடத் தேவைகளுக்கு மட்டுமே பாவித்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீருக்காக பெருங்கஸ்டங்களை எதிர்நோக்கி வரும் இங்குள்ள மக்கள் நீண்டதூரம் நடந்து சென்று பாழுங்கிணறு ஒன்றிலிருந்தே  குடிநீரைச் சுமந்து வருகின்றனர். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

குடிநீர்த் திட்டத்துக்கென 17லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் குடிப்பதற்கு உகந்த சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து பயனாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அன்றைய அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம் அவரது அதிகாரிகள், அமைச்சின் செயலாளராக இருந்த ரஞ்சனி நடராஜபிள்ளை, ட்ரஸ்ட் நிறுவனத்தின் அப்போதைய தலைவராக இருந்த வீ. புத்திரசிகாமணி, திலகராஜ் எம்.பி மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலரின் கவனத்துக்கு கொண்டுவந்த போதிலும் எந்தவொரு பயனும் ஏற்படவில்லையென பயனாளிகள் கவலை தெரிவித்தனர்.

கடந்த 2018.10.17ஆம் திகதியன்று இந்த அமைச்சுக்கு நான் நேரடியாகச் சென்று திலகராஜ் எம்.பியைச் சந்தித்து இதுபற்றி விபரமாக எடுத்துக்கூறியதையடுத்து அவர் உடனே அமைச்சில் பணிபுரிந்த பெண் அதிகாரியொருவரை அழைத்து அவருடன் பேசினார். அந்த அதிகாரி குடிநீர்த்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு நீர் விநியோகம் இடம்பெறுவதாக கூறி அப்போது சமாளித்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்த போதிலும் இன்றுவரையில் அத்திட்டம் பயனாளிகளுக்கு பயன்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதே உண்மை.

2018ம் ஆண்டு 26ம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட காலஞ்சென்ற எஸ். அருள்சாமியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டபோது நேரில் சென்று பார்வையிட இருப்பதாகக் கூறியபோதும் அவர் திடீரென காலமாகிவிட்டார்.

இங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர்த் திட்டம் குறித்து ட்ரஸ்ட் நிறுவனத்தின் காலி காரியாலய அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், பொறியியலாளர்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொருத்தமான இடத்திலேயே கிணறு தோண்டப்பட்டது என்றும் நீர்வழங்கல் பகுதியினரால் பரிசோதனை செய்யப்பட்டு கொதிக்கவைத்து குடிக்க வேண்டும் என பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இப் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வாக பிரதேச சபை ஊடாக தினமும் பௌசர் மூலம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தொடங்கொட பிரதேச சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எஸ். விஜேபாண்டி மேற்கொண்ட நடவடிக்கையால் பிரதேச சபை மற்றும் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 10லட்சம் ரூபா செலவில் புதிய குடிநீர்த் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குடியிருப்பாளர்கள் பிரதேச சபை உறுப்பினர் எஸ். விஜேபாண்டி மற்றும் பிரதேச சபைத் தலைவர் டெனியல் விஸ்வசாந்த ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மக்களின் நாடித் துடிப்பை   அறிந்த அரசியல்வாதி.

இங்கிரிய மூர்த்தி

Comments