எதிரணியினர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான நேரம் இதுவல்ல! | தினகரன் வாரமஞ்சரி

எதிரணியினர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான நேரம் இதுவல்ல!

தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதாரநெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி, எமக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்தார்.

கே: கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை மீள வழங்குவதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என்று நீங்கள் சர்வதேச ஊடகமொன்றுக்குக் கூறியிருந்தீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. வெளியிலும், நாட்டுக்குள்ளும் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. இந்த சவால்கள் குறித்து தற்பொழுது கவனம் செலுத்தாவிட்டால் நமது பொருளாதாரம், எதிர்காலம் மற்றும் நிறுவனங்கள் யாவும் அழிவைச் சந்திக்க வேண்டி ஏற்படும். எனவே, சுரங்கப்பாதையின் முடிவில் சில நம்பிக்கையைப் பெற அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு நாம் உண்மையான வலியை அனுபவிக்க வேண்டும். எனவே, நாங்கள் பல நடவடிக்கைகள் பற்றிச் சிந்திக்கின்றோம். இந்த விடயங்களை எல்லாம் வெளியிட முடியாது. நாங்கள் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றோம். இவற்றின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொண்டால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இருதரப்பு நிதி வசதிகள் ஆகியவை போட்டிக்கு வரும்.

கே: அரசியல் ஸ்திரமின்மை நாட்டிலும் அதன் பொருளாதாரத்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். நீங்கள் இது பற்றி கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை சந்தித்த மிகக் கடினமான நிதி நெருக்கடி இதுவாகும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வரவிருந்த போது பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுற்றுலாத்துறை ஊடான வருமானம் என்பன குறைவடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பின்னர் முதிர்ச்சியடைந்த கடன்கள் இருந்தன.

எனவே, அந்நிய செலாவணி நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு போன்றவற்றால் உண்மையில் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனை வைத்துக் கொண்டு அரசியல் செய்யத் தேவையில்லை. இந்த விஷயங்களைப் பற்றிக் கிளர்ச்சி செய்ய வேண்டாம் என்று யாரும் கூறவில்லை, ஆனால் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஸ்திரமின்மையால் முதலீடுகள் வருவதிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டியதே அவசியமாகும்.

கே: இலங்கை ஜூலை மாதம் செலுத்த வேண்டிய ஒரு                                                  பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க வேண்டும் என நீங்கள் அண்மையில்                      பாராளுமன்றத்தில் கூறியிருந்தீர்கள்.                அரசியல் மற்றும் மோசமான                                                                   பொருளாதார நெருக்கடிக்கு                 மத்தியில், அரசாங்கத்துக்கு இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்கக் கூடிய நிலைமை காணப்படுகிறதா அல்லது சர்வதேச நாணய நிதியின் உதவி பெறப்பட வேண்டுமா?

பதில்: அந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இப்போது செலுத்துவது முற்றிலும் சாத்தியமில்லை.

எனவே, நாம் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டும், அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. மறுசீரமைப்பைச் செய்யாது, நிதி மற்றும் சட்ட விடயங்களில் கடன் ஆலோசகர்கள் மூலம் அதைச் செய்ய வேண்டும். நாங்கள் கடனை மறுகட்டமைக்கும் போது மட்டுமே IMF உடன் பேச்சு நடத்தி அது ஆதரவளிக்கும். வலாற்றில் முதன்முறையாக, நமது கடன் தாங்க முடியாதது என்ற முடிவுக்கு சர்வதேச நாணய நிதியம் வந்துள்ளது. அதாவது கடனை செலுத்த முடியாது.

எனவே, முதலில் நாங்கள் அதை மறுகட்டமைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதன் பிறகு, அவர்கள் எங்களுக்கு நிதியுதவி அளிப்பர்.

கே: நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மோசமான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  உங்கள் பார்வைகள் எவ்வாறு உள்ளன?                                                                                                                         

பதில்: கொள்கை ரீதியான முடிவுகளால் அல்லது அது என்னவாகஇருந்தாலும் நிலைமை சிக்கலாகியுள்ளது. கொவிட்-19தொற்றுநோய் இதற்கு மிகப் பெரிய பாதிப்பாக அமைந்தது. இதனை விடவும், ரஷ்யப் போரினால் ஏற்பட்ட பாரிய எண்ணெய் உயர்வு மற்றும் சுற்றுலாத்துறை பாதிப்பின் விளைவுகள் நாம் அனுபவித்து வரும் மிகவும் கடினமான சூழ்நிலைக்குப் பங்களித்தன. எனவே, எதிர்க்கட்சிகள் இப்போதைக்கு நிலைமையை மாற்றிக் கொள்ள முயல்கின்றன.

கே: ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அடிப்படையில், இந்த நேரத்தில் தேசநலனைப் பார்க்காமல், தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மீண்டும் வாய்ப்பைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்று நினைக்கிறேன்.

முழு இலங்கை சமூகத்திற்கும் இது மிகவும் கடினமான காலம். இருப்பினும், எதிர்க்கட்சிகள் அதைச் செய்ய விரும்பினால், அவர்கள் பாராளுமன்றத்தில் தங்களிடம் உள்ள எண்ணிக்கையைக் காட்டட்டும். பாராளுமன்றத்தில் அத்தகைய முயற்சியை முறியடிப்பதற்கான எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

கே: ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி கடந்த இரண்டு வாரங்களாக நாடு தழுவிய ரீதியில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீங்கள் இது பற்றி கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: இது நம் நாட்டிற்கு மட்டுமான சூழ்நிலை அல்ல. தற்போது பல நாடுகள் கொவிட்-19நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

பல நாடுகள் கொவிட்-19இற்கு பிந்திய நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உக்ரேனியப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் விலை, சுற்றுலா மற்றும் அனைத்து விநியோகச் சங்கிலியையும் பாதித்துள்ளது.

எத்தகைய தீர்வை விரும்பினாலும் அது இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாகவே இருக்க வேண்டும்.

அர்ஜூன்

Comments