வெறும் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியாது! | தினகரன் வாரமஞ்சரி

வெறும் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியாது!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமெனில், வெறும் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அதனைச் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 21ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் உள்ளிட்ட தற்போதைய நிலைமைகள் குறித்து எமக்கு வழங்கிய பேட்டியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கே: தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முன்மொழியப்பட்ட தேசிய கவுன்சில் ஊடாக அரசியல் கட்சிகளிடையே பொதுவான ஒருமித்த கருத்தை எட்ட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: உண்மையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் எனக் கருதுகின்றேன். 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே நாங்கள் அதை முன்மொழிந்தோம். தற்போதைய நெருக்கடியை ஓரளவுக்கு தீர்க்க இது உதவும் என்று நினைக்கின்றேன்.

கே: பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால், காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசாங்க அரசியல்வாதிகளின் வீடுகள் மீதான தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர். இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நிச்சயமாக இது தடுக்கப்பட்டிருக்க வேண்டும், குறிப்பாக பொலிஸார் வினைத்திறனாக செயற்படவில்லையென்ற கருத்துக் காணப்படுகிறது. தெளிவான உத்தரவு வழங்கப்படாவிட்டால் பாதுகாப்புப் படையினரால் செயற்பட முடியாது. எனினும், அனைத்துப் பிரஜைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது. பொலிஸ்மா அதிபர் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

கே: இது அரசியல் நெருக்கடி மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியும் கூட. இதற்குத் தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: உண்மையில், மக்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வீதிகளில் இறங்குவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். இருப்பினும், அது பெரிதாகக் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதனால், கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, தற்போதைய அரசாங்கம் தனது வேலையைத் தொடங்கிய போதும் அரசியல் நெருக்கடி நீண்ட காலமாக இருந்தது. ஆனால், அது பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு சென்றதை மக்கள் உணர்ந்தனர். பின்னர் மக்கள் மட்டுமே அதைப் பார்க்கத் தொடங்கினர் மற்றும் தங்கள் எதிர்ப்புகளையும் பிற போராட்டங்களையும் தொடங்கினார்கள்.

கே: அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் வரைவில் 19வது திருத்தச் சட்டத்தின் பல விதிகள் கைவிடப்பட்டிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. நீங்கள் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: எல்லா அமைப்புகளும் தனிநபர்களும் தங்களுக்கு மாத்திரம்தான் சரியான விடயங்கள் தெரியும் என நினைக்கின்றனர். அவர்கள் நான்கு முன்மொழிவுகளை அனுப்பிய போது, இரண்டு அல்லது மூன்று ஏற்கனவே காணப்படுபவை ஆகும்.

கேள்வி:இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பதிலாக, ஆளும் கட்சியான தலைமைகளை மாற்றுவதன் மூலம் அரசாங்கம் தனது சொந்த அமைச்சரவையை நியமித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி சாடியுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: உண்மையில், எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பரிந்துரையை முன்வைக்கவில்லை. அதற்கான பரிந்துரையை நானே முதலில் முன்வைத்தேன். அதன் பின்னர், பாராளுமன்றத்தில் உள்ள 53சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் ஊடாக அந்தக் கோரிக்கையை முன்வைத்தோம். எனவே, இடைக்கால அரசை முதலில் பரிந்துரைத்தவர்கள் நாங்கள்தான், எதிர்க்கட்சிகள் அல்ல. பிரதமர் பதவி மற்றும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு பிரதான எதிர்க்கட்சியிடம் நாம் கோரியிருந்தோம். பின்னர் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினராகிய நாம் பிரதான எதிர்க்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தோம். அதனையும் அவர்கள் மறுத்து விட்டார்கள். இப்போது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.  இப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் மறுத்து விட்டு குற்றச்சாட்டுகளை கூற முடியாது. எனவே, அவர்கள் கூறுவது கேலிக்குரிய குற்றச்சாட்டு. அது தொடர்பில் ஜனாதிபதியின் மீது குற்றம் சுமத்த முடியாது. ஆட்சியையும், பிரமர் பதவியையும் ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சிகளுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். அவர்கள் அதற்கு முன்வரவில்லை என்பதாலேயே ஜனாதிபதியினால் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டி ஏற்பட்டது.

கே: நிறைவேற்று அதிகாரம்    கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 19ஆவது திருத்தத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இந்தத் தருணத்தில் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் உண்டா?

பதில்: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமெனில், வெறும் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அதனைச் செய்ய முடியாது. அப்போது நாடு முழுவதும் குழப்பத்தை அதிகரிக்கும்.  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப் போகின்றோமானால் நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் அல்லது கடுமையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். மக்கள் எவ்வளவோ விரும்பினாலும் எங்களால் அதைச் செய்ய முடியாது. உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.  நாட்டில் நிலவும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டால் அதனை செய்வோம். ஆனால் இப்போது செய்ய முடியுமா?

அர்ஜூன்

Comments