மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும் | தினகரன் வாரமஞ்சரி

மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்

லண்டலில் வெளியிடப்படும் இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டங்களையும், போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களைப் பற்றி விவரிக்கும் நூலாக ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ என்கிற தலைப்பில் சி.வி.வேலுப்பிள்ளை எழுதி, மு.நித்யானந்தனும் எச்.எச். விக்கிரமசிங்கவும் தொகுத்த நூலுக்கு   தாய் பதிப்பக உரிமையாளரான முனைவர் குமார் ராஜேந்திரன் எழுதியுள்ள முன்னுரையின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.  

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக உழைத்து, 1947-இல் இலங்கை பாராளுமன்றம் சென்று குரல் கொடுத்த சி.வி. வேலுப்பிள்ளை தன்னுடைய சமகாலத்திய தொழிலாளர்களுக்கான தலைவர்களைப் பற்றி 1958--   -/59-களில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  

இதில் மலையகத் தலைவர்கள் 13பேர்களைப் பற்றியும், மலையகத் தளபதிகள் 13பேரைப் பற்றியும் அவருக்கே உரித்தான பாணியில் எழுதியிருக்கிறார்.  

இலங்கை வாழ் மலையகத் தமிழர்களின் நலனுக்காகக் குரல் கொடுத்த கோ. நடேச ஐயர் முதல், தமிழ் தெரியாத நிலையிலும், மலையகத் தமிழர்களின் துயர் துடைக்க முனைந்தவரான அப்துல் அசீஸ் வரையும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இலங்கை அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான், ஜோர்ஜ் ஆர்.மோத்தா, பெரி சுந்தரம், கே.ராஜலிங்கம், ஐ.எக்ஸ் பெரேரா, எஸ்.பி வைத்தியலிங்கம், குஞ்சுபெரி சண்முகம், ஏ.எஸ். ஜோன், சாரநாதன், சி.எஸ்.சிவனடியான் என்று பல தலைவர்களைப் பற்றி அரிய செய்திகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.  

தளபதிகள் என்ற வரிசையில் எஸ்.சோமசுந்தரம், எஸ்.எம்.சுப்பையா, எஸ்.செல்லையா, கே. குமாரவேல்  தொடங்கி இன்றும் வாழும் முதுபெரும் அறிஞர் பி.பி. தேவராஜ் வரை பலரைப் பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

மலையக மக்களின் போராட்டமும், அவர்கள் போராடியதற்கான சூழலும் இதில் பதிவாகியிருப்பது முக்கியமானது.     இன்றைய இளைய தலைமுறையினருக்கு தங்கள் மலையக மண்ணில் நடந்த ஒடுக்குமுறையையும், மக்கள் எழுச்சியையும் ஒருசேரச் சொல்லும் இந்த நூலில் மலையகத்து மண் ஒட்டியிருக்கிறது.

இந்த நூலைப் பதிப்பித்தவர்களில் ஒருவரான மு.நித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றிய கல்விப் புலத்திலிருந்து வருபவர். சென்னையில் க்ரியா அகராதித் திட்டத்தில் செயற்பட்டவர்.  

லண்டனில் பொருளாதார சாஸ்திரத்தில் ஆசிரியராகவும் ஐரோப்பிய தீபம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவங்கள் கொண்டவர்.  

‘கூலித்தமிழ்’ என்ற இவரது ஆராய்ச்சி நூல் மலையகத்தின் எழுத்து இலக்கிய முயற்சிகளின் தோற்றத்தை ஆராயும் முன்னோடி நூலாகும்.   இந்நூல் தமிழக அறிஞர்களின் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. மலையக இலக்கியங்களைப் பேணுவதில் அக்கறை கொண்டவர்.  

ஏற்கெனவே சி.வி. வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன்’, ‘நாடற்றவர் கதை’ ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். அவருடைய பதிப்பில் சி.வி.யின் நூல் பதிப்புப் பெறுவது சிறப்புமிக்கது.  

இதன் தொகுப்பாசியர்களில் ஒருவரான எனது அன்புக்குரிய நண்பர் திரு. எச்.எச். விக்கிரமசிங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெளிநாடு வாழ் இந்திய மக்களின் நலனில் அதிக ஈடுபாடு கொண்டவர்.  

மலையக எழுத்தாளர் மன்றப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். மலையக மக்களுக்காகவே உழைத்த தொழிற்சங்கத் தலைவர்கள், மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களைப் பற்றித் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளில் வாராவாரம் எழுதி வருகின்றவர்.  

இவர்கள் இருவரும் இணைந்து தான் இந்தத் தொகுப்பு நூலை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இந்த அரிய பணிக்காக மு. நித்தியானந்தனையும், எச்.எச்.விக்ரமசிங்கவையும் உளமாற வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.  

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில் இருந்து தொழிலுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களில் இன்றைய தலைமுறையினர் இந்த நூலை உருவாக்கி அதை இலண்டனில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.  

இந்நூலைத் தாய் வெளியீடாக வெளிக்கொண்டு வருவதற்காக அதன் பதிப்பாளர் என்ற முறையில் பெருமைப்படுகிறேன்.    

Comments