பெருந்தோட்டங்களில் குளவிக் கொட்டு: நிர்வாகங்களுக்கு மட்டுமல்ல: தொழிலாளர்களுக்கும் அக்கறை இல்லை! | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டங்களில் குளவிக் கொட்டு: நிர்வாகங்களுக்கு மட்டுமல்ல: தொழிலாளர்களுக்கும் அக்கறை இல்லை!

தேயிலை மலைகளில் உள்ள மரங்களிலும் அதை அண்டிய பகுதிகளிலும் தேயிலைத் தூர்களிலும் இன்று குளவிகள் கூடுகட்டி வாழ்கின்றன. முன்னர், அதாவது முப்பது வருடங்களுக்கு முன்னர் இரண்டு வகையில் குளவிகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. 

தோட்ட நிர்வாகமே தகுதியானவர்களை அமர்த்தி குளவிக்கூடுகளை சுட்டெரித்து குளவிப் பெருக்கத்தைத் தடுத்தது. தோட்டங்கள் தோறும் குளவி சுடுபவர்கள் இருந்தனர். இவர்கள் குளவிக்கூடுகளை மிக நாசுக்காக சுடுவர். 

இரவு வேளையில் பெரிய பந்தங்களைக் கொண்டு கூடுகளைச் சுடுவார்கள். கீழே விழும் குளவிகளை மானா போன்ற பற்றைகளைக் கொண்டு எரிப்பர். இப்படி குளவிகள் சுட்டு அழிக்கப்பட்டு மக்களை தோட்ட நிர்வாகங்கள் காத்துவந்தன. 

இதேவேளை, தேன் எடுக்கும் வித்தை அறிந்தோர் எல்லா தோட்டங்களிலும் இருந்தனர். இவர்கள் பலவிதமான வித்தைகளைக் கையாண்டு தேன் எடுப்பார்கள். சுருட்டுப் புகையை ஊதி குளவிகளை விரட்டி தேன்ராட்டைகளை வெட்டி எடுப்பர். 

குளவிகளின் பெருக்கம் இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது. மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் இடம் பாதுகாப்பற்றது என குளவிகள் கருதி மனித நடமாட்டம் அற்ற பகுதிகளில் மறைவாக கூடுகட்டி வாழ்ந்து வந்தன. 

இன்று தோட்ட நிர்வாகங்கள் குளவிக்கூடுகளை சுட்டெரிப்பதில்லை. தேன் எடுப்பவர்களும் எம் மத்தியில் இல்லை. தேனீக்கள் தாவர இனப்பெருக்கத்திற்கு பெரும் உதவிபுரிந்து வருவதால் தேனீக்களைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும். 

இதனால் தோட்ட நிர்வாகம் கூடுகளை சுட்டு அழிக்க முன்வருவதில்லை. தோட்டத் தொழிலாளர்களே தாமாக முன்வந்து குளவிக்கூடுகளை சுட்டெரிக்கின்றனர். இன்று சட்ட சிக்கல், பொலிஸ் பயம் என இவர்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. 

இதேவேளை இன்று தேயிலை மலைகள் காடாகி வருகின்றன. தோட்ட நிர்வாகம் தேயிலையில் கிடைக்கும் வருமானத்தை விட மரங்கள் வளர்த்து வெட்டுவதன் மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிவருகின்றன.  தேயிலை மலைகளில் ஏராளமான உயரமான மரங்கள் காணப்படுகின்றன. இவை பூக்கும் காலங்களில் இவற்றில் தேனீக்கள் கூடுகட்டுகின்றன. நட்ட வளர்க்காத வாகையின மரங்கள் தேயிலை மலைகளிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் வளர்ந்து பெரும் விருட்சங்களாக உள்ளன. இவற்றில் நல்ல தேன் சுரக்கும் பூக்கள் இருப்பதால் இவை பூக்கும் காலங்களில் இந்த மரங்களில் கூடுகளை கட்டுகின்றன. 

கூடுகளை நல்ல தேன் பிடிக்கும் காலத்தில் பருந்துகள் வந்து தேன்ராட்டைகளை கௌவிக்கொண்டு செல்கின்றன. ஆத்திரமடைந்த குளவிகள் கோபத்தோடு பருந்தை துரத்தும்போது பருந்துகள் நரித்தனமான ஒரு வேலையை செய்கின்றன. 

மனிதர்கள் அல்லது ஆடு மாடு போன்ற விலங்குகள் உள்ள இடங்களில் செங்குத்தாக தரையிறங்கி சில நொடிகளின் பின்னர் மேல் எழும்பிப் பறக்கின்றன. பருந்தைத் துரத்தும் குளவிகள் அவ்விடத்தில் உள்ள அப்பாவி மனிதர்களை அல்லது விலங்குகளை தாக்குகின்றன. பல குளவிக் கொட்டுகள் பருந்தின் சதியால் ஏற்படுபவை. ஏனெனில் குளவிக்கூடுகளை  பெரும்பாலும் கலைப்பது பருந்துகளே. 

தற்போது குளவிகள் தேயலைத் தூர்களிலும் கூடுகட்டுகின்றன. இவற்றை அறியாத எமது தொழிலாளிகள் அதிக கொழுந்துக்காக கூடுகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் தேயிலை கொய்யும் போதும் குளவிக் கொட்டுக்கு ஆளாகின்றனர். 

தேயிலைத் தூரில் இருக்கும் குளவிக்கூடுகளில் கால்பட்டு கூடு கலைந்துவிட, குளவிகள் கோபமடைந்து தாக்குகின்றன. தூர்களில் கட்டப்படும் கூடுகளை அகற்ற தோட்ட நிர்வாகங்கள் மட்டுமல்ல: தொழிலாளர்களும் அக்கறை கொள்வதில்லை. 

வேலைசெய்த களைப்பில் இருக்கும் இவர்கள் குளவி துரத்தும் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடமுடியாது அகப்பட்டு கொள்கின்றனர். உடனடியாக புகைமூட்டவும் வசதி இல்லை. தென் பிறகு குளவிக்கொட்டுக்கு உள்ளானவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வாகனமும் உடனடியாகக் கிடைப்பதில்லை. 

பயனளிக்கும் பாதைகளோ ஓடைகளாக இருக்கின்றன. விரைவாக பயணிக்க முடியாது.ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன் இறந்தவர்களும் குணமடைந்து வந்தாலும் இவர்கள் நடைப்பிணம்தான். 

ஏனெனில் குளவிக்ெகாட்டுக்கு உள்ளானவர்களில் உடல் வலுவிழந்து விடுகின்றது. கஷ்டமான வேலைகளைச் செய்ய முடியாது. அதேநேரம் தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு இலகு வேலை கொடுப்பதும் இல்லை. பலர் தொழிலைவிட்டு விடுகின்றனர். 

அடிக்கடி கூட்டம் போட்டு கோஷம் எழுப்பும் சங்கங்கள் தொழிலாளர்களை குளவிகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளையாவது எடுத்ததுண்டா? 

வைத்தியர் வேண்டாம். வாத்தியார் வேண்டாம். கங்காணி வேண்டாம் கணக்கப்பிள்ளை வேண்டாம் எனப் போராடும் தொழிலாளர்கள் தமது உயிர் பாதுகாப்பை கோரி போராட்டங்களை செய்ததுண்டா? இல்லையே! 

புசல்லாவ ரொட்சைல்ட் ஓ.ஆர்.சி தோட்டத்தைச் சேர்ந்த 54வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை பழனி இராஜேந்திரன் தோட்டத் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது மதியம் 12மணியளவில் குளவிக்கொட்டுக்கு உள்ளானார். 

புசல்லாவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றும் பயனில்லை. இவருக்கு நட்டஈடு எதுவும் வழங்கப்படவில்லை. என்ன? தொழில் சட்டக்கோவையில் இது தொடர்பான சரத்துக்கள் உள்ளனவா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

இதேதினத்தன்று நோர்வூட் பகுதியில் ஒருவரும் குளவிக்கொட்டால் உயிழிந்தார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் வெணிக்கொண்டுவரப்பட வேண்டும். 

ஆர். நவராஜா
படங்கள் : தெல்தோட்டை தினகரன் நிருபர்) 

Comments