வாழ்க்கைச்செலவு உயர்வும் கைக்கெட்டாத சம்பள அதிகரிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

வாழ்க்கைச்செலவு உயர்வும் கைக்கெட்டாத சம்பள அதிகரிப்பும்

ன்றைய நிலையில் வாழ்க்கைச் செலவு தினம்தினம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு கொள்ளை இலாபமடிக்கும் வர்த்தகர் சிலரின் நடவடிக்கைகளால் நிலைமை மேலும் மோசமடையவே செய்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கோ கண்காணிப்பதற்கோ கையாளாகாத நிலையில் பொறுப்பு சார்ந்த துறைகள் வாளாவிருக்கின்றன. 

நினைத்தாற்போல உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடிய வாய்ப்பு உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் காட்டில் மழையான மழை. பாவம் நுகர்வோர் விழிபிதுங்கி நிற்கிறார்கள். குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் பாடு பெரும்பாடு. ஏற்கனவே பற்றாக்குறை வாழ்க்கை. இறுதி நிலவரப்படி வெதுப்பக (BAKERY) உற்பத்திகள் விலை அதிகரிக்கப்பட்டுவிட்டன. பாணின் விலை 190ரூபாவாகியுள்ளது. மாவின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம். 

உணவுக்காக கோதுமை மாவை அதிகமாக பயன்படுத்த பழகிப் போனவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள். இது ஆங்கிலேயர் காலந் தொட்டு பரம்பரையாக தொடரும் உணவுப் பழக்கமாக காணப்படுகின்றது. திடுதிப்பென்று வழக்கத்தை மாற்றிக்கொள்ள எவராலும் இயலாது. தவிர அரிசி உணவை அதிகமாக பயன்படுத்தும் அளவுக்கு அரிசி விலை இல்லை. 300ரூபாவை தொட்டு நிற்கின்றது. அத்துடன் கோதுமை மாவுக்கு மாற்றீடாக உப உணவுப் பொருட்கள் தேவைக்கேற்ப கிடைப்பதும் இல்லை. குறிப்பாக மரவள்ளிக் கிழங்கு. இதேவேளை சாமை, குரக்கன் போன்ற தானிய வகைகளை மாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம் என்று சிலர் ஆலோசனை வழங்குகிறார்கள். இத்தானியங்கள் தேவையான அளவு கிடைப்பது இல்லை என்பதோடு விலையைக் கேட்டாலே குலை நடுங்கும்.  

இந்நிலையில் மாவிற்கு மாற்றீடு எதுவுமே இருப்பதாகப்படவில்லை. கவ்பி, கடலை, பயறு பக்கம் எட்டிப் பார்க்கவே பயமாக இருக்கின்றது. மூவேளையும் அரிசி உணவைப் பயன்படுத்தும் அளவுக்குப் போதிய வருமானம் கிடைக்கவா செய்கின்றது? தவிர வெறும் மா ரொட்டியைக் கடித்துக் கொண்டு தேனீர் குடித்துக்கூட ஒரு நேர சாப்பாட்டை முடித்துக் கொள்ளலாம். ஆனால் சோறு என்றால் குறைந்தப்பட்சம் ஒரு கறியோ சம்பலோ கட்டாயம் இருந்தாக வேண்டும்.  

தேங்காய் விலை குறைந்தப் பாடில்லை. மரக்கறி விலை மட்டும் மலிந்து போய்க் கிடக்கின்றதா என்ன. பெருந்தோட்டப் பிரதேசங்களில் மரக்கறி உற்பத்தி மந்தநிலையை அடைந்துள்ளது. காரணம் பசளை இல்லாமை. தற்போது நாட்டுக்குள் பசளை வந்து சேர்ந்திருந்தாலும் அதில் பெருந்தோட்டப் பிரதேசங்கள் பயன்பெறுமா என்பது சந்தேகமே. பொதுவாக பெருந்தோட்டப் பிரதேசங்களில் உப உணவுப் பொருட்களே உற்பத்தியாகின்றன. தற்போது 40சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தையில் மரக்கறி விலைகளும் உயர்ந்து காணப்படுகின்றன. எனினும் இங்கு முழுமையான பயன் உற்பத்தியாளர்களான தொழிலாளர்களுக்கு கிடைப்பது இல்லை. தரகர்களும் வியாபாரிகளும் பெருத்த இலாபம் பெறுகிறார்கள். தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் அங்கும் அல்லாட்டம்தான்.  வருமானமோ கம்மி. வாழ்க்கைச் செலவோ எட்டமுடியாத உயரம். வேலை நாட்களும் குறைவு. அவர்களுக்கான நாட்சம்பளம் முழுமையாக கிடைப்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் நிலவுகின்றன.

நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி கம்பனித்தரப்பு தப்பிக்கொள்கிறது. ஆனால் தற்போதைய விலைவாசி அதிகரிப்பு எதிர்காலத்தில் இறங்கு முகம் காட்டும் என்று யாராவது சொன்னால் அது வேடிக்கையாகவே இருக்கும்.  

தோட்ட மக்களின் வாட்டம் போக்கக்கூடிய ஒரேவழி சம்பள அதிகரிப்பாகவே காணப்படுகின்றது. இன்னொரு வகையில் கூறுவதாயின் வருமானத்தை உயர்த்துவது. அதற்கான மாற்று தொழில் வாய்ப்புகள் எதுவும் இங்கு இல்லை.

ஒன்று தேயிலை தொழிற்துறை, அடுத்தது விவசாயம் அல்லது சுயதொழில் முயற்சி. விவசாயம் செய்வதற்கு போதுமான இடவசதி இம்மக்களுக்கு இல்லை. இருப்பதையும் பிடுங்கிக் கொள்ளப் பிரயத்தனப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் மீது புகார்கள் வந்துள்ளன.

தரிசுநில விநியோகம் தாமதப்பட்டு நிற்கின்றது. இதில் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கு இதுவரை எந்தவித உத்தரவாதமும் தரப்படவில்லை.  

இதேநேரம் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கக்கூடிய செயற்திட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. தவிர அதற்கான அறிகுறிகளும் கூட தென்படவில்லை. 

இதன் பின்புலத்தில் 1000ரூபாய் தினக்கூலி எந்த மூலைக்கு என்று தொழிலாளர் ஏக்கப்பெருமூச்சு விடுவதில் அர்த்தம் இருக்கவே செய்கின்றது. பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தமக்குள்ளே ஒற்றுமையின்றி ஆளுக்கொரு கருத்தை முன்வைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

இ.தொ.கா. ஒரு கட்டத்தில் 1000ரூபா சம்பள அதிகரிப்பை கோரியபோது வடிவேல் சுரேஷ் என்ன சொன்னார் தெரியுமா? இது சாத்தியமற்றது. உள்ளுர் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் தேயிலை விலை சரிவு காரணத்தால் இது சரிப்பட்டு வராத சங்கதி என்றார் வடிவேல் சுரேஷ். இவரே பின்பொரு சந்தர்ப்பத்தில் 1000ரூபா போதாது. இரண்டாயிரமாவது வழங்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார். 

இப்படி புரிந்துணர்வு இல்லாத போக்கில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் செயற்படுவதால் கம்பனி தரப்புக்கு இலகுவாக காய்நகர்த்த முடிகின்றது. 1000ரூபா நாட் சம்பளம் வழங்குவதில் கம்பனித் தரப்புக்காட்டும் அசிரத்தைக்கு தொழிற்சங்கங்களின் பலவீனமே அடிப்படைக் காரணமாக உள்ளது.

உண்மையில் 1000ரூபா நாட் சம்பளம் தற்போதைய நிலையில் போதுமானதல்ல. அது 2000வரையில் அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது நியாயமான எதிர்பார்ப்பு. எனவே இதற்கான முயற்சிகளில் சகல மலையக தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக இறங்க வேண்டும்.

கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பு சமாச்சாரத்தைக் கேலிக்கூத்தாக்கியது போதும். இது வயிறு சார்ந்த ஒரு சமூகத்தின் தேவை.

திரைமறைவில் தீர்மானிக்கப்பட வேண்டிய சங்கதி அல்ல இது. சகல தரப்பும் அர்ப்பணிப்புடன் சாதித்துக்காட்டக் கடமைப்பட்டுள்ள விவகாரம்.    

பன். பாலா

Comments