டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

கே. அசோக் குமார்

டெங்கு நுளம்புகள் ஒழிப்பு பிரிவிலிருந்து 100 பேர் நாளை திங்கட்கிழமை திருகோணமலை, கிண்ணியா பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்தார். நாடு முழுவதும் 21,000 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், இதில் சுமார் 8,800 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக 500 பேர் சுகாதார அமைச்சுக்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களின் 100 பேரை உடனடியாக கிண்ணியாவுக்கும் திருகோணமலை பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நேற்றுக் காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பயிற்சியை முடித்துக்கொண்ட டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவினைக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகள் ஒழிப்பு பிரிவுக்கு 1500 பேரை சேர்த்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. முதற்கட்டமாக 500பேர் மேல் மாகாணத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எஞ்சிய 1000பேர் விரைவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம் எதிர்வரும் 29ஆம் திகதியிருந்து தீவிர டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் ஒன்றை பிரகனப்படுத்தியுள்ளது. கிழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாகவே டெங்கு தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, கிண்ணியா, மட்டக்களப்பு பகுதிகளில் 3821பேர் டெங்கு காய்ச்சலுக்குள்ளாகியுள்ளனர் மட்டக்களப்பு 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பகுதியில் 730 பேரும் அம்பாறையில் 100 பேரும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலினால் இறப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் பச்சிளம் குழந்தைகள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. கிண்ணியாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

எனவே டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை தேடிக் கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கு விசேட செயலணி அனுப்பிவைக்கப்படுகிறது. என்றும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

Comments