151 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை பொலிஸ் திணைக்களம் | தினகரன் வாரமஞ்சரி

151 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை பொலிஸ் திணைக்களம்

ஆங்கிலத்தில் –  
றுவன் குணசேகர 
(சட்டத்தரணி)  
தமிழில் – 
இரா. இராஜேஸ்வரன்

 

 இலங்கையில் பொலிஸ் சேவை உத்தியோகபூர்வமாக தாபிக்கப்பட்ட தினமாகிய “செப்டெம்பர் 03” வரலாற்றுப் புகழ் மிக்கதாகும். பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது, இலங்கை பொலிஸ் சேவை யின் வரலாறு நீண்டதாகவே கருதப்படுகின்றது. நவீன பொலிஸ் சேவையின் தந்தையென அழைக்கப்படும் சேர் ரொபர்ட் பீல் இங்கிலாந்தில் 1829ஆம் ஆண்டில் தாபித்திருந்த பெருநகர பொலிஸ் சேவையே உலகில் முறைசார்ந்த ரீதியில் தாபிக்கப்பெற்ற முதலாவது பொலிஸ் சேவையாகக் கருதப்படுகின்றது. அது தாபிக்கப்பட்டு 37 வருடங்கள் கழிந்த நிலையில், 1865ஆம் ஆண்டில் 16ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 1866ஆம் ஆண்டில் தாபிக்கப் பெற்ற இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்று தனது 151 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.

வளர்ச்சியடைந்து வரும் பொலிஸ் முறையொன்றை அபிவிருத்தியடைந்துள்ள ஒவ்வொரு சமூகத்திலும் இன்று நாம் காணலாம். பண்டைய இலங்கையின் மன்னராட்சிக் காலத்திலும் கூட, பொலிஸ் கடமையை ஒத்த 'நகர காவலர்’ (Nagara Guththika) எனும் பெயரிலமைந்த பதவியொன்று பந்துகாபயன் (கி.பி 437-367) மன்னனின் ஆட்சிக் காலத்தில் இருந்துள்ளதனை பண்டைய வரலாற்று நூலான மகாவசம்சம் பதிவு செய்துள்ளது. மேலும், கிராமிய நிருவாக முறைமையொன்றைத் தாபித்தலும் அநுராதபுர நகரை நிருவாக மையமாகக் கட்டியெழுப்புவதும் அதே காலப்பகுதியிலேயே தொடங்கியிருந்தன. அதன் பின்னர், பல்வேறு மன்னர்கள் குடிமக்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் இரண்டாம் உதய மன்னன் (கி.பி 887-898) ஏற்ற கிராம சபை முறைமையொன்றை (Gamsabha System) தாபித்திருந்ததாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கடந்த 1795ஆம் ஆண்டின் கொழும்புத் துறைமுகத்தில் உள்ள களஞ்சிய சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரோந்து மூலம் பாதுகாப்பு சேவையை வழங்கும் ஒரு நடவடிக்கையாக இலங்கையில் பிரித்தானியரால் பொலிஸ் சேவை முறைசாராத வகையில் தாபிக்கப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு அயோக்கியத்தனமான செயற்பாடுகள் இடம்பெறாத வண்ணம் தடுப்பதற்கென உருவாக்கப்பட்ட பொலிஸ் விதானை முறைமையில் காணப்பட்ட பற்றாக்குறை காரணமாகவும், நேர்த்தியான பொலிஸ் சேவையொன்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரச சேவையிலிருந்த அதிகாரிகளால் செய்யப்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் காரணமாகவும் முறை சார்ந்த பொலிஸ் சேவையொன்றின் தேவை உணரப்பட்டது.

இதன் பலனாக, கொழும்புப் பகுதியை 15 பொலிஸ் வலயங்களாகப் பிரித்து, 10 பொலிஸ் சார்ஜன்ட் மார் 05 பொலிஸ் கொஸ்தாப்புகள் மற்றும் 150 சேவகர்கள் ஆகியோரைக் கொண்ட இலங்கை பொலிஸ் சேவை 1832ஆம் ஆண்டளவில் முறை சாராத வகையில் தாபிக்கப்பட்டது. அதன் பின்னர், காலி, நீர்கொழும்பு மற்றும் கண்டி போன்ற ஏனைய பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்கள் தாபிக்கப்பட்டன. இலங்கையின் முதலாவது பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில், ‘ஊவா திசாவ’ (Uva Disawe) என்றும் பதவி வகித்து வந்தவரான திரு. லொக்கு பண்டா துனுவில கண்டிப் பிரதேசத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார். 1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், உத்தியோகபூர்வ பொலிஸ் சேவை தாபிக்கப்பட்ட பின்னர், பிரதம பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த திரு. ஜீ் டபிள்யூ. ஆர். காம்பெல் முதலாவது பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டார். சேர் ரிச்சாட் அலுவிவகார கடந்த 1947ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமை பொலிஸ் வரலாற்றில் திருப்பு முனையாகும். அவர் பொலிஸ் சேவையின் நீடித்த தன்மைக்கும் பொலிஸ் அதிகாரிகளின் சேம நலத்திற்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் பொலிஸ் அதிகாரியொருவர் கடமையின் போது தனது இன்னுயிரைத் தியாகம் செய்திருந்த முதலாவது சம்பவம் மாவனெல்லையில் உள்ள உத்துவன்கந்த எனுமிடத்தில் கடந்த 1864ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி (புதன் கிழமை) நிகழ்ந்திருந்தது. டீகிரிகேவகே சரதியல் எனும் பெயருடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கென நடத்தப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது சபான் எனும் பெயருடைய குறித்த பொலிஸ் அதிகாரி இன்னுமொரு சந்தேக நபரான மம்மல் மரிக்கார் என்பவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி வீரமரணம் அடைந்தார்.

1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கி பொலிஸ் கட்டளைச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட பொலிஸ் சேவையொன்றை தாபித்ததன் மூலம் பொலிஸ் மாவீரர்கள் பற்றிய பதிவேடொன்றைப் பேணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பொலிஸ் சேவையொன்றை ஆரம்பிக்க பேருதவியாக அமைந்தது. இலங்கையில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த பொது நிறுவனங்கள் மத்தியில் சட்டம் மற்றும் ஒழுங்கினைப்பு பாதுகாப்பதற்கான முன்னணி நிறுவனமாக இலங்கைப் பொலிஸ் திணைக்களமே விளங்குகின்றதெனப் பெருமையுடன் குறிப்பிடலாம்.

பொதுமக்களின் இன்னுயிர்கள் மற்றும் சொத்துக்கள் மற்றும் இலங்கையின் பிராந்திய மேன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்னுயிர்களை துணிச்சலாக தியாகம் செய்திருந்த 3117 பொலிஸ் அதிகாரிகளின் மறைவை நாம் ஆழ்ந்த மரியாதையுடன் நாம் நினைவு கூரவேண்டும்.

கடந்த 1915ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவமொன்று, இந்த நாட்டு மக்களின் இன்னுயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவென கலகம் அடக்கும் பொலிஸாரின் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டதனை பதிவு செய்தது. இலங்கை அரசாங்கத்தினால் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இராணுவச் சட்டம் முதன் முதலாக பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் அந்த அதிகாரம் பாதுகாப்பை வழங்கும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தமையும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. மேலும், இலங்கைக் குடியரசு தாபிக்கப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் (1948-1971) இடம்பெற்றிருந்த பல வன்முறை நிகழ்வுகளின் போது பொலிஸ் திணைக்களம் ஆகக் குறைந்த வசதிகளுடன் மனித உயிர்கள் மற்றும் சொத்து இழப்பைக் குறைப்பதற்கான தமது கடமையை நிறைவேற்றியிருந்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். இந்தக் காலப்பகுதியில், முதலாவது பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் கொல்லப்பட்டார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தமது இன்னுயிர்களை தியாகம் செய்த 15 பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள்களின் மறைவை நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.

அதற்குமேலாக, இலங்கைப் பொலிஸார் பயங்கர வாதத்திற்கு கெதிரான முப்பது வருட கால யுத்தம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்டிருந்த புரட்சியின்போது தாய் நாட்டிற்காக முப்படைகளுடன் ஒன்றிணைந்து தமது உயிர்களைப் பணயம் வைத்துப் போராடியிருந்தனர்.

வருடத்தின் 365 நாட்களும் இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரினதும் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கென அல்லும் பகலும் சேவையாற்றி வரும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திடம் 87,000 உத்தியோகத்தர்களையும் 484 பொலிஸ் நிலையங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த தாபனக் கட்டமைப்பை 600 தொழிற்படு பொலிஸ் நிலையங்களாக அதிகரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி, பிரதமர், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் இது சம்பந்தமாக விசேட கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது. 150 வருட காலப் பகுதியில் பிந்திய 50 வருடகாலப் பகுதியில் முக்கிய சவால்களுக்கு முகங்கொடுத்த இலங்கைப் பொலிஸார் எண்ணிக்கையில் அடங்காத வெற்றிகளை ஈட்டினர். விசேடமாக, யுத்த காலத்திலும், யுத்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியிலும் குற்ற செயல்களை முறியடிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில், நாட்டிற்குள் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் கணிசமான அளவில் சாதனை எட்டப்பட்டது.

மேற்கூறப்பட்டவை ஒரு புறமிருக்க, ஏனைய அரச நிறுவனங்களால் ஆற்றப்பட்டுவரும் கடமைகளுக்குப் பங்களிப்புச் செய்வதும் பொலிஸாரின் பொறுப்புக்களுள் ஒன்றாகும். அதன் பிரகாரம், இலங்கைப் பொலிஸ் திணைக்களம் சூழல் பாதுகாப்பு, கரையோரப் பாதுகாப்பு, சட்ட விரோத மணல் அகழ்வு, நெற்காணி மற்றும் சதுப்பு நிலங்கள் சீர்பாடு சட்ட விரோத மதுபாவனை முதலியவற்றைத் தடுப்பதில் தொடர்ந்தும் பாரிய வகிபாகத்தைக் கொண்டுள்ளதுடன் குற்றஞ் சாட்டப்படுவோரை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியும் வருகின்றது.

மேலும், பொதுமக்களின் நலனோம்புகையை விருத்தி செய்வதை எட்டும் வகையில், புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம்,

* சொத்துக்கள் சம்பந்தமான குற்றச்செயல்களுக்கு தீர்வைக்காணும் தற்போதைய செல்நெறியை 70 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

* சூழ்நிலைசார் சான்றுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கென புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளல்.

* முற்று முழுதான கணனி மயப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தைப் பாவித்து குறுகிய காலப்பகுதிக்குள் கைவிரல் அடையாள ஒப்பீட்டுப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளல்.

* இந்த இலக்கை அடைவதற்கு, குற்றச்செயல் குறித்த அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள கணனி நிகழ்ச்சித்திட்டம் உதவும்.

* விபத்துக்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் கடுமையான சேதம் ஆகியவற்றின் எண்ணிக்கையை மேலும் 10 சத வீதத்தினால் குறைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “போதைப் பொருளற்ற ஒரு நாடு” எனும் எண்ணக் கருவை யதார்த்தமாக்குவதில் பங்களிப்பும் செய்தல். இந்த இலக்கை அடைவதற்கு.

* விசேட பொலிஸ் பிரிவொன்றைத் தாபித்து, ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து போதைப் பொருள் தடுப்புக்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளல்.

* போதைப் பொருளுக்கு அடிமையானோருக்குப் புனர்வாழ்வு அளிக்கக் கூடிய வகையில் வழிப்படுத்தல்.

* புகையிலை உற்பத்திகள் பாவனையை இல்லாது ஒழித்தல்.

151 ஆவது பொலிஸ் தின ஞாபகார்த்த உத்தியோகபூர்வ வைபவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 07ஆம் திகதி பிற்பகல் 20.30 மணிக்கு பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படை தலைமையக மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி வைபவ அணிவகுப்பில், பொலிஸ் பரசூட் காட்சிப்படுத்தல்கள், பொலிஸ் பான்ட் வாத்திய இசை வழங்கல் மற்றும் தேகப்பயிற்சி ஆகியவை அடங்குகின்றன.

இந் நிகழ்வுக்கு அணி சேர்க்கும் வகையில், மோப்பநாய் படைப் பிரிவு மற்றும் குதிரைப்படைப் பிரிவு ஆகியவற்றால் அற்புதமானதோர் காட்சிப்படுத்தல் இடம்பெறவுள்ளது. இந்த வைபவத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு தேகப் பயிற்சி நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்கும் வசதியேற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை பொலிஸ் திணைக்களம் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் எதுவித குற்றச்செயல் மற்றும் வன்முறை இல்லாத அமைதியானதும் செழிப்புள்ளதுமான சமூகமொன்றில் வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கும் அதேவேளையில், அதன் மகத்தான கடந்த கால, தற்போதைய மற்றும் ஒளிமயமான எதிர்கால செயற்பாடுகளைக் கொண்டு அதன் தனிச் சிறப்பு பயணத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்பதனை இந்த 151ஆவது பொலிஸ் தினத்தில் ஞாபகப்படுத்துவதில் நான் பெருமைப்படுகின்றேன். 

 

Comments