இலங்கை திருப்பதி | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை திருப்பதி

ஞ்சள் நீரால் கழுவி பக்தி சிரத்தையுடன் இரண்டு கைகளாலும் ஏந்திய தேங்காயில் கற்பூரத்தை ஏற்றி வழிபடும் பக்தர்கள், விரைவில் எரிந்து மறைந்து போகும் கற்பூரம் போன்றது மனித வாழ்க்கை என்பது அனைவரும் அறிவர்.

அந்தக் குறுகிய காலத்தில் அவர்கள் வாழ்க்கையில் தோன்றும் துன்பங்களை துயரங்களைத் துடைக்க சரணாகதியடைவது இறைவனின் பாதங்களையே.

இந்து மத நம்பிக்கையின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் காக்கும் கடவுள் மகா விஷ்ணுவாகும்.

இந்து மக்களிடம் காணப்படும் இந்த நம்பிக்கை ஏனைய மதத்தவர்களிடமும் காணப்படுகின்றது. குறிப்பாக சிங்கள பௌத்த மக்களிடமும் இந்நம்பிக்கை காணப்படுவதால்தான் பிரார்த்தனை, வேண்டுதல்களுடன் மகாவிஷ்ணு குடியிருக்கும் கர்ப்பக்கிரகத்தை நோக்கி வருகின்றார்கள்.

இந்த மோதர விஷ்ணு கோயிலில் முப்பத்து மூன்று சுவாமிகள் எழுந்தருளியுள்ளார்கள். அறிவுக்குத் தலைவனான கணபதி தொடக்கம், விஷ்ணு துர்கா, காலபைரவர், கருடாழ்வார், குபேர பகவான், தன்வந்திரி, ஸ்ரீஹயிங்கிரிவர், ஸ்ரீ ஆதிலட்சுமி, விஜயலட்சுமி, வரலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. ஒவ்வொரு கடவுளும் மக்களுக்கு வெவ்வேறு வகைகளில் உதவி புரிகின்றவர்கள்.

துன்பத்துக்குப் பதில் மகிழ்ச்சி, அதிருப்திக்குப் பதிலாக நிம்மதி, மனசஞ்சலங்களுக்குப் பதிலாக எதிர்பார்ப்பு இப்புண்ணிய பூமியில் மக்களுக்குக் கிடைக்கின்றது. வாதப் பிரதிவாதங்கள், பலவித எண்ணங்களை மனதை விட்டு அகற்றிய ஆயிரக்கணக்கான மக்கள், நம்பிக்கையை மாத்திரம் மனதில் கொண்டு வழிபாடு நடத்துகின்றார்கள்.

சில வேளைகளில், இலங்கையிலுள்ள “திருப்பதி் கோயில் என பக்தர்கள் எண்ணுகின்றார்கள் போல் தெரிகின்றது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது என துரைசாமி முதலாளி கூறுகின்றார். கந்தசாமி துரைசாமி எனக் கூறினால் தெரியாதவர்கள் கூட ‘ரஞ்சனாஸ் முதலாளி எனக் கூறினால் அறிவார்கள். எமது நாட்டில் ஐம்பது வருட கால சரித்திரத்தையுடைய ரஞ்சனாஸ் நிறுவனத்தை உருவாக்கிய அவர், பலருக்கு தொழில் வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளார். அவ்வாறான வியாபாரி ஒருவருக்கு காலம் என்பது பொன் போன்றது. தன்னுடைய காலத்தையும் நிதியையும் ஏனையவர்களுக்கு அர்ப்பணிக்க எண்ணாத வியாபாரிகளிடையே அவரும் அவரது புதல்வர் துரைசாமி விக்னேஸ்வரனும் மாறுபட்டவர்கள்.

“இங்கு பெருமளவு இந்து, பௌத்த பக்தர்கள் வருகிறார்கள். இங்கு எழுந்தருளியிருப்பது இந்து கடவுளாகும். கடவுள் மதத்தையோ, இனத்தையோ பார்த்து அருள் பாலிப்பதில்லை. இந்த புண்ணிய பூமியின் சமாதானமும் நல்லிணக்கமும் மாத்திரமே உள்ளன. இங்கு பல பிரச்சினைகள், வேதனைகளுடன் வரும் பக்தர்கள் அதனை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு மன அமைதியுடன் திரும்பிச் செல்கின்றார்கள். அந்த நிம்மதியை பணத்தால் வாங்க முடியுமா? நோயற்ற வாழ்வை பணத்தால் வாங்க முடியுமா? பணம் சம்பாதித்தாலும் நாம் அதனை மறக்கக் கூடாது.

இந்தக் கோயிலை அமைக்க எண்ணியது யார்? எத்தனையோ கோயில்கள் இருக்கும் போது இன்னொரு கோயில் எதற்கு? இவ்வற்றிற்கான பதிலை அவர் ஒருவரால்தான் கூறமுடியும்.

“இந்தியாவில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலானது ஆயிரக் கணக்கான பக்தர்கள் வழிபடும் இடமாகும். எனது வாழ்நாளில் அறுபது தடவைக்கும் அதிகமாக திருப்பதிக்குச் சென்றுள்ளேன். திருமணத்தின் பின்னர் எனது மனைவியுடனேயே திருப்பதி கோயில் தரிசனத்துக்குச் சென்றேன். முப்பது வருடங்களாக திருப்பதி கோயிலை கும்பிட்டுவிட்டு வெளியே வரும்போது “நாமும் இலங்கையில் இது போல கோயில் ஒன்றை கட்டுவோம். எல்லோருக்கும் பணம் செலவழித்துக்கொண்டு இங்கு வரமுடியாதல்லவா? என்று என் மனைவி கூறுவார்.

இவ்வாறு கூறினாலும் கோயிலொன்றை அமைப்பது இலகுவான விடயமா? ஆனாலும், எனது மனைவி அதனைவலியுறுத்துவதை நிறுத்தவேயில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் திருப்பதி சென்று இலங்கைக்கு திரும்பி வந்தபோது அவர் சேமித்து வைத்திருந்த 10 இலட்சம் ரூபாவை எனது கைகளில் தந்து இதைக்கொண்டு கோயிலைக் கட்ட ஆரம்பியுங்கள். எங்களுக்கு எப்படியாவது காசு கிடைக்கும்” எனக் கூறினார், அவ்வாறு தான் கோயிலைக் கட்ட ஆரம்பித்தோம்.

அன்றிலிருந்து பத்திரிகைகளைப் பார்த்து காணியைத் தேடினோம். மோதர காளி கோயிலுக்கு அருகில் முப்பது பர்சஸ் காணி கிடைத்தது. நாம் வேலையை ஆரம்பித்தோம். மனைவியின் உறவினர்கள், மைத்துனரின் உறவினர்கள், நான் எனது பிள்ளைகள் ஆகியோர் நிதியை வழங்கினோம். கோயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நாம் அறிந்தவர்களும் அறியாதவர்களும் காணிக்கையாக பெரிய, சிறிய தொகைகளை வழங்கினார்கள்.

சிலர் நன்கொடைகளை கட்டடப்பொருட்களாகவும் வழங்கினார்கள். கோயில் அமைத்து முடியும்வரை எனது மனைவி பத்மாவதி ஒவ்வொரு நாளும் வேலைத் தளத்துக்குச் செல்வார். நான் காலையில் கொண்டுவந்து விட்டுச் செல்வேன். மாலையில் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். முழு நாளையும் அவர் அங்குதான் கழித்தார். வேலைகளையெல்லாம் மேற்பார்வை செய்தார். ஒவ்வொரு கல்லாக கட்டி முடிக்கும் வரை அவர் தனது பயணத்தை நிறுத்தவில்லை.

நாம் ஆரம்பித்ததைவிட கோயில் பெரியதாக அமையலாயிற்று. கோயிலுக்கு அருகில் இருந்தவர்கள் கோயிலுக்கு காணியை விற்றுவிட்டு இடம்பெயர்ந்தார்கள். அந்த காணிகளை கோயிலுக்கு பல பரோபகாரிகள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் வாங்கிக் கொடுத்தார்கள். நீங்கள் நம்புவீர்களா? நாங்கள் கோயிலைக் கட்ட ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இலங்கையில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலிருந்து, பௌத்த பக்தர்கள் தேடி வந்து உதவி செய்கிறார்கள். ஆனால், கோயிலை கட்டி முடித்த ஒரு வருடத்திற்கு பின்னர் எனது மனைவி திடீரென மாரடைப்பால் எம்மை விட்டுப்பிரிந்தார்.

அன்று முதல், பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவதை, கண்ணீருடன் தங்கள் துயரங்களை இறைவனிடம் கூறி நிம்மதியை வேண்டுவதை, பிரார்த்தனை நிறைவேற்றியவர்களின் மகிழ்ச்சியான முகங்களை நான் கண்டு நிம்மதியுற்றுருக்கின்றேன். அவரது ஒரே கனவாக இருந்த கோவிலின் ராஜகோபுரத்தை எம்மால் கடந்த வருடம் தான் முடிக்கமுடிந்தது. சிறு சிறு சிலைகளிலான 92 அடி உயரமான இராஜகோபுரம் வானளாவ உயர்ந்து நிற்கின்றது. கோயிலின் இராஜகோபுரம் மூலமாகத்தான் சக்தி அதிகரிக்கப்படுகின்றது. நாட்டின் பல அரசியல்வாதிகளும் இங்கு வந்து வழிபட்டார்கள். இவ்வாறான பெரிய கோயிலொன்று இங்கிருப்பதை இன்றுதான் நான் அறிந்தேன். வீட்டிலுள்ளவர்களையும் அழைத்து வருகின்றேன் என இந்த சுவாமியை தரிசிக்க வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். அவர் கோயிலைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

திருப்பதியிலிருந்து வந்த சிற்பிகள் கட்டிய இக்கோயிலிலுள்ள அனைத்து விக்கிரகங்களும் இந்தியாவிலுள்ள கோயம்புத்தூரில் வடிக்கப்பட்டதாக துரைசாமி கூறினார்.

மஹா விஷ்ணு விக்கிரகம், அவரின் துணைவியான பத்மாவதி ஆண்டாள் சிலைகள் உள்ளிட்ட கோயில் முழுதும் காணப்படும் 33 சிலைகளும் கோயம்புத்தூரிலிருந்தே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

மகாவிஷ்ணு சிலை விசேடமான கருங்கல்லினாலேயே செதுக்கப்பட்டுள்ளது. சிலைக்கு நிகழ்த்தப்படும் அபிஷேகங்களால் சிலையின் சக்தி அதிகரிக்கின்றது. அதேபோல் கோயிலுக்குக் கிடைக்கும் காணிக்கை யாருக்கும் சொந்தமில்லை. அவை கோயிலின் அபிவிருத்திக்கும் புண்ணிய நடவடிக்கைகளுக்கும் பாவிக்கப்படுகின்றது. ஏழைக் குழந்தைகள் 275 பேர் கற்கும் அறநெறிப்பாடசாலைக்கும், பௌர்ணமி தினம் வழங்கப்படும் அன்னதானத்துக்கும் காணிக்கை பயன்படுத்தப்படுகின்றது.

மஹாவிஷ்ணு கோயிலின் அறங்காவலர் சபையினர் இந்தக் காணிக்கைகளை விரும்பியவாறு பாவிக்க முடியாது. பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற்றும் பொருட்டு உடைக்கும் தேங்காய்கள் மலைபோல் குவிந்துள்ளன. அவற்றை அவர்கள் என்ன செய்கின்றார்கள். எல்லோராலும் எழுப்பப்படும் கேள்வி இது. “நாம் அவற்றை கொப்பறாவாக்கி கோயிலுக்குத் தேவையான எண்ணெய்யை தயாரிக்கிறோம். எண்ணெய் தயாரிப்பவர்களே அவற்றைக்கொண்டு செல்கின்றார்கள். எங்களிடம் அவர்கள் காசு பெறுவதில்லை. எங்களுக்கு எண்ணெய்யை மட்டும் கொண்டு வந்து தருகின்றார்கள். நாம் அந்த எண்ணெயை உணவுக்குப் பயன்படுத்த மாட்டோம். விளக்குக்காக மாத்திரமே பாவிக்கின்றோம்.

அநேகமான கோயில்களில் காசு உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஆனால், விஷ்ணுகோயிலில் அந்த நிலைமையில்லை. இந்த கோயிலிக்கு உதவி செய்யும் பணக்காரர்கள், கூட வரிசையில் காத்து நின்றே சுவாமி தரிசனம் செய்கின்றார்கள். அவ்வழமையானது கோயில் நிர்வாகத்தினை மேற்கொள்ளும் துரைசாமி குடும்பத்தவர்களுக்கும் பொதுவானதாகும்.

“ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு முந்திக் கொண்டு சென்று இறைவளை வழிபடுவதில் என்ன புண்ணியம். கோயிலுக்கு உதவி செய்த பஸாரிலுள்ள முதலாளியும் வரிசையியேயே செல்வார். ஆசிர்வாதம் பெறக் காசு அவசியமில்லை. உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருப்பதி கோயிலின் பூசகர்கள் அனைவரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆசிர்வாதத்தை வழங்குகின்றார்கள். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐயாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த வேத நூல்களில் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ள இராஜகோபுரம், தூண், வளைவுகள், கர்ப்பக்கிரகம் அனைத்தும் கண்ணைக் கவரும் வகையிலும், பக்தி ரசம் சொட்டவும் அமைக்கப்பட்டுள்ளது. அன்பான மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது கனவின் பேரில் உருவான மஹாவிஷ்ணு கோயில் இன்று இலட்சக் கணக்கான மக்களின் துயரங்களைத் துடைக்கும் புனித இடமாக அமைந்துள்ளது.

அங்கு அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு கணமும் ஆத்மார்த்தமான சந்தோஷத்தை துரைசாமி அனுபவிக்கின்றார். அந்த ஆத்மார்த்தமான சந்தோஷம் மனைவி பேரிலுள்ள அபரிதமான அன்பை எடுத்தியம்புகின்றது. 

 

Comments