எரிபொருள் கொண்டு செல்லும் நான்கு குழாய்கள் செயலிழப்பு | தினகரன் வாரமஞ்சரி

எரிபொருள் கொண்டு செல்லும் நான்கு குழாய்கள் செயலிழப்பு

கொழும்பு துறை முகத்திலிருந்து எரிபொருள் எடுத்துச் செல்லும் 4 குழாய்கள் செயலிழந்துள்ளதால் எரிபொருள் இறக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் பெருந்தொகை பணம் செலுத்தவேண்டியுள்ளதால் கூட்டுத்தாபனத்துக்கு பெரும் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது செயற்பட்டுவரும் ஒரே ஒரு குழாயும் செயலிழந்து விட்டால் எண்ணெய் இறக்குமதியே கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

துறைமுகத்திலிருந்து கொலன்னாவ வரையிலான 9 அங்குல விட்டத்தைக் கொண்ட ஒரே ஒரு குழாயினூடாகவே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த ஒரே ஒரு குழாயின் ஊடாக கப்பலிலிருக்கும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு ஆகக் குறைந்தது 8 நாட்களாவது தேவைப்படுகிறது.

அதுவரை எரிபொருள் இறக்கும் கப்பலை வைத்துக் கொள்வதற்காக கப்பலுக்கு தினமொன்றுக்கு 40 இலட்சம் ரூபாய் வரை தாமதக்கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய், விமானங்களுக்கான

 எரிபொருள் அனைத்தும் ஒரே குழாயிலேயே இறக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு எரிபொருளை இறக்கிவிட்டு மற்றைய எரிபொருளை இறக்குவதற்காக குழாயை கடல் நீராலேயே கழுவ வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் குழாய் சீக்கரமே உக்கிப் போகக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

12 அங்குல விட்டமுள்ள குழாயை புதுப்பித்து எண்ணெய் இறக்குவதற்கு கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தபோதும் இடை நடுவில் அது கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை முத்துராஜ வலயத்திலுள்ள எண்ணெய்க்குழாய் இரண்டில் மண்ணெண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் கொண்டு செல்வதால் இதனையும் கடல் நீரில் கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் நாட்டுக்குள் பெரும் எண்ணெயைத் தட்டுப்பாடொன்று ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

தற்போது கூட்டுத்தாபனத்தில் சுமார் 15 நாட்களுக்குரிய எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது. பெரும்பாலும் எண்ணெய்க் கப்பலொன்று வருவதற்குத் தாமதம் ஏற்பட்டால் பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் முடியாமல் போனது எனினும் அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எண்ணெய் குழாய்கள் பல வருடங்கள் பழைமைவாய்ந்தவை. அவை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனினும், எண்ணெய் குழாய்களுக்கு மேல் குடிசைகள் அமைத்து மக்கள் குடியிருக்கிறார்கள். இவை சட்டவிரோத குடியேற்றங்கள் என்றாலும் அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Comments