திருத்தம் செய்வோம்! | தினகரன் வாரமஞ்சரி

திருத்தம் செய்வோம்!

சென்றவை என்னும் சென்றகா லத்துச்

செயல்பிழை... எனில் அதைத் திருத்து! – எங்கள்

சந்ததி... முறையாய்ச் சரிவழி தொடர

தடையுண்டேல்... அவைகளை விலக்கு!

வெந்ததைத் தின்று நொந்து நாம் வெந்து

வீழ்ந்ததும்... வாழ்ந்ததும் போதும் – இனி

எம்மவர் வாழ இலக்கு எது... அதைநாம்

தொடர்ந்திட வேண்டும், வா எழுந்து!

தேர்தல்கள் வந்தால்... ஆர்வமாய்ச் சேர்ந்து

ஊர்வலம் போய், யார்க்கோ உழைப்போம்! – அந்தத்

தேடல்கள் அவர்க்கே சொத்துகளாக

தேய்த்து, எங்கள் வாழ்க்கையை ஒடிப்போம்!

ஆரிடம் கேட்டு, எம் தேவையைப் பெற்றோம்?

ஐயாமார் எல்லோரும் பொய்யர் – இந்த

மாயையை வென்று மலையகம் தளைக்கும்

வழி எது?... அதைக்கண்டு பிடிப்போம்!

பெற்றோர்கள் பெற்ற பேறெலாம் போதும்,....

பிணங்களாய் வாழ்ந்ததும் போதும்... நாங்கள்

பெற்றவை எல்லாம் துயர்களே,... இனி, எம்

கால்களில் நிற்க.... நாம் முனைவோம்!

எத்தனை இழப்பு, எத்தனை தடைகள்...

ஏன் இன்னும் பிழைகளை நம்பி – சேர்ந்து

ஒற்றுமையாக விழுகிறோம் குழிக்குள்...

எழுந்து நாம் நடப்பது எப்போது?

ஒரு நூறு ஆண்டு ஓடியும் எங்கள்

உறைவிடம் கண்டதா மாற்றம்?!... இந்த

முறைகளை மாற்றும் ‘தலைமுறை எழுச்சி’

முளைப்பது என்று மலை யகத்தில்?!...

வரவர ‘உலக மயமாக்கல்’ எங்கும்

நடக்கையில்,.... வினாவாய், முடிவில்லாத் தொடராய்...

இருப்பதோ,... பிழை இதை உடைப்போம்!

Comments