இது ஸ்டாலின் காலம்; அவர் நிரூபித்தாக வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

இது ஸ்டாலின் காலம்; அவர் நிரூபித்தாக வேண்டும்

கிரிக்கெட் போட்டி நடக்கும்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டோடுவது இயற்கை. அதிலும் இந்தியா – இலங்கை, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் என்றால் ஏதோ எதிரி நாட்டுடனான யுத்தம் என்பதுபோல ரசிகர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு ரசிப்பார்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று ரீதியானதும், மனித வரலாற்று ரீதியாகவும் கற்காலம் முதல் தொடர்பு இருந்து வருவதால், எத்தனை பிரச்சினைகள் இரு நாடுகளுக்கு மத்தியில் இருந்தாலும் உறவிலும், நெருக்கத்திலும், அக்கறையிலும் தொய்வு ஏற்படுவதில்லை. இந்திய பாராளுமன்றத் தேர்தலானாலும் சரி தமிழகத் தேர்தலானாலும் சரி, இந்தியாவில் நிகழும் ஆட்சி மாற்றம் இலங்கைத் தமிழர்களால் மட்டுமல்ல, சகல இலங்கைப் பிரஜைகளினாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவது இந்த அடிப்படையில் தான். இந்திய அரசியலில் ஏற்படும் அதிகார மாற்றங்கள் இலங்கையை பாதித்துள்ளமைக்கு சான்றுகள் உள்ளன. இந்திரா காந்தி காலத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்ததும் ராஜீ்வ் காந்தி காலத்தில் ஜே.ஆரை வழிக்குக் கொண்டு வந்ததும், 2015இன் பின்னர் இந்திய மீனவர்கள் மீதான இலங்கையின் கடும் போக்கில் தளர்வு ஏற்பட்டதும் உதாரணங்களாக சுட்டிக்காட்ட முடியும்.  

கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசு இலங்கை தொடர்பாக ஒரு மெனமையான போக்கையே கடை பிடித்ததாகக் கருதலாம். சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டிருக்கும் அதே சமயம் இந்திய வீடமைப்புத் திட்டங்கள் வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் விரைவு பெற்றதையும், கிளங்கன் இந்திய மருத்துவமனை திறப்பு விழாவும் குறிப்பிடத்தக்க இந்திய சமூக பங்களிப்பாக அமைந்தன. 

தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவாரா? என்ற கேள்வி இலங்கைக்கு முக்கியமானது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அமரும் அதே சமயம் தமிழகத்தில் திராவிட சிந்தனை கொண்ட தி.மு.க ஆட்சியமைக்குமானால் தமிழர் விவகாரம் தொடர்பாக டில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு நிலைக்கு தி.மு.க வரலாம் என்ற அச்சம் இலங்கை அரசியல்வாதிகளிடம் உள்ளது. இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி பிரதமர்களாக இருந்தபோது முதல்வராக வீற்றிருந்த எம்.ஜி.ஆர். அத்தகைய அழுத்தங்களை பிரயோகித்தார். 

பா.ஜ.க பாராளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையை கைப்பற்றுமானால் பிரதமர் பதவியை நரேந்திர மோடியே வகிப்பார். நாடெங்கும் பிரபலமும் ஆதரவும் கொண்ட ஒரே பா.ஜ.க தலைவராக அவரே விளங்கி வருகிறார் என்பதால், அவருக்கு எதிராக சவால்விடக் கூடிய ஒருவர் பகிரங்கமாக கட்சிக்குள் கச்சை கட்டுவார் என எதிர்பார்ப்பதற்கில்லை. எனினும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போல அவருக்கு பரந்த, அளவில்அலை வீசும் என நம்புவதற்கில்லை. பா.ஜ.க தோல்வியடைந்தாலும் அது ‘வெற்றிகரமான’ தோல்வியாகவும், மீசையில் மண் ஒட்டாத தோல்வியுமாகவே இருக்கும் என்பதே பல ஆய்வாளர்களின் கணக்காக இருக்கிறது. 

காங்கிரஸ், மோடி அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. அதன் பிரதான குற்றச்சாட்டு, மோடியும் அவரது அரசும் ஏழைகளை மனதில் இருத்தி செயல்படாமல் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளின் நலன்களை மட்டும் மனதில் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதேயாகும். மோடி அரசின் மிகப் பெரிய சாதனையாக பண மதிப்பிழக்கம் பேசப்படுகிறது. ஆனால் மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர், பண மதிப்பிழக்கம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என்றும் அது தோல்வியடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அரசு எதிர்பார்த்த அளவுக்கு கறுப்புப் பணம் வெளிவரவில்லை என்றும் பண மதிப்பிழக்கம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் சம்பந்தப்பட்ட கறுப்புபண வட்டாரங்களுக்கு சென்று சேர்ந்து விட்டதால் அவர்கள் உஷாராகி விட்டார்கள் என்றும் அவசர அவசரமாக பெருமளவு தங்கமும், வைரங்களும் வாங்கி வைக்கப்பட்டு விட்டன என்றும் அச்சமயத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் திடீரென கையில் உள்ள பணம் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டு விட்டதால், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோர் என இலட்சக்கணக்கானோர் இந்தியாவெங்கும் கடிமையாகப் பாதிக்கப்பட்டனர். பலர் தலையெடுக்க முடியாத அளவுக்கு முடங்கிப் போனதில் பல்லாயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது.  

வர்த்தகர்களுக்கும் இந்த அரசின் மீது மேலும் ஒரு வருத்தம் உள்ளது. அம்பானியின் ‘ஜியோ’ கைபேசிக்கு அளவில்லாத சலுகைகள் அளித்ததில் ஏனையோ போன் கம்பனிகள் பாதிப்பு அடைந்தன. வோல் மார்ட் போன்ற பல்தேச சுப்பர் மார்க்கட்டுகள் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதற்கு காங்கிரஸ் வழி செய்தாலும் கட்டுப்பாடின்றி கதவுகளை அகலத் திறந்து விட்டவர் மோடியவர்களே. இதனால் பல உள்ளூர் வணிக நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகின்ற போதும் வட மாநிலங்களில் மாட்டிறைச்சி உன்பது பலவந்தமாகவும் வன்முறை ரீதியாகவும் தடுக்கப்பட்டுள்ளது. சிலர் அடித்தே கொல்லப்பட்டனர். 

தென் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு நிலையே காணப்படுவதற்கு, இந்திபேசும் ஆளும் வர்க்கம் தமது கலாசாரங்களையும், மதத் தீவிரவாதத்தையும், இந்தி – சமஸ்கிருத மொழிகளை திணிக்க முனைவதாகவும் மக்கள் கருதுவதே காரணம். இரண்டு பெரிய தேசிய கட்சிகளின் மொழி, கலாசார நிலைப்பாடுகள் ஒன்றாகவே இருந்தாலும் பா.ஜ.க. தீவிரத் தன்மையுடனும், பிற மதங்கள் தொடர்பான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் போக்கை கடைப்பிடிப்பதாகவும் பெரும்பாலான தென்னிந்திய வாக்காளர்கள் கருதுவதற்கு, எச். ராஜாவும், சுப்பிரமணியம் சுவாமியும் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் உரம் சேர்க்கின்றன. பா.ஜ.க. வின் உள்ளூர்த் தலைவர்கள் மிகுந்த பிரயாசையுடன் சாண் ஏறுகிறார்கள் என்றால் ராஜா மற்றும் சுவாமியின் சில வார்த்தைகள் அவர்களை முழம் சறுக்க வைக்கின்றன.  

காங்கிரசுக்கு தமிழகத்தில் காலூன்ற முடியாமற் போனதற்கு, திராவிடக் கட்சிகளின் அடிப்படைக் கொள்கைளுக்கு மாற்றாக அதனால் புதிதாக எதையும் முன்கைக முடியாமையே காரணம். ஒரு இனத்துக்கு முக்கியமான மொழி, கலாசாரம் என்பனவற்றின் மேம்பாட்டுக்கு அயராது உழைப்போம் என்று காங்கிரஸினால் கூற முடியாது. ஏனெனில் 1967க்கு முன்னர் தமிழ் மொழி உரிமை, கலாசார உரிமை என்பனவற்றுக்கு எதிரான போக்கைக் கடைபிடித்ததால்தான் தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும் காங்கிரஸ் டில்லியில் இருந்து வட இந்தியர்களால் இயக்கப்படும் கட்சியாக இருப்பதாலும் அதன் தமிழகத் தலைவர்கள் டில்லி முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டி இருப்பதால் சுயமாக முடிவு எடுக்க முடியாதவர்களாகக் காணப்படுவதாலும் தமிழக வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்கள், வேட்பாளர்களையும் அந்நியத்தன்மையுடன் பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. திராவிடக் கட்சிகள் இங்கேதான் தமது வெற்றிகளை அறுவடை செய்கின்றன. இரண்டாவதாக, தமிழக மக்களிடம் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று கூறுவதைத்தவிர மக்களைக் கவரக்கூடியதாக தமிழகக் காங்கிரசிடம் எதுவும் இல்லை. தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி மாற்றப்படுவது, கட்சித் தலைவர்களிடம் காணப்படும் ஒற்றுமையின்மை, அது அடிதடிவரை செல்வது என்பனவும் மக்களை அது பொறுப்பான கட்சி அல்ல என்ற அபிப்பிராயத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. 

காங்கிரஸ் கட்சிக்கு தமிழக அரசைக் கைப்பற்ற முடியும் என்ற நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. தற்போது காங்கிரஸ் விட்ட இடத்தில் இருந்து தொடரத் தொடங்கி இருக்கிறது. காங்கிரசிடம் எடுத்துச் சொல்வதற்கு புதிதாக எதுவும் இருக்கவில்லை. மாற்றாக, பா.ஜ.க அதிரடியான விஷயங்களை கைவசம் வைத்துள்ளது.  

பா.ஜ.க.வின் அடி நாதம், இந்துத்துவத்துக்கும் இந்து தேசிய உணர்வுக்கும் தீனி போடுவதாக உள்ளது. இந்துக்களை பிறமதத்தவர் மற்றும் நாத்திகர்களிடமிருந்து காப்பாற்றும் ஒரு சக்தியாக பா.ஜ.க.வினால் காட்டப்படுகிறது. முன்னர் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பிராமணர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக பெரியாரும் அவரது சீடர்களும் தொடர்ந்து பிரசாரம் செய்தனர்.  

அது ஒரு கலாசார புரட்சியாகவே தமிழகத்தில் வெள்ளமாகப் பாய்ந்தது. காங்கிரசை நிமிரவேவிடாமல் சாய்த்தது. இப்போது பா.ஜ.க., இந்த நாத்திகம் பேசும் ஊழல்வாதிகளான திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து இந்துக்களையும் இந்து தத்துவங்களையும் மீட்கும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒரு பிம்பத்தை தமிழகத்தில் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. எவ்வளவு நாத்திகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும் தமிழகம் இன்னும் கடவுள் நம்பிக்கை நிறைந்த மாநிலமாகவே இருந்து வருகிறது என்று வைத்துக் கொள்ளும் போது இந்த நம்பிக்கையை அரசியலாக அறுவடை செய்யலாம் என்பது பா.ஜ.க.வின் கணிப்பாகும். ஆனால் இந்த ஆன்மிக வாக்காளர்கள்தான் இவ்வளவு காலமாக நாத்திக அடிப்படைபைக் கொண்ட அல்லது இந்துத்துவம் பேசாத திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். ஆன்மிகம் என்னவானால் என்ன, எங்களுக்கு எங்கள் மொழி உணர்வும், கலாசார நம்பிக்கைகளுமே முக்கியம் என்றும் தமிழகத்தின் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்களைத் தரக் கூடிய திராவிடக் கட்சிகளுக்கே எமது ஆதரவு என்றும் சமய நம்பிக்கை கொண்ட தமிழ் வாக்காளர்கள் தமது வாக்களிப்பின் மூலம் தெரிவித்து வந்திருக்கிறார்கள். சமய நம்பிக்கைகள் வேறு, சமயத்தின் பேரிலான சமூக ஏற்றத் தாழ்வுகள் வேறு என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். 

எனினும், அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள மோடியின் பா.ஜ.க., இதுவரை எந்தவொரு கட்சியும் கையில் எடுத்திராத மதவாத ஆயுதத்தை எடுத்துள்ளது. தமிழகத்துக்கு சமூக நிதியைத் தந்த பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்றும், சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் தமிகத்தில் முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் பா.ஜ.க.வின் எச் ராஜா பகிரங்கமாகவே தெரிவித்து வந்துள்ளார். திராவிடக் கட்சிக்காரர்களுக்கு எதிராக இந்து முன்னணியினர் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். பெரியார் படத்துக்கு செருப்படி சாத்தி பெண்கள் சிறுநீரும் கழித்தனர். ஈ.வே.ரா. பெரியார் மனிதர் மத்தியில் சம உரிமையும், சமநீதியும் வேண்டும் எனப் போராடியவர். பா.ஜ.க.வின் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழும் சுப்பிரமணியம் சுவாமி, இந்தியாவெங்கும் ஒரே ஒரு மொழி, (சமஸ்கிருதம் கலந்த ஹிந்தியும்), இந்து மதமும், ஒரே கலாசாரமாக இந்து கலாசாரமும் இருக்க வேண்டும் என்பதே எமது இலட்சியமும் ஒன்று கூறி இருக்கிறார். 

அதாவது இந்து மதத் தீவிரவாதத்தையும் முஸ்லிம் மற்றும் ஏனைய மதங்கள் மீதான வெறுப்புணர்வையும் கிளறிவிட்டு அதன் மூலம் தமது செல்வாக்கை மத்தியில் வளர்த்துக் கொண்டு அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் தாரக மந்திரமாக உள்ளது. இதனால்தான், இக்கட்சி இந்துக்களுக்கு சாதகமான கருத்துக்களை கொண்ட கட்சியாக இருந்தாலும், திராவிட சிந்தனைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பழகிப்போன மற்றும் சாதியத்துக்கு பரவலான எதிர்நிலை கொண்ட தமிழ் மக்கள் பா.ஜ.க.வை ஏற்கத் தயங்கியே வந்திருகிறார்கள்.  

வட இந்திய நிலைமைகளும் தென்னிந்திய அரசியல் சாதகபாதக சூழல்களும் இவ்வாறு வேறுபட்டு நிற்பதால் தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளுக்கே வெற்றிவாய்ப்பு சாதகத் தன்மையுடன் காணப்படுகிறது. இதே சமயம் இலங்கையில் எவ்வாறு இனவாத அரசியல் வெற்றிபெறுகிறதோ அவ்வாறே, பா.ஜ.க வின் மதவாத அரசியல் வட மாநிலங்களில் எடுபடுகிறது. சாதாரண வடநாட்டு இந்து வாக்காளர்கள் பா.ஜ.க.வின் இன, மதம் சார்ந்த பிரசாரங்களில் மயங்கிப் போகலாம். எனவே உத்தர, மத்திய, பீஹார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற இந்திபேசும் மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு எதிராக அதிக ஆசனங்களை காங்கிரஸ் கைப்பற்றுவது மிகவும் கஷ்டமாகவே இருக்கப்போகிறது. 

தமிழகத்தின் 40பாராளுமன்ற தொகுதிகளில் 25முதல் 33வரையில் தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என்பது பரவலான ஆருடம். தி.மு.கவுக்கு பின்னடைவு என எந்தக் கருத்துக் கணிப்பும் கூறவில்லை. கருத்துக் கணிப்புகளை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தாலும், அரசியல் நியாயங்களின்படி தி.மு.க கூட்டணி 35ஆசனங்கள் வரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே களநிலவரங்கள் மூலம் அறிய முடிகிறது. எம்.ஜி.ஆர். மரணத்தின் பின்னர் இப்படி ஒரு வாய்ப்பு தி.மு.க.வுக்கு கிட்டியது. தற்போது, ஜெயலலிதாவும் கலைஞரும் இல்லாத சூழலில் மற்றொரு வாய்ப்பு. தி.மு.க.கதவைத் தட்டுகிறது. 

அருள் சத்தியநாதன்

Comments