மூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்! | தினகரன் வாரமஞ்சரி

மூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாடு நகருமோ என்ற அச்சத்தைக் கிளறிய 1994 ஜனாதிபதித் தேர்தல்!

1997ல் இலங்கைப் பொருளாதாரம் திறந்து விடப்பட்டபோது இலங்கையில் பொருளாதாரம் பின்னடைவிலிருந்து படிப்படியாக வழமை நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்த படியால் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான அரசாங்கம் போதியளவு வெளிநாட்டு ஒதுக்குளை திரட்ட முடிந்தது.

 எனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு முற்றாகப் பணிந்து செயற்படவேண்டிய தேவை இருக்கவில்லை. அத்தோடு 1982 வரையில் உயர் பொருளாதார வளர்ச்சியும் பதிவு செய்யப்பட்டபடியால் முழு அளவிலான கட்டமைப்பு சீராக்கக் கொள்கையினை அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்படவில்லை. ஆனால் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் போது பொருளாதார பின்னடைவைச் சந்தித்து நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்ததால் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் இறுக்கமான பிடிக்குள் உள்வர நேர்ந்தது. வர்த்தக தாராள மயமாக்கம் தனியார் மயமாக்கம் மற்றும் உலக மயமாக்கம் என்பவற்றை நோக்கி நகர வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டது. நவதாராளவாத கொள்கைகளின் அடிப்படையில் சந்தைச் சக்திகளுக்கு முன்னுரிமை தந்து செயற்பட நேர்ந்தபடியினாலேயே சமூக ரீதியில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துச் சென்றன.  ஜனசவிய, பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டம் போன்றன அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் அவை போதுமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. 

இந்தப் பின்புலத்திலேயே ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களான லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க மற்றும் ரணசிங்ஹ பிரேமதாச  என ஒருவர்பின் ஒருவராக கொல்லப்பட தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் ஏற்பட்டது. ஜே.ஆர். உயிருடன் இருந்த போதிலும் அரசியல் அமைப்பின்படி அவரால்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக இருக்கவில்லை. மறுபுறம் சுதந்திரக் கட்சியின் தலைவியாக சிறிமாவோ பண்டாரநாயக்க இருந்த போதிலும் பறிக்கப்பட்ட குடியுரிமை மீள வழங்கப்பட்ட பின்னரும் தேர்தலில் நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. 

1994 ஜனாதிபதித் தேர்தலில் நிற்கின்ற இரு பிரதான கட்சிகளிலும் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லாத காரணத்தினால் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அரசியலின் தமது கணவன்மாரை பறிகொடுத்த இரண்டு பெண்மணிகள்   ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நேர்ந்தது. 

காமினி திசாநாயக்கவின் மனைவியான ஸ்ரீமா திசாநாயக்கவும் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் மனைவியும் முன்னாள் பிரதமர்களான பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் மகளுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் களத்தில் இறக்கப்பட்டனர். 

இவர்களில் ஸ்ரீமா திசாநாயக்க ஒரு அரசியல்வாதியின் மனைவி என்பதைத்தவிர மக்கள் மத்தியில் அறியப்படாதவர். சந்திரிக்கா குமாரதுங்க 1972ல் காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவின் தலைவியாக அவரது தாயாரால் நியமிக்கப்பட்டு காணி உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் தமது சொந்தக் காணிகளையே அரசு உடமையாக்கியவராக அறியப்பட்டிருந்தார்.

அத்துடன் தமது கணவரின் கட்சி அரசியல் மேடைகளில் தோன்றியவராகவும் இருந்தார். அத்தோடு மாகாண சபையில் ஏலவே அரசியல்வாதியாக அரசியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததோடு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினருமாகி இருந்தார். எனவே அதிக சாதகமான தன்மைகளைக் கொண்டிருந்த சந்திரிக்கா குமாரதுங்க தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சியில் அப்பாவி முகத்துடன் தோன்றினார். அரசியலில் தான் இழந்தவற்றையெல்லாம் பட்டியலிட்டார். கட்சி தன்னை ஒரு மகளாகவும் சகோதரியாகவும் கருதி ஒரு வாய்ப்புத் தருமாறும் அழுது வினயமாக வேண்டிக் கொண்டார். ஸ்ரீமா திசாநாயக்கவினால் அந்தளவுக்கு மக்களை ஈர்க்க முடியவில்லை. எனவே தேர்தல் முடிவு எதிர்பார்த்தது போலவே அமைந்தது. 

1993ல் மாகாணசபை உறுப்பினரான குமாரதுங்க 1994ல் பாராளுமன்ற உறுப்பினரானார். அதே வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நிறைவேற்று அதிகாரங்கொண்ட உலகின் முதலாவது பெண் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.  

1977ல் தொடங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருடகால ஆட்சியின் பின்னர் மக்கள் முன்னணி (Peoples Alliance) என்னும் பெயரில் சுதந்திரகட்சியின் அரசாங்கம் 1994ல் பதவி ஏற்றது. 1970-  _ 77 காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த கர்ண கடூரமான பற்றாக்குறைகளையும் கடும் வாழ்க்கை முறைகளையும் அனுபவித்த மக்கள், சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் மூடப்பட்ட பொருளாதார முறையினை மீண்டும் கொண்டு வந்து விடுமோ என்று அச்சப்பட்டனர்.

எனவே அப்போதைய சுதந்திரக் கட்சி தலைமைத்துவம் முன்னைய தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டு அப்படி ஒரு கடுமையான பொருளாதார நெருக்குவாரங்களை மக்கள் மீது ஒருபோதும் திணிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் மக்கள் முன்னணி அரசாங்கம் மூடப்பட்ட பொருளாதார கொள்கைகளை நோக்கி பின்நகர முடியவில்லை. அதுமட்டுமன்றி 1994காலப்பகுதிகளில் உலகளாவிய ரீதியில் திறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கே பெரிதும் மவுசு இருந்தது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பனவும் அத்தகைய கொள்கைகளுக்கே ஆதரவு வழங்கின. எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 17வருடகாலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றி முழுப்பொருளாதாரத்தையும் சந்தைப்பொருளாதாரமாக மாற்றி விட்டிருந்தன. அவற்றை வேறொரு பிடுங்கி எறிவது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. 

இக்காரணங்களால் மக்கள் முன்னணி அரசாங்கத்தினால் மீண்டும் மூடப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர முடியவில்லை. இதனால் சுதந்திரக் கட்சி அரசாங்கம் திறந்த பொருளாதார கொள்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. எனவே ஆட்சி மாற்றத்தோடு பொருளாதார கொள்கைகள் மாற்றியமைக்கப்படும் நிலைமாறியது. எனவே ஆட்சி மாற்றத்தோடு பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைக்கப்படும் நிலை மாறி கொள்கைத் தொடர்ச்சி ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். எவ்வாறாயினும் மக்கள் முன்னணி அரசாங்கம் ‘மனித முகத்தோடு கூடிய ஒரு திறந்த பொருளாதாரத்தை ‘Open Economy of with a Human Face’ அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது. இந்த மனித முகம் என்றால் என்னவென்பது பற்றி எந்தத் தெளிவான விளக்கமும் சொல்லப்படாவிட்டாலும் கூட மக்களுக்கு நலன்புரித் திட்டங்களையும் சமூகப் பாதுகாப்பு வசதிகளையும் வழங்கக்கூடிய ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அது குறித்து நின்றதாகப் பொருள் கொள்ளலாலம். 

‘ஜனசவிய’ திட்டத்திற்கு பதிலாக வந்த ‘சமுர்த்தித்திட்டம்’ இதற்கு ஒரு உதாரணமாகக் கூறப்பட்டது. 

எவ்வாறாயினும் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் முன்னைய கொள்கைகளின் தொடர்ச்சியாகவே இருந்தது. அரசியல் ரீதியாக வடபுல யுத்த சூழலில் ஒரு சமாதான காலம் ஏற்பட்டது. எனினும் அது நெடுநாள் நீடிக்கவில்லை. மிகப்பெரிய சமர்கள் இக்காலப்பகுதியிலேயே இடம்பெற்றன. 

சந்திரிக்கா அம்மையாரின் தலைமைத்துவம் பலராலும் விமர்சிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. நாட்டின் அதியுயர் பொறுப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு சில மாதங்களிலேயே நியமிக்கப்பட்டதால் அனுபவமின்மையும் மேற்குலக கலாசாரத்துடன் கூடிய அவரது வாழ்க்கை முறைமையும் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது. நேரம் தவறி முக்கிய கூட்டங்களுக்கு வருகின்றமை அவரது முக்கிய பலவீனமாக இருந்தது. அமைச்சரவைக் கூட்டங்கள் கூட அவரது வருகைக்காக மணித்தியாலக் கணக்கில் தாமதமானதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன.  இந்த நிலையில் 2001இடம்பெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அதிகாரத்தை கைப்பற்றியது. வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒரு கட்சியை சேர்ந்தாகவும் பிரதமர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவராகவும் விளங்கினர். இரு கட்சிகளும் சேர்ந்து நாட்டை முன்னோக்கி செல்வதற்கு அருமையான ஒரு வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியதாக மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆயினும் இவ்விரு கட்சிகளின் தேனிலவுக்காலம் நெடுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

                                            (தொடரும்) 

கலாநிதி எம். கணேசமூர்த்தி, 

பொருளியல்துறை, 

கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments