கன்னியா கௌரவம் காப்பாற்றப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

கன்னியா கௌரவம் காப்பாற்றப்படுமா?

திருகோணமலை, கிண்ணியாவையும் கன்னியாவையும் சிலர் குழப்பிக்ெகாள்வதுண்டு. இப்போது வெந்நீரூற்றுக் கிணறுகள் உள்ள இடம்தான் கன்னியா என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அதற்குக் காரணம் இந்த வெந்நீரூற்று பற்றி ஊடகங்களில் அதிகம் செய்திகள் வந்தமைதான்.

கடந்த 16ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற பூஜையின்போது உருவான முரண்பாடு கன்னியாவை மீண்டும் ஒரு முறை முழு உலகிற்கும் நினைவுபடுத்தியிருக்கிறது.

தொல்பொருள் திணைக்களத்தினர் திடீரெனத் தலையிட்டுப் பிரச்சினையை உருவாக்கியதால், இந்துக்கள் மத்தியில் மனக்கிலேசம் ஏற்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு நிலைமை மாறியது. தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

அதற்குக் காரணம் தொல்பொருள் திணைக்களத்தின் வழிநடத்தல் ஆலோசனைக் குழுவிற்குத் தமிழாசிரியர்கள் ஐந்துபேரையும் உள்வாங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதுதான். இந்து ஐந்துபேரும் இல்லாமல் தனித்துத் தொல்பொருள் திணைக்களம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பினை அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்தச் சந்திப்புக்கு அமைச்சர் அழைத்திருந்தார். ஆனால், வடக்கு கிழக்கினைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையென்று சொல்லப்பட்டுள்ளது.

அந்த ஆலயத்தில் கிரமமாக தினந்தோறும் பூசைகளும் பௌர்ணமி தின விசேட பூசைகளும் ஆடி அமாவாசை பூசைகளும் அண்மைக்காலமாக சிறப்பாக நடைபெற்று வந்தன. இருந்தபோதிலும், கடந்த 16 ஆம் திகதி பௌர்ணமி தினப் பூசையின்போது பக்தர்கள் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால், சிவாலயத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

கன்னியா வெந்நீரூற்று பகுதி தமிழர்களினதும் இந்துக்களினதும் புனிதப் பிரதேசம் என்பது இதிகாசங்கள் மூலமும் திருக்கோணேசர் கல்வெட்டின் மூலமும் கன்னியா தமிழ் மக்களின் பூர்வீகப் பூமி எனத் தெளிவு பெறுகின்றது. இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான இராவணன் தனது தாயாரான கைகேயியின் வழிபாட்டிற்காகத் திருக்கோணேஸ்வரத்தில் சிவனை நோக்கிக் கடும் தவம் செய்த போது, இந்தத் தவம் பலித்து சிவலிங்கத்தைப் பெற்று உலகில் பிரதிஸ்டை செய்துவிட்டால், பிரபஞ்சத்தையே ஆளக்கூடிய பலம் பொருந்தியவனாக இராவணன் மாறி விடுவான் என்று கூறப்பட்டுள்ளது. அதற்காக முனிவர் வேடம் பூண்டு வந்த கிருஷ்ணர், உனது தாயார் இறந்து விட்டார் எனக் கூறிய போது தனது தாயாரின் ஈமக்கிரியையைத் தாங்களே செய்து வைக்குமாறு முனிவர் வேடத்தில் இருந்த கிருஷ்ணரிடம் கேட்ட போது, திருகோணமலையின் மேற்குத் திசையில் உள்ள கன்னியாவில் ஏழு இடங்களில் தனது கையில் இருந்த தண்டினால் ஊன்றியதன் காரணத்தால், ஏழு இடங்களில் வெவ்வேறு வித்தியாசத்துடன் வெந்நீர் வெளிப்பட்டது என்ற வரலாறு வழி வழியாக கூறப்பட்டு வருகிறது. பல வரலாற்றுப் புத்தகங்களிலும் இந்த குறிப்புக்கள் காணப்படுகின்றன.  

மேலும், இலங்கையை ஆண்ட இராவணனின் தாத்தாவாகிய புலஸ்திய முனிவரின் மனைவியின் பெயர்தான் கன்னியா. அப்பெயரையே அன்று தொட்டு இந்தப் பிரதேசத்திற்கு அழைக்கபட்டு வருவதாகவும் திருமலை நவம் எழுதிய 'இராவண தேசம்' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

1869ஆம் ஆண்டில் திருகோணமலை 4 வருவாய் வட்டாரங்களாகவும் 1905ஆம் ஆண்டு 5 வன்னியப் பிரிவுகளாகவும் 31 பொலிஸ் விதானைப் பிரிவுகளாகவும் 120 கிராமங்களாகவும் பிரிக்கபட்டிருந்த போது தலை சிறந்த தமிழ் கிராமங்களில் ஒன்றாக கன்னியா விளங்கியுள்ளது.  

அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் உள்ளடங்கிய காணி 3 ஏக்கர் 1957ஆம் ஆண்டு அப்போ​ைதய அரசாங்க அதிபராக இருந்த அன்டன் ரொட்வெல் மெக்கெய்சியர் என்பவரால் உப்புவெளி பிரதேச சபைக்கு கையளிக்கபட்டது. அன்று முதல் 2010.10.05ஆம் திகதி வரை சிறப்பான முறையில் உப்புவெளி பிரதேச சபையினால் பரிபாலிக்கபட்டு வந்துள்ளது.  

இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ரஞ்சித் டி சில்வாவால் கன்னியா பிரதேசம் அங்கிருந்த வரலாற்று உண்மைகள் அடங்கிய விளம்பர பதாதைகள் உடைக்கபட்டுத் தொல்பொருள் திணைக்களத்திடமும் 15 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள வெல்கம் விகாரை விகாராதிபதியின் மேற்பார்வையில் விகாரை ஒன்றையும் அமைத்து; பௌத்தர்களுக்குரிய வரலாறுகளும் உள்ளீர்க்கப்பட்டதாக உப்புவெளி பிரதேச சபையின் 2010 ஆண்டு தவிசாளராக இருந்த த.காந்தரூபன் தெரிவித்துள்ளார்.  

கன்னியாவில் உள்ள பிள்ளையார் ஆலயத்தைப் புனரமைக்க எண்ணிய ஆலயத்தின் நிர்வாகிகள் அவ்வாலயத்தின் தொன்மையை வைத்துக் கொண்டு புனரமைக்காது முற்றாக உடைத்து விட்டுப் புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு முற்பட்ட வேைள, வெல்கம் விகாராதிபதி நீதிமன்றத் தடை உத்தரவு ஒன்றினைப் பெற்று அந்த இடிபாட்டுக்குள் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாகக்கூறி, அப்பிரதேசம் தொல்பொருள் திணைக்கத்தினரால் கையேற்கப்பட்டது. அங்கு பௌத்த கொடிகள் ஏற்றப்பட்டு உண்மையான வரலாறு மறைக்கப்பட்டும், மாற்றப்பட்டும் தொல் பொருள் திணைக்களத்தால் நுழைவுச் சீட்டு வழங்கி பணம் அறவிடப்பட்டும் வருகிறது.  

இருப்பினும் இங்குள்ள சிவாலயத்தில் தென் கையிலை ஆதீனத்தின் முயற்சியில் பூசைகளும் யாகங்களும் இடம் பெற்று வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகள் ஆடி அமாவாசை பூசையும், பித்துருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வும் ஆயிரக் கணக்கான இந்துக்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம் பெற்று வந்தது.  

இவ்வாறு இருந்த சூழலில் 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு அதிலே பௌத்த விகாரை அமைப்பதற்கு வெல்கம் விகாரையைச் சார்ந்தவர்களால் முயற்சி மேற் கொள்ளபட்டு வந்தது. அதனைத் தென் கையிலை ஆதினத்தினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, அவர் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடன் கதைத்து உடனடியாக அதனை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு; உடைக்கும் வேலை இடைநிறுத்தபட்டது.  

அதன் பின் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் இவ்விடயம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு அவ்விடயத்தில் எந்த அபிவிருத்தியும் மேற் கொள்ளக்கூடாது என தீர்மானம் எடுக்கப்பட்டது.  

இந்த நிலையில்தான் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் கன்னியாவுக்கு நேரடியாக வருகை தந்து விகாரையின் அதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுகமான முறையில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டுப் பிள்ளையார் ஆலயத்தைப் புனரமைப்பதற்கான அனுமதியும் பெற்றுத் தரப்படும் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.  

இவ்வாறிருக்கையில், கடந்த 2019 ஜூலை 08ஆம் திகதியில் இருந்து மீண்டும் பிள்ளையார் ஆலய அத்திவாரம் உடைக்கப்பட்டு விகாரை அமைக்கும் பணியை முன்னெடுப்பதாகத் தென் கையிலை ஆதீனத்தார் தெரிவித்ததுடன் அதனை நிறுத்துமாறு விகாரதாதிபதியிடம் கோரியிருந்தார். அப்போது இவ்வேலையை செய்வதற்கு சட்ட ரீதியான அனுமதியை நாம் 12.06.2019 திகதியில் பெற்றுவிட்டதாகக்கூறி, அதற்கான அனுமதிக் கடிதத்தையும் ஆதீனத்தாரிடம் பௌத்த குருக்கள் காட்டியுள்ளார்கள். குறித்த அனுமதிக் கடிதம் தொல் பொருள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட சில அமைச்சுக்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்றவற்றின் ஊடாக கிடைக்கப்பெற்றவையாகவும் தென் கையிலை ஆதீனத்தால் குறிப்பிடப்பட்டிருந்து.  

இதன் பின்னர் முகப்புத்தகம் மூலமாகவும் மற்றும் தென் கையிலை ஆதீனம், தமிழர் மரபுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு போன்ற வற்றின் அழைப்பின் பேரினால், கடந்த 16ஆம் திகதி கன்னியா பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், முன்னோடிகள் அரசியல் பிரதிநிகள் எனப் பலரும் திரண்டனர்.  

அதற்கு முன்னர் முகப்புத்தகத்தில் இவ்விடயம் பிரலமாக பேசப்பட, கன்னியா பிரதேசத்தில் இன முரண்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கூறி நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்று, இவ்விடத்தில் கூட்டம் கூடுவதற்கோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதன் கரணமாக கன்னியாவில் திரண்ட தமிழ் மக்களுக்கும் பொலிசாருக்கும் விகாராதிபதிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கன்னியா பகுதியில் சுமார் 5 மணி நேர பதற்றம் நிலவியது. வழமையாக பௌர்ணமி அன்று கன்னியா சிவாலயத்தில் நடந்து வந்த யாக பூசையை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், வீதியில் பக்தர்கள் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வழிபாடுகளை செய்தனர். அத்துடன், தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வரும் கன்னியா ஆலயத்தின் காணிகளுக்கு உரித்துடைவருமான கோகிலவாணி ரமணி அம்மையார் ஆகியோருக்குச் சுடச்சுட தேயிலை சாயம் ஊற்றப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் குறிப்பிடுகையில், கன்னியா இலங்கை மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் உள்ள தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் சொந்தமான பாரம்பரிய பூமி. இதிலே பௌத்த மதம் எந்தக் காலத்திலும் இருந்ததும் கிடையாது; பௌத்தர்கள் உரிமை கோரவும் முடியாது. இங்கு அவர்களால் சித்தரிக்கப்படும் பௌத்த சின்னங்கள் அவர்களாலே போடப்பட்டு மீண்டும் தோண்டப்பட்டு எடுக்கப்படுபவையென இப்பகுதி மக்களாலும் தொடர்ச்சியாக வழியுறுத்தப்பட்டு வருகின்றது.  

2010ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்க அதிபரால் இந்த ஆலயத்தின் வராலாறு மாற்றப்பட்டமையே தற்போதைய முறுகல் நிலைக்குக் காரணம். பிள்ளையார் ஆலய அத்திவாரம் உடைக்கப்படுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமருடன் பேசியதாகவும் அதனைத்தொடர்ந்து பிரதமர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொலைபேசியில் உரையாடி உயர் மட்டத்தில் பேசித் தீர்மானம் ஒன்றை எட்டும் வரை, கன்னியாவில் எந்த ஒரு புனரமைப்புக்களும் மேற்கொள்ளக் கூடாதென உத்தரவிட்டு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன. எனவே, இன முரண்பாடுகளும் ஆவேசமான செயற்பாடுகளினாலும் பின்னடைவும் பாதிப்புக்களுமே தமிழர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, நிதானமாகப் பொறுப்புச் சொல்லக் கூடியவர்கள் கன்னியாவின் விடயத்தைக் கையாள வேண்டும். அந்த அடிப்படையில் நாம் கன்னியாவில் சிவாலயம் புனரமைப்புச் செய்யவும் கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தின் பரிபாலனம், உப்புவெளி பிரதேச சபைக்குக் கிடைப்பதற்கான பணிகளையும் தொடர்ந்து முன்னேடுத்தே வருகின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் தெரிவிக்கின்றார்.  

எவ்வாறாயினும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் சாட்சி பகிரக் கூடிய பிரபலமான ஒரு தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தையும் இந்துக்களின் புனித பூமியையும் அடாத்தாக கபளீகரம் செய்வதென்பது எந்த விதத்தில் இன நல்லிணக்கத்திற்கு வழிகோலும்? என்பதே இன்று தமிழ் மக்கள் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடைகாண வேண்டியது அரசினதும் அரசியல்வாதிகளினதும் தலையாய கடமையாகும்.

அன்புவழிபுரம் வ. ராஜ்குமார்

Comments