சொக்கன்: மரபு வழித் தமிழ் புலமை நவீன இலக்கிய ஆளுமை | தினகரன் வாரமஞ்சரி

சொக்கன்: மரபு வழித் தமிழ் புலமை நவீன இலக்கிய ஆளுமை

தமிழ் உலகிலும் ஈழத்தமிழ் இலக்கிய உலகிலும் ‘சொக்கன்’ என்றே பரவலாக அறியப்பட்டவர் பண்டிதர் க. சொக்கலிங்கம். 

அச்சுவேலி ஆவரங்காலில் 02.06.1930ல் பிறந்தவர் சொக்கன். தந்தை பெயர் கந்தசாமிச் செட்டி தாயார் பெயர் மீனாட்சி. சொக்கன் என்பது உட்பட  நிறையவே புனை பெயர்களுக்குள் மறைந்து நின்று எழுதிய இவரின் புனைபெயர்களில் ஒன்று மீனாம்பிகாசமேதன சோனா என்பது. தாயையும் தன்னையும் இணைத்து இட்டுக் கொண்ட பெயராகவும் இருக்கலாம். மரபும் நவீனமும், பழமையும் புதுமையும், வயதும் வாலிபமும் இணைந்து மேலெழுந்த இலக்கிய ஆளுமையல்லவா சொக்கன். 

‘நான் எழுத்துத் துறையில் ஈடுபட்ட காலம் 1944. அப்போது எனக்கு பதினான்கு வயது’ என்று அவரே குறிப்பிட்டிருக்கின்றார். வீரகேசரியில் வெளிவந்த இவரது முதல் சிறுகதை தியாகம். 1944ல் அந்தக் கதை பிரசுரம் பெற்றிருக்கிறது என்று பதிவு செய்கின்றார் தி.ஞானசேகரன். (சரித்திரம் பேசும் சாஹித்திய ரத்னா விருதாளர்கள்) 

பண்டிதர், வித்வான் போன்ற பட்டங்கள் பெற்றவர். இளங் கலைமாணி, முதுகலைமாமணி கலாநிதி போன்ற பல்கலைக்கழகப் பட்டங்கள் பெற்ற கல்விமான் தனது எழுத்துலக ஆரம்பத்தை சிறுகதையுடனேயே தொடங்கியுள்ளமைதான் மரபும் நவீனமும் இணைந்த இலக்கியச் செழுமைக்கான எழுத்தூழியம். ஏதோ பேருக்குச் சிறுகதையுடன் ஆரம்பித்த நவீன இலக்கிய எழுத்தாரம்பம் அல்ல மூதறிஞர் சொக்கனுடையது. சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி முதல் பரிசு இரண்டாம் பரிசு எனப் பரிசுப் பெற்றவர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் படைத்து 1972ல் கடல் என்னும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டு அந்த ஆண்டின் சிறந்த சிறுகதை நூலுக்கான இலங்கை அரசின் சாஹித்திய விருதினை சு.வேயின் மண்வாசனையுடன் பகிர்ந்து கொண்டவர். 

சிறுகதையுடன் வீரகேசரியில் ஆரம்பித்த எழுத்துப் பணியின் பயணம் ஈழகேசரி, மறுமலர்ச்சி, விவேகி, கலைச் செல்வி தினகரன்என்றும், வானொலி என்றும், சிறுகதை, நாவல், கவிதை கட்டுரை, விமர்சனம், நாடகம், மொழிபெயர்ப்பு, பாடநூல்கள் என்றும் கரை புரண்டோடியது. 

அறுபதுகளில் இவர் தினகரனில் எழுதிய தொடர் நாவல் ‘செல்லும் வழி இருட்டு? (1961) விவேகியில் எழுதிய தொடர்நாவல் சீதா (1963)  இந்த இரண்டு நாவல்களுமே வீரகேசரி வெளியீடாக நூலுருப் பெற்றுள்ளன. செல்லும் வழி இருட்டு 1973: சீதா 1974. 

முரசொலி வெளியீடாக சொக்கனின் மூன்றாவது நாவல் ‘சலதி’ 1986ல் வெளிவந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தின் மாதவியை நாயகியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் இது. 

ஒரு சிறுகதைத் தொகுதி மூன்று நாவல்கள் எனப் புனைவிலக்கியத்துறையில் அயர்வின்றி செயற்பட்டவர் இந்தக் கல்வியியலாளர். 

தனது முதுமாணிப் பட்டத்துக்காக இவர் சமர்ப்பித்த ஆய்வு ‘ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி’ என்பது. இந்த ஆய்வேட்டுக்காக பேராதனைப் பல்கலைக்கழகம் சொக்கனுக்கு முதுமாணிப் பட்டமளித்திருக்கிறது. 

சேக்ஸ்பியரின் மேர்ச்சண்ட் ஆப் வெனில் நாடகத்தைத் தமிழ்ப்படுத்தியதன் மூலம் நாடகத் துறைக்குள் காலெடுத்து வைத்த சொக்கன் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கின்றார். ஈழத்து நாடக வளர்ச்சிக்கான தனது பங்களிப்பினையும் செய்திருக்கின்றார். 

கலைக்கழகம் பரிசு பெற்ற சிங்க கிரிக்காவலன்: சிலம்பு பிறந்தது ஆகிய இரண்டு நாடகங்களும் நூலாசிரியருடையவை. அத்துடன் ‘தெய்வப்பாவை?’ ‘நாவலர் நாவலரான கதை’ ஆகியவையும் நூலுரு பெற்றுள்ளன. நாடக நூல்களாக நான்கு நூல்கள் வந்துள்ளன. 

உத்தியோக ரீதியில் கல்வித்துறையே இவரது துறை என்றாலும் நாடகத்துறையிலும் ஈடுபாடும் தொழிற்பாடும் கொண்டியங்கியவர் இவர். இந்த உத்துதலே ‘ஈழத்து நாடக வளர்ச்சி’ பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்துள்ளது. எம்.ஏ. பட்டத்துக்கான இந்த ஆய்வு பின்நாளில் நூலாகவெளியிடப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தினரால் 1977ஆம் ஆண்டு, ஈழத்துத்தமிழ் மக்களின் கலை இலக்கியம், மொழியியல், அறிவியல் சார்ந்த தரமான ஆய்வு நூல்களை வெளியிடுவதற்காக நிறுவப்பட்டது.

கழகத்தின் பொதுச் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டவர் சொக்கன். தமிழகத்தில் முதல் நூலாக சொக்கன் எழுதிய ‘ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி’ என்னும் ஆய்வு நூலை வெளியிட கழகத்து நிறுவக உறுப்பினர் யாவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள சொக்கனின் நாடக ஆய்வு நூல் 1977ல் வெளியிடப்பட்டது.  இரண்டாவது நூல் நா. சுப்பிரமணியத்தின் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்பது.

1977ல் கழகம் வெளியிட்ட முதல் நூலான சொக்கனின் ஈழத்தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி அந்த ஆண்டின் சிறந்த ஆய்வு நூலுக்கான சாஹித்திய விருதினைப் பெற்றுக் கொண்டது. 

மரபுக்கவிதை வல்லுனரான இவர் “வீரத்தாய்? கவிதைக் கதம்பம், நசிகேதன், ‘நெடும்பாசி’ என ஆறுக்குமேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். நெடும்பா என்னும் தொகுதி இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றது. 1980மார்ச் இதழ் மல்லிகை ‘பொன் ஆண்டு எழுத்தாளர் சொக்கன் என்று அட்டைப் படமிட்டுப் பாராட்டியுள்ளது. அட்டைப்படக் கட்டுரை நந்தி.  

ஓரிடத்தில் நந்தி இப்படிக் குறிக்கின்றார். கல்லூரி அதிபர் தேர்வுக்காகச் சென்றபோது  சொக்கலிங்கம் தன்னுடைய நூல்களை எடுத்துச் சென்றிருக்கின்றார். நேர்முகம் செய்த சிங்கள அதிகாரி ‘என்ன உமது பாடசாலையின் லைபிரியைக் கொண்டு வந்திருக்கின்றீர் என்றாராம். நாவல்கள், நாடகங்கள் 4கட்டுரைத் தொகுப்புக்கள் 6சமய நூல்கள் 16என்று கணக்கிடுகின்றார் நந்தி. 

சொக்கன் அவர்களது பேனா புதுப் பொலிவுடன் வற்றாது இயங்குகிறது. எழுத்தின் பலதுறைகளில் பிரகாசிக்கும் சொக்கன் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை கொண்டவர் எனச் சிலாகிக்கின்றார் பேராசிரியர் நந்தி. 

யாழ். பல்கலைக்கழகம் இலக்கியக் கலாநிதிப் பட்டமளித்துப் பெருமையளித்தது. இலங்கை அரசு சாகித்திய ரத்னா விருதளித்துக் கௌரவித்தது (2003)  மரபும் நவீனமும், இணைந்த இலக்கிய ஆளுமை மிக்க சொக்கன் அவர்கள் 02.10.2004ல் அமரர் ஆனார்.

Comments