பலாலி: சென்னைக்கான விமான சேவை​யே மக்களின் தேவை | தினகரன் வாரமஞ்சரி

பலாலி: சென்னைக்கான விமான சேவை​யே மக்களின் தேவை

யுத்தம் தின்று எஞ்சிக்கிடக்கும் வடக்கு இன்று மெல்ல மெல்ல தன்னுடைய பழைய நிலையை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றது. அந்த நகர்வின் மிக முக்கியமான ஒரு படிக்கல்லாக பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணி அமையப் போகின்றது. பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளில் கிட்டத்தட்ட பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து இந்தியாவிற்கான பிராந்திய விமான சேவைகள் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

வட பகுதியின் அபிவிருத்தியில் மிக முக்கியமான படிக்கல்லாக இது  அமையப் போகின்றதென்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் வட பகுதியை பொறுத்தவரையில் முப்பது வருட யுத்த காலத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அது மிகப்பெரிய அளவில் அபிவிருத்தியில் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் யுத்தத்தின் விளைவுகள் முற்றுமுழுதாக வடக்கை முடக்கிப் போட்டிருக்கும் சூழ்நிலைகள் தான் ஏற்பட்டு இருக்கின்றன.  

அந்த வடபகுதியை முன்னோக்கி அல்லது மேல் நோக்கிச் செல்வதற்கான  ஒரு மிகப் பெரிய அடித்தளமாக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அமைக்கும் நடவடிக்கைகள் அமைகின்றன. இந்த விமான நிலையத் திறப்பும் விமான  சேவைகள் ஆரம்பித்தலும் என்பன அவ்வாறான முன்னேற்றத்திற்கானவை என்பதில்  எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.  

ஏனெனில் ஒரு பிராந்தியம் அபிவிருத்தியில் முன்னோக்கிச் செல்ல  வேண்டுமானால் அங்கே இருக்கக் கூடிய கட்டமைப்புக்களில் துறைமுகம்,  போக்குவரத்து. விமான நிலையம் என்பன மிக முக்கியமான பங்கைச் செலுத்துகின்றன.  அந்த வகையில் அபிவிருத்தியில் மிக முக்கியமான பங்களிப்பை தாக்கத்தைச்  செலுத்தப் போகின்ற விமான சேவை என்பது வட பகுதியின் யாழ்ப்பாணத்திலிருந்து  குறிப்பாக பலாலியில் இருந்து ஆரம்பிக்கப்படப் போகிறதென்பது மிக முக்கியமான  ஒரு அடைவு மட்டமாகவே இருக்கப் போகிறது.  

அதனை விட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு  என்பதற்கப்பால் தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுத்  தொடர்பு இந்த விமான சேவையினூடாக மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள்  இருக்கின்றன. வர்த்தக , கலாசார ரீதியான தொடர்புகள் தென்னிந்தியாவிற்கும்  வட, கிழக்கு பகுதிக்கும் மீண்டும் கட்டியெழுப்பப்படப் போகின்ற அல்லது  மீண்டும் ஆரம்பிக்கப்படப் போகிற சூழலை பலாலி விமான நிலைய சேவை ஆரம்பம்  உருவாக்கிக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்க  முடியாது.  

பலாலி விமான நிலையத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு சிக்கல்கள்  தடைக்கற்கள் இருந்தாலும் அந்தத் தடைக் கற்களை மீறி இப்போது அபிவிருத்திப்  பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். அதே வேளை அந்த  பலாலி விமான நிலையத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணி  தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பது முக்கியமானது.    

ஏனெனில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களுடைய  நிலங்களை சட்டவிரோதமாக அல்லது அவர்களது விருப்பிற்கு மாறாக அபகரிப்பதென்பது  எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். அது பலாலி விமான  நிலையத்தின் இருப்புக்கும் அரசாங்கத்திற்கும் மிகப் பெரிய தலையிடியாக  அமையப் போகிறது. ஆகவே இந்தப் பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும்.  

அந்த மக்களுடைய ஒத்துழைப்புக்களோடு தான் செயற்படுவது  சிறந்ததாக அமையும். அவர்களின் கஷ்டங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.  மேலும் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டு பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்தியை முற்றுமுழுதாகச் சாத்தியமாக்குவது தொடர்பில் இலங்கை அரசு  சிந்திக்கின்ற நேரமாக இது இருக்கிறது.  

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி, ஒட்டுமொத்தமாக வடபகுதி  மக்களுக்கான வரப்பிரசாதமாக இருந்தாலும் அபிவிருத்தி என்ற போர்வையில்  குறிப்பிட்ட தொகை மக்கள் மிகப் பெரிய பாதிப்புக்களை சந்தித்து விடக்கூடாது  என்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. அதே  நேரத்தில் அந்த மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களும் இந்த விடயத்தில்  அக்கறையுடன் செயற்பட வேண்டியது அவசியம்.  

குறிப்பாக பலாலியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமான  சேவையானது இலங்கையின் ஏனைய இடங்களுக்கும் இந்தியாவின் மாநிலங்களுக்கும்  இடம்பெறப் போகிறது என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிக்குரிய  ஒரு செய்தியாகத் தான் அமைந்திருந்தது. ஆனாலும் இந்த மகிழ்ச்சிக்கு இடையூறு  அல்லது பங்கம் விளைவிக்கும் வகையில் முதற்கட்டமாக பலாலியில் இருந்த  இந்தியாவின் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கே சேவைகள்  இடம்பெறவுள்ளதாக அரச தரப்பிலே கூறப்படும் தகவலானது இந்த மக்களுக்கு  ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியைக் குறைத்திருப்பதை நாங்கள் மறுக்க முடியாது.    

ஏனெனில் வடபகுதி மக்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் தமிழ்  நாட்டோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்கள். அவர்கள் கலாசார மற்றும்  பண்பாட்டு ரீதியாக மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள். ஆகவே  தற்போது ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவையானது பலாலியில் இருந்து சென்னைக்கு  இயக்கப்பட வேண்டுமென்பது தான் மக்களின் விருப்பமாக இருக்கிறது.  

ஆனால் அந்த விருப்பத்திற்கு மாறாக பலாலியில் இருந்து முதலில்  சென்னைக்கான விமான சேவை இடம்பெறாது என்ற அறிவிப்பு இது உத்தியோகபூர்வமாக   இல்லாவிட்டாலும் இவ்வாறு மக்களுக்கு கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது.  அதனைவிட வடபகுதியில் இருந்து இந்தியாவிற்குச் செல்கின்ற விமானங்களில்  பெரும்பாலும் 95 சதவீதத்தினர் பயணிப்பது தென்னிந்திய மாநிலங்களுக்கு தான்.  அதிலும் குறிப்பாக சென்னைக்கே என்பது மறுக்க முடியாத உண்மை.  

ஆகவே சென்னைக்கான விமான சேவையை தொடங்காமல் வேறு  மாநிலங்களுக்கான விமான சேவையை தொடங்குவதன் ஊடாக எதிர்பார்த்த அடைவு  மட்டத்தை அடைய முடியாது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இருந்து  தென்னிந்தியாவிற்குச் செல்லக் கூடியவர்கள் 95 வீதமானவர்கள் இருக்கும் போது  அந்த 95 வீதமான மக்களுக்கான சேவையை ஆரம்பிக்காமல் 5 வீதமான மக்களுக்கான  சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக பயணிகளை மிகக் குறைந்த அளவிலே ஈர்த்துக் கொள்ளக்  கூடியதாக இந்த விமான சேவைகள் இருக்குமா என்ற அச்சமும் ஏற்படுகிறது.  

ஆகவே பலாலி விமான நிலையம் ஆரம்பிப்பதன் முழுமையான நோக்கத்தை  அடைய வேண்டுமாயின் தென்னிந்திய பகுதிகளுக்கு குறிப்பாக சென்னைக்கான விமான  சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் இந்த பலாலி விமான  நிலையத்தின் குறிக்கோளை முழுமையாக அடைய முடியாத ஒன்றாகவே இருக்கும்.

பலாலி,  காங்கேசன்துறை, மயிலிட்டி துறைமுகங்களின் அபிவிருத்தி  இடம்பெற்றிருக்கின்ற போதும் அப் பகுதி கடற்தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த  இடங்களுக்கு அனுமதிக்கப்படாத நிலையில் அந்தத் துறைமுகத்தால் முழுமையான பயனை  பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது எந்தளவிற்கு உண்மையாக  இருக்கிறதோ அதே போன்று தென்னிந்தியாவிற்கான விமான சேவையை ஆரம்பிக்காமல்  இருப்பதனூர்டாக பலாலி விமான சேவை ஆரம்பிப்பதன் முழுப் பயனையும் பெற்றுக்  கொள்ள முடியாது என்பதே யதார்த்த பூர்வமானதாக இருக்கிறது.  

ஆகவே மக்களுடைய விருப்பத்தைப் புரிந்து கொண்டு அதே நேரம் நிதி  ஆதாயங்களையும் கருத்திற் கொண்டு தென்னிந்தியாவிற்கான சேவையையும் ஆரம்பிக்க  வேண்டுமென்பது தான் மக்களுடைய விருப்பமாக இருக்கிறது. அதனை விட பலாலி  விமான நிலையம் முதலிலே பிராந்திய விமான நிலையமாகத் தான் அபிவிருத்தி  செய்யப்படப் போகிறது. அதனைத் தொடர்ந்து சர்வதேச விமான நிலையமாக தரம்  உயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்.  

ஏனெனில் தமிழ்  தேசிய கூட்டமைப்பினரை அண்மையில் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியபோது இது குறித்தான  தகவல்களை வெளியிட்டிருக்கின்றார். அதாவது முதற்கட்டமாக இந்திய  மாநிலங்களுக்கான சேவைகள் பலாலியில் இருந்து ஆரம்பிக்கப்படும். அதனைவிட சீனா  மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் சேவைகளை ஆரம்பிக்க  எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் கூறியிருக்கின்றார்.

எது எவ்வாறாக  இருந்தாலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, அங்கிருந்து விமான சேவைகளை  ஆரம்பிப்பது என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிக்குரிய  மிகப்பெரிய அடைவுமட்டமாகவே இருக்கப் போகிறது. தமிழ் மக்கள் மட்டுமன்றி  ஒட்டுமொத்த இலங்கையைப் பொறுத்தவரையிலும் அதிக அன்னியச் செலாவணியை ஈட்டித்  தருகின்ற ஒரு செயற்பாட்டு மையமாக பலாலி விமான நிலையம் அமையப் போகிறது. ஆகவே  இதனைக் கருத்திற் கொண்டு அதிக கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும்.  

அதனைவிட இன்னுமொரு முக்கியமான விடயமாக பலாலியில் இருந்த  ஐரோப்பாவிற்கான சேவையை ஆரம்பிப்பதன் ஊடாகவும் அதிக இலாபத்தையும் அந்நியச்  செலாவணியையும் இலங்கை அரசாங்கம் அடையக் கூடியதாக இருக்கும். யுத்தத்தின்  விளைவாக வடபகுதியில் இருந்து கிட்டத்தட்ட பத்து இலட்சம் வரையான மக்கள்  இன்றைக்கு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள்  உறவுகளை, ஊரைப் பார்ப்பதற்காகவும் வடபகுதிக்கு அடிக்கடி விமானப் பயணங்களை  மேற்கொள்கின்ற நிலையில் நேரடியாக பலாலி விமான நிலையத்திற்கான சேவையை  ஆரம்பிப்பதனூடாக அரசாங்கமும் மக்களும் அதிகளவு நன்மையை அடைய முடியும்.  

இப்போது பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை விமான  நிலையத்திற்கான சேவை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்ற  நிலையில் இது தொடர்பாக அரசாங்கத்தோடு தாங்கள் தீவிரமாகப் பேசி வருவதாகக்  கூறுகிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.  பலாலியில் இருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட  வேண்டுமென்பது தான் தங்களுடைய விருப்பமாக இருக்கிறதென்றும் அவர்  கூறியிருக்கின்றார்.  

 இது தொடர்பாக அரசாங்கத்திற்கு தாங்கள் அழுத்தம்  கொடுத்ததாகவும் விரைவில் தென்னிந்தியாவிற்கான விமான சேவையையும்  ஆரம்பிப்பதற்கான வழிகளை தாங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராசா  கருத்துத் தெரிவித்திருக்கிறார். ஆகவே அவரது கருத்து மெய்யப்பட  வேண்டுமென்பது தான் மக்களுடைய எதிர்பார்ப்பாகவும் தேவையாகவும் இருக்கிறது.

எஸ். நிதர்ஷன் - பருத்தித்துறை விசேட நிருபர்

Comments