சமூக வக்கிரத்திலிருந்து பெண்கள் மீண்டெழ வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சமூக வக்கிரத்திலிருந்து பெண்கள் மீண்டெழ வேண்டும்

பெண்ணுக்குச்  சுதந்திரம் இல்லை என்கிற உண்மையை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான் சரியான தீர்வை நோக்கி நகர முடியும். பெண்ணுக்குச் சுதந்திரம்  இருக்கிறதா இல்லையா என்பதிலேயே முரண்பட்டுக் கொண்டிருந்தால் அங்கேயே தேங்கி  விட வேண்டியதுதான். பெண்ணுக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று  சொல்கிறவர்கள் எதனடிப்படையில் சொல்கிறார்கள் என விளக்க வேண்டும்.

இது இலங்கையிலோ, இந்தியாவிலோ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த உலகிலுமே பெண் சுதந்திரம் இல்லை என்றுதான் சொல்வேன். மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு பரிபூரண சுதந்திரம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. சம தகுதியுடைய ஆண் வாங்குகிற ஊதியத்தை ஒரு பெண்ணால் வாங்க முடியாது என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். பெண் சுதந்திரம் வேண்டும் என்றால் அவள் யாரையும் சார்ந்து வாழாமல் இருப்பதற்கான பொருளாதார  வலுவும் அவசியம்.

ஆண் - பெண் இரு பாலினங்களுக்குமான பொருளாதார சமன்பாட்டை  உருவாக்குவது மிகவும் அவசியமானது. எந்த சமரசமுமின்றி தான்  விரும்பியதைச் செய்ய முடிவதுதான் பெண் சுதந்திரம் என நான் நினைக்கிறேன்.  ஆனால் பெண் என்று வரும்போது முன் தீர்மானங்களுக்குள் வந்து விடுகின்றனர்,  பெண் என்பவள் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற ஒரு சட்டகத்துக்குள்  அடைக்கப் பார்க்கின்றனர். சிறிய உதாரணம் சொல்கிறேன். இன்றைக்கு டீக்கடையில் நின்று நான் டீ குடிக்க முடியுமா? அப்படி நான் குடித்தேன் என்றால் என்னை  ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள்.

ஏனென்றால் பெண் என்பவள் பால் வாங்கி  வீட்டில் டீ போட்டு குடிப்பவள் என்கிற முன் தீர்மானத்துக்குள் அவர்கள்  இருப்பதுதான் இங்கு பிரச்சினை. இப்படியாக ஒவ்வொரு பெண்ணுடைய உடல், மனம்  ஆகியவற்றை அடுத்தவர்கள் நிர்ணயிக்கும் நிலைதான் இருக்கிறது. இச்சமூகம்  தீர்மானித்து வைத்திருக்கும் பெண் என்கிற சட்டகத்தை விட்டு வெளியே வந்து  சுதந்திரத்துடன் வாழும் பெண்களை தவறானவள் என்றுதான் பார்க்கின்றனர்.

அதே போல் பெண்ணை ஒரு பொருளாகப் பார்க்கும் பார்வையும் மாற வேண்டும். male gaze  என்று சொல்லக்கூடிய ஆணின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்களுக்கு விடுதலை வேண்டும். படித்த பெண், படிக்காத பெண். உயர் பொறுப்பிலிருக்கும் பெண்,  சாமானியப் பெண் என்கிற பேதமெல்லாம் இங்கு இல்லை. யாராக இருந்தாலும் அவள்  பெண். பெண்ணை இப்படித்தான் நடத்துவோம் என்கிற சமூக மனநிலைக்கு எதிரான  நிலைப்பாட்டை ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டும்.

Comments