இலங்கையின் நல்வாழ்வுக்கு புத்துயிரூட்டும் ஆன்மாக்கள் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் நல்வாழ்வுக்கு புத்துயிரூட்டும் ஆன்மாக்கள்

இன்னும் 13 தினங்களில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தல் பரப்புரைகளில் பொருளாதாரம், இன ஒற்றுமை, மத நல்லிணக்கம், வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, மனித உரிமைகள் மகளிருக்கான இட ஒதுக்கீடு எனப் பல விஷயங்கள் பேசப்படுகின்றன. உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு வாதப் பிரதிவாதங்களும், சவால்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் முக்கியமான ஒரு விடயம் பற்றி மட்டும் பேசப்படுவதாகத் தெரியவில்லை. அது தான் சிறுவர் உரிமைகள். இந்நாட்டில் வாழும் அறுபது லட்சம் சிறுவர் சிறுமியரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதோடு அவர்களின் உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்படும் வகையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என எவரும் பேசுகின்ற மாதிரியும் தெரியவில்லை; ஊடகங்களும் இது பற்றி குறிப்பிடுகின்ற மாதிரியும் தோன்றவில்லை. 

ஒரு நாட்டின் நல் எதிர்காலத்துக்கு மகளிர் மற்றும் சிறுவர் சிறுமியரின் நல்வாழ்வே அடித்தளமாகிறது. குடும்பமொன்றின் சிறப்புக்கு எப்படி ஒரு பெண் முக்கியத் தேவையோ அதே போலவே நாடொன்றின் நல் எதிர்காலத்துக்கும் பெண்கள் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களை நற்பிரஜைகளாக வளர்த்தெடுக்கும் பெரும் பொறுப்பை பெருமளவில் நிர்வகிப்பவர்கள் பெண்களே. ஆனால் இந்த ஆணாதிக்க சமுதாய கட்டமைப்பில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் இவ்விரு பிரிவினரே என்பதால் தான் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சிறுவர்களுக்கான குரலை தொடர்ந்தும் உலகெங்கும் உரக்கவே ஒலித்து வருகிறது. சமுதாயத்தில் பெண்களின் மற்றும் சிறுவர்களின் பங்களிப்பை ஒரு சினமாப்பட இயக்குநரின் பங்களிப்போடு ஒப்பிடலாம். ஒரு படத்தை பின்னணியில் நின்று இயக்குபவர் அவரேயானாலும் படம் பார்ப்போருக்கு நடிக நடிகையர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் போன்றோரை மட்டுமே கண்களுக்கு தெரிவர். அவர்கள் அனைவரையும் ஆட்டுவித்த இயக்குநர் ரசிகர்களின் பார்வைக்குள் வரமாட்டார். பெண்கள் மற்றும் சிறுவர்களின் பங்களிப்பும் இந்த ஆணாதிக்க உலகில் அவ்வாறு தான் உள்ளது. 

ஏனைய சமூகப் பிரிவினர் போல சிறுவர்களுக்கு தமது உரிமைகள் பற்றித் தெரியாது. எவை கிடைக்கின்றனவோ அவற்றுடன் வாழ வேண்டிய நிலை காணப்படுவதாலேயே அவர்கள் வழி நடத்தப்பட வேண்டியவர்களாக, அரவணைக்கப்பட வேண்டியவர்களாக, உடல் மட்டுமன்றி உள ஆரோக்கியம் கொண்டவர்களாக பேணப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இக்காரியம் இந் நாட்டில் முறையாகக் கை கொள்ளப்படுகிறதா என்பதே கேள்வி. இந் நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் செயல்பாட்டில் இல்லை என்பது எவ்வளவுக்கு உண்மையோ அவ்வளவுக்கு உண்மையே, சிறுவர் தொடர்பான சட்டங்களும் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதாகும். 

உதாரணத்துக்கு ஒரு சம்பவம். அது ஒரு வடை விற்கும் சிறு பெட்டிக் கடை. அதை நடத்தி வருபவன் ஒரு 14 வயது மதிக்கத்தக்க சிறுவன். அக் கடையில் வழக்கமாக வடை வாங்கும் வாடிக்கையாளர் ஒரு நாள், நீ சும்மா இருக்கும் சமயத்தில் ஏதாவது பத்திரிகை வாசித்தால் என்ன? என்று கேட்டிருக்கிறார். அவன் சிரித்து மழுப்பவே வாடிக்கையாளர் விடாமல், நான் ஒரு சஞ்சிகை வாங்கித்தருகிறேன். சும்மா இருக்கும் நேரத்தில் வாசித்தால் பொழுதும் போகும், நாலு விஷயமும் தெரியும் என்று சொல்லியபடியே பக்கத்து பத்திரிகைக் கடையில் அந்த சஞ்சிகையை வாங்க முனைந்திருக்கிறார். பையன் வேண்டவே வேண்டாம் என ஒரேயடியாக மறுத்ததோடு. ஐயா, எனக்கு வாசிக்க வராது என உண்மையை கூறியிருக்கிறான். அந்த நபர் ஆச்சரியப்பட்டுப் போனாராம். பொகவன்தலாவையைச் சேர்ந்த அச் சிறுவனை அவனது பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பியிருக்கவில்லை. அச்சிறுவனது எதிர்காலம் கல்வியறிவு இல்லாததால் எவ்வளவுக்கு சீரழியப்போகிறது என்பதை எண்ணிப்பார்க்கும்போது நெஞ்சம் பகீரென்கிறது. இவரைப்போல இன்னும் எத்தனையோ ஆயிரம் சிறுவர்கள் கல்வி வாய்ப்பின்றி இந்நாட்டில் வாழ்கின்றனர். ஆனால் சிறுவருக்கான கல்வியோ சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.  

இவ்வாறு எத்தனையோ சிறுவர் உரிமை மீறல்கள் இந் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருப்பதால்தான் இத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்கள் சிறுவர் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறோம். 

தனது நாட்டுச் சிறுவர்களை ஒரு நாடு எப்படி நடத்துகிறது என்பதில் இருந்து அந்நாட்டு மக்களின் ஆன்மாவைப் புரிந்துகொள்ளலாம் என்று ஒரு முறை நெல்சன் மண்டேலா கூறியிருந்தார். இது முற்றிலும் உண்மை. எனவே, இலங்கையின் ஆன்மாவை முற்று முதலாக சிறுவர் சிறுமியரின் நல்வாழ்வின் பொறுப்பு மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு அடுத்ததாக பதவியில் அமரும் ஜனாதிபதிக்கு உரியது என்பதை இங்கே வலியுறுத்தி சொல்ல விரும்புகிறோம். சிறுவர்களிடையே காணப்படும் போஷாக்கு குறைபாட்டை முற்று முழுதாக நீக்க வேண்டிய அவசியம் உள்ளது. இலவச பாடநூல்கள், பைகள், சப்பாத்துகள் குழந்தைகளுக்கு அவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு முக்கியம். போஷாக்கான, உடல் ஆரோக்கியத்துக்கான உணவை வழங்குவதாகும், முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் பால் வழங்கப்பட்டது. பின்னர் பணிசும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. எனினும் இப்போது பாடசாலைகளில் சத்துணவு வழங்கும் உருப்படியான எந்தத் திட்டமும் இல்லை. தமிழக முதல்வராக வீற்றிருந்த கர்மவீரர் காமராஜர் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துவர வேண்டுமானால் அவர்களுக்கு விலையில்லா பகல் உணவு வழங்கப்பட வேண்டும் என எண்ணி சத்துணவு திட்டத்தைக் கொண்டுவந்தார் எம்.ஜி.ஆர். அதை மீண்டும் அறிமுகம் செய்து இன்றளவும் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. ஏனெனில் இன்றைக்கும் கிராமப்புறம் மற்றும் தோட்டப் பாடசாலைகளுக்கு வெறும் வயிற்றுடன் வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் பதவிக்கு வந்தால் பாடசாலைகளில் சத்துணவு வழங்குவேன் எனக் கூறியிருப்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம். 

மேலும் இன்றைய கல்வி நெட்டுருபோட்டு பாடங்களை மனனம் செய்து தேர்வுகளில் சித்திபெறும் வகையில் ஏட்டுச்சுரைக்காய் போல வடிவமைக்கப்பட்டுள்ளதால் பெற்ற கல்விக்கும் வெளியே காணப்படும் தொழில் வாய்ப்புகளுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் மாணவர்களை எதிர்கால சவால்களின் பேரில் தயார் செய்யும் வகையில் கல்வி முறைமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. சிறுபராய ஏழ்மையை அரசு கட்டுப்படுத்துமானால் கல்வியால் ஏற்படுத்தப்படும் ஏற்றத் தாழ்வுகளை வெகுவாகக் குறைக்க முடியும். 

உலகெங்கும் யுனிசெப் நிறுவனம் வலியுறுத்திவரும் ஒரு விஷயம் தான். சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டிப்பதை தவிர்ப்பதாகும். சிறு பராயத்தில் வழங்கப்படும் கடும் தண்டனைகள் அவர்களை உளரீதியாகப் பாதித்து அவர்களது வளமான எதிர்காலத்தைக் குலைத்துவிட முடியும் என்பது உளவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. எனினும் தொடர்ச்சியாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுவர்களை கடுமையாகத் தண்டிப்பது இடையறாமல் நடந்தே வருகிறது. மொத்தத்தில் சிறுவர்களுக்கு ஏற்படுத்தித்தரப்படும் வளமான, பசிப்பிணியற்ற, கற்பதற்கு ஏற்ற சூழலானது வளமான, சுபீட்சமான எதிர்கால இலங்கைக்கு வித்திடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  

நாம் பெரியவர்களை புரிந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் எத்தனத்தை சிறுவர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கவும் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் இரண்டு சதவீதத்தையே அரசுகள் கல்வித்துறையின் பேரில் செலவிட்டு வந்துள்ளன. குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் கல்வித்துறை மீதான நான்கு சதவீத முதலீட்டுடனும் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் செலவிடும் ஐந்து சதவீத முதலீட்டுடன் ஒப்பிடும் போது இலங்கையின் இரண்டு சதவீத செலவீடு என்பது போதுமானதல்ல. சிறுவர்கள் மீதான அரசின் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படுவதன் அவசியத்தையே இது சுட்டிக் காட்டுகிறது.     

Comments