தமிழ் எம்.பிக்கள் வெளிப்படுத்த வேண்டிய சாதகமான சமிக்ஞை! | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் எம்.பிக்கள் வெளிப்படுத்த வேண்டிய சாதகமான சமிக்ஞை!

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் கடந்து விட்டது. யுத்தம் முடிவடைந்ததும், நாட்டில் அச்சம் நிறைந்த யுகமும் நீங்கி விட்டதென்பது உண்மை. கடந்த பத்து வருட காலத்துக்கு மேலாக மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்ந்து வருகின்றனரென்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனாலும் யுத்தம் நீங்கி விட்டதனால் நாட்டில் அனைத்துமே சுமுகநிலைமைக்கு வந்து விட்டதென்று அர்த்தம் கொள்ள முடியாது. உள்நாட்டு யுத்தத்துக்கு அடிப்படையான காரணியாக எது உள்ளதோ, அப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லையென்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த தேசியப் பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வு எப்போது எட்டப்படுகின்றதோ, அன்றுதான் எமது நாட்டில் சுமுகநிலைமை தோன்றி விட்டதாக அர்த்தம் கொள்ள முடியும்.

இந்நாட்டில் தமிழினத்தின் உரிமைப் போராட்டம் சுமார் ஏழு தசாப்த கால வரலாறு கொண்டதாகும். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து அஹிம்சை ரீதியில் ஆரம்பமான உரிமைப் போராட்டமானது, 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் போராட்டமாக உருமாறியது. அதன் பின்னர் மூன்று தசாப்த காலம் தொடர்ந்த கொடிய யுத்தமானது எமது நாட்டில் விளைவித்த பேரழிவுகளையும், பெருந்துன்பங்களையும் வார்த்தைகளால் விபரிக்க இயலாது.

கொடிய யுத்தம் முழுமையாக ஓய்ந்து விட்ட போதிலும், தமிழினத்தின் உள்ளத்தில் அரசியல் உரிமைக்கான கோரிக்கை இன்றும் நீங்காமலேயே உள்ளது.

நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு காணப்படும்வரை தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையானது   என்றும் தொடரவே போகின்றது. அனைத்து இனங்களும் ஏற்கக் கூடியதொரு தீர்வு காணப்பட்டாலேயே, தமிழ் மக்கள் சமரசமான மனோநிலைக்கு வர முடியும். அதன் பின்னரே நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கமும், நிலையான சமாதானமும் உருவாக வழியேற்படும்.

இவ்வாறான நிலையில், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சாதகமான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருதினங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியிருக்கின்றார். தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் மக்களுடன் இறுதி உடன்பாட்டை எட்ட முடியுமென்று தாம் எதிர்பார்ப்பதாக,  தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உருவான அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக  முதல் தடவையாக நம்பிக்கை தரும் கருத்தொன்றை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஜனாதிபதியின் இக்கருத்தானது தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்குமென்பதில் ஐயமில்லை.

அதேவேளை ஜனாதிபதியின் நம்பிக்கை எதிர்பார்ப்புக்கான சாதகமான அணுகுமுறையை எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு வடக்கு, கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டென்பது இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். ஜனாதிபதியின் நல்லெண்ணத்துக்கு நேசக்கரம் நீட்ட வேண்டிய கடப்பாடு தமிழ் எம்.பிக்களுக்கு உள்ளது.

Comments