அமெரிக்காவில் இருந்து பாடம் கற்குமா இந்தியா | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவில் இருந்து பாடம் கற்குமா இந்தியா

ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து சுஜித் என்ற 2வயது சிறுவன் மரணம் என்பது தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் மரணமல்ல. இதற்கு முன்னர் பல குழந்தைகள் இதேபோல் ஆள்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த நிலையிலும் இன்னும் அந்த மரணங்களில் இருந்து நாம் பாடம் கற்காமல் இருக்கின்றோம்.

இப்பொழுது கூட சுஜித்தின் மரணம் குறித்து முழுக்க முழுக்க பேசி வந்தாலும் இன்னும் இரண்டு நாட்களில் நாம் அதனை மறந்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கத் தொடங்கி விடுவோம் என்பதுதான் உண்மை. இதன் பிறகும் இன்னொரு ஆழ்துளை கிணறு மரணம் நிகழ்ந்தால் நம்முடைய பொருப்பின்மைக்கு எல்லையே இல்லை என்பதுதான் அர்த்தம்.  

இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் கூறவேண்டும். அமெரிக்காவில் கடந்த 1987ஆம் ஆண்டு ஜெஸிகா என்ற சிறுமி மிட்லேண்ட் நகரத்தில் தன்னுடைய வீட்டின் பின்பக்கத்தில் மூடப்படாத 22அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதனை அடுத்து மீட்பு படையினர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சவாலாக இருந்த பாறைகளை இயந்திரத்தின் மூலம் உடைத்து கிட்டத்தட்ட 50மணி நேரம் போராடி குழந்தையை உயிருடன் மீட்டனர். இந்த மீட்பு பணியை நாடே கொண்டாடியது. தற்போது அந்த ஜெஸிகாவுக்கு வயது 33. கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் ஜெஸிக்காவை மீட்ட கையோடு அமெரிக்கா உடனடியாக நாடு முழுவதும் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை போர்க்கால அடிப்படையில் மூடியது. அமெரிக்க மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததை அடுத்து அங்கு ஒரே மாதத்தில் ஒரு மூடப்படாத கிணறு கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டது. அதனால் தான் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளை கிணறு விபத்து கூட அங்கு நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் ஒன்றரை வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்தது. தற்போது ஒரே மாத இடைவெளியில் சுஜித் என்ற சிறுவன் மரணம் அடைந்தான். அடுத்தடுத்த ஒரு சில மாதங்களில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து மரணம் அடைவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அமெரிக்காவைப் போல் அதிரடியாக ஒரு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த மரணம் நீண்டுகொண்டே போகும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைப் பார்த்து இந்தியா மற்றும் அனைத்து மாநிலங்களும் பாடம் கற்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.     

Comments