கண்ணீர் தரும் ஆழ்துளை கிணறுகள்! | தினகரன் வாரமஞ்சரி

கண்ணீர் தரும் ஆழ்துளை கிணறுகள்!

தண்ணீரைப் பெறுவதற்காகத் தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகள், கண்ணீரைத் தருவதை இன்னும் எத்தனை காலத்திற்குப் பொறுத்துக்ெகாள்ளப்போகிறோம் என்ற கேள்வி இன்று பரவலாகக் கேட்கப்படுகிறது.

தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த சிறுவன் சுஜித் வில்சன், Bore well எனப்படும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிப் பல போராட்டங்களிடையே 80மணிநேரங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழகத்தை இந்தாண்டு தீபாவளியை, சோக நாளாக அனுசரிக்க வைத்துவிட்டது. தமிழகத்தில் மாத்திரமன்றி முழு இந்தியாவிலும், ஏன் முழு உலகத்திலும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.

சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அரசையும், அரச அதிகாரிகளையும் திட்டித்தீர்க்காதவர்களே இல்லை. குழந்தை சுஜித்தை இலகுவாக மீட்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், அநியாயமாகக் கொன்றுவிட்டார்கள் என்பதே இன்னமும் ஓயாத பேச்சாக இருக்கிறது.

அரசுகள் புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவும்; பழையவற்றைப் புதுப்பிக்கவும் வழிவகுத்த சுஜித், கவிஞர்களுக்குக் கவிதைக்கான கருவாகவும் போய்விட்டான்.

ஏதாவது விபத்தில் எவராவது இறந்தால், தமிழா, சிங்களமா, முஸ்லிமா? என்று கேட்கும் நமது நாட்டிலிருந்தும் கண்டனங்கள், அஞ்சலிகள்  எனும்போது சுஜித்தை மனத்தைவிட்டுப் பிரிக்க முடியாமல்தான் உள்ளது.

ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் மக்கள் மனமுருகி வழிபாடுகளையும் ஆராதனைகளையும் பிரார்த்தனைகளையும் செய்ததைப் பார்க்கும்போது, ஒவ்வோர் இழப்பும் மனிதனுக்குப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

இருந்தும்  இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் சிக்கும் குழந்தைகள் மீட்புப் பணிகளில் 70சதவீதம் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

இந்தியா, சர்வதேச அளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் மிகப்பெரிய நாடு. நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு நாடெங்கும் 27மில்லியன் ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தக் கிணறுகளில் தண்ணீர் வற்றியபிறகு, அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார் மற்றும் பிவிசி பைப்புகள் அகற்றப்படுகின்றன. ஆனால், அந்தக் கிணறுகள்  சரிவர மூடப்படுவதில்லை. 2009ஆம் ஆண்டு முதல் இந்த மூடப்படாத கிணறுகளில் 40இற்கும் மேற்பட்ட குழந்தைகள் விழுந்துள்ளன. இந்தக் குழந்தைகள் மீட்பு விவகாரத்தில் 30சதவீதம் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. 10வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே, இந்தக் கிணறுகளில் மரணத்திற்கு அதிகளவில் ஆட்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

 மத்திய நீர் மேலாண்மை அமைச்சு நடத்திய ஆய்வின்படி, கிராமப்பகுதிகளில் 85சதவீதமும், நகரப்பகுதிகளில் 50சதவீதம் குடிநீர் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. விவசாய பணிகளுக்காக 55சதவீதமும், போர்வெல்லின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த போர்வெல்களில் நீர் இருக்கும்வரை அவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் வற்றிய பிறகு, அவை பராமரிக்கப்படாததால், இதுபோன்ற போர்வெல் மரணங்கள் நிகழ காரணமாக அமைந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   விவசாய நடவடிக்கைகளில், நீர் பயன்பாடு மற்றும் மேலாண்மை பணிகளுக்காக, ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. இவை 100முதல் 1,500அடி ஆழம் வரை தோண்டப்படுகின்றன. 6அங்குலம் முதல் 12அங்குலம் வரையிலான பிவிசி பைப்புகளின் துணைகொண்டு, நிலத்தில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இலங்கையிலும் இந்தக் கிணறுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கிணறுகள் பெரும் செலவுசெய்து அமைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கிணறுகளில் பிள்ளைகள் வீழ்ந்து மரணித்த சம்பவங்கள் பதிவாகவில்லையென்பதைச் சொல்லியாகவேண்டும். ஆனால், கிணறுகளில் பிள்ளைகளுடன் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நிகழாமல் இல்லை.

சுஜித் வில்சனின் மரணத்துக்கு பின், சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.  

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றிய விழிப்புணர்வு தற்போதுதான் ஏற்பட்டுள்ளது.  

ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே திசை நோக்கித் தொழவைத்த குழந்தை சுஜித்  அனைவரையும் அழவைத்துப் போயிருக்கிறான்.மனித பிறப்பில் மரணம் தவிர்க்க  முடியாதது. ஒரு பூவைப்போல் மலர்ந்து, மணம் வீசி, உறவுகள் கண் நனைய போய்ச்  சேர்வது இயற்கை நியதி.இங்கே ஓர் அரும்பு மொட்டாவதைக்கூட அனுமதிக்காமல்  சூழ்நிலைச் சூறாவளி அதனை உலுப்பி மரணக்குழியில் தள்ளியிருக்கிறது என்கிறார் சந்திரகலா!

குழந்தைகளுகெதிரான  குற்றங்களையும், குழந்தைகளுக்கான ஆபத்துச் சூழலையும்  கண்டும் காணாமல் கடந்து போகும் கையாலாகாத இந்தச் சமூகமே, அனாதையாக கிடக்கும் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் சிக்கி உயிரிழப்பதற்குக் காரணம் என்கிறார் அவர்.

ஆபத்து வரும் திசைகள் அத்தனையும் கண்டறிந்து தடுப்பதில் அரசு  நிர்வாகத்துக்கும் சிக்கல்கள் இருக்கின்றன.எனவே அவரவர் ஊரை; அதுகூட  வேண்டாம், அவரவர் முற்றத்தை ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள  வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை​யே சுஜித்தின் மரணம்  சொல்லிவிட்டுப் போயிருக்கிறது.

Comments