யானை - மனித மோதலுக்கு பனை வேலி | தினகரன் வாரமஞ்சரி

யானை - மனித மோதலுக்கு பனை வேலி

எமது நாட்டில் யானை – மனித மோதல்களால் மரணிக்கும் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. புதிய தரவுகளின்படி இவ்வருடம் 240 யானைகளும் 2018ம் ஆண்டு 319 யானைகளும் மனித_ யானை மோதல்களால் மரணமடைந்துள்ளன. இரண்டு வருடங்களிலும் 165 மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

இதன்படி 1992களில் மின்சார வேலி இதற்கான தீர்வாக அமைக்கப்பட்டாலும் அது தற்போது தோல்வியடைந்துள்ளது. 

யானைகள் மின்சாரவேலியை கடக்க கட்டைகள் போன்ற மாற்றுவழிகளை பாவிப்பதும், புதிய கிராமங்கள் காரணமாக யானைகளுக்கு உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன.  

இதனால் மனித-யானை மோதல்கள் இடம்பெறுகின்றன. விசேடமாக காடுகளை அழிப்பது.  காணிகளை சட்டவிரோதமாக பிடித்து கட்டடங்களை அமைப்பதனாலும் மனித – யானை மோதல் உக்கிரமடைந்துள்ளது. இதற்கு தீர்வாக முன்னைய காலங்களில் விவசாயிகள் வேலியில் கற்றாழை வளர்த்தார்கள். அதிலுள்ள முட்கள் குத்தும் என்பதால் யானைகள் நுழைவது தடுக்கப்பட்டது. ஆனால் இன்று அவற்றுக்குப் பதிலாக மதில்கள் கட்டப்படுவதால் அவற்றை தள்ளிவிட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன. 

பல காலநிலை மாற்றங்களால் பல பிரதேசங்களிலுள்ள யானைகள் நாடு பூராவும் 100 கிலோமீற்றர் தொடக்கம் 150 கிலோ மீற்றர்வரை  இடம்பெயர்கின்றன. மனித – யானை மோதல்களுக்கு அவற்றின் இந்த பயண முறைகளுக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தடையே காரணமாக அமைகின்றது. 

இந்த யானைகள் கிராமங்களுக்கு நுழைவதை நீண்டகாலம் தடுப்பதற்கான தீர்வாக லேக்ஹவுஸ் நிறுவன சாரதியான சஜித் பெலதெனிய தாவர வேலியொன்றை அறிமுகம் செய்துள்ளார். 

நான் 16 வருடங்கள் அனுராதபுரத்தில் வேலைசெய்தேன். அங்கு இருக்கும்போது யானைகள் வீடுகளை, பயிர்களை சேதப்படுத்துவது நேரில் கண்டேன் ஆனால் அது வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவையாகும். யானைகள் செல்லும் பாதையில் 1982 தொடக்கம் 1986வரை யானை – மனித மோதல் காரணமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. 

யானைகளுக்கு அசிட் வீசிய சம்பவங்களையும் கண்டேன். பாடசாலைக்கு சென்ற சிறுமியொருத்தியையும் யானை கொன்று விட்டது. அதனை கண்ட நான் பட்ட துயரத்துக்கு அளவேயில்லை. அதனாலேயே இதற்கான தீர்வொன்றை காணமுயன்றேன். 

இதேவேளை நான் லேக்ஹவுஸில் வேலை செய்த நாட்களில் 2008 செப்டம்பர் 27ஆம் திகதி கிரியுல்லவில் உள்ள வீட்டிற்கு யானைகள் வந்து 20 நெல் மூடைகளை சாப்பிட்டு விட்டு சென்றிருந்தன. அம்மாவும் அப்பாவும் மாத்திரமே வீட்டில் இருந்தார்கள். எனக்கு மிகவும் பயமாகவும் இருந்தது. கவலையுமடைந்தேன். எனது தாய் தந்தை மாத்திரமல்ல, யானைகள் அதிகமாக கிராமங்களுக்கு வரும் பிரதேசத்தில் வசிப்பவர்களும் இதற்கு முகங்கொடுக்கின்றார்கள் என்பதை உணர்ந்தேன். இது பற்றி வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தோம். தீர்வு காணவில்லை. கிராமசேவகர்கள், பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தும் பலனில்லை. 

இதற்கு தீர்வை நாமே காண முடியாதா எனச் சிந்தித்தேன். அதன்படி, கள்ளிச்செடி, தூரியன், போகன்விலா, எலுமிச்சை போன்ற மரங்களை வளர்த்து அவற்றை தடுக்க முடியுமாவென முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. 

இதன் பின்னர் பனை மரம் குறித்து கவனம் செலுத்தினேன். பனை மரத்தை யானைக்கு உண்ண கொடுத்தால் அவை அவற்றை சாப்பிடவில்லை. பனம் பழத்தை சாப்பிட்டன. பனைமரத்து ஓலையில் மட்டைகளின் பகுதி மாத்திரமே எஞ்சியிருக்கும். அதனால் பனை மரத்தை யானைகள் தள்ளி வீழ்த்துவதில்லை. முள்போன்று அவை தடுக்கின்றன. அதனால் பனை மரங்களை ஒரு வரிவடித்தில் வளர்த்தால் அவற்றிலுள்ளே யானைகள் நுழையாது. அதனாலேயே யானைகளை தடுக்க பனைமரங்களை வளர்க்கும் யோசனையை கூறினேன். என பெலதெனிய தனது நோக்கத்தை தெரிவித்தார். 

பெலதெனிய குறிப்பிடும் வகையில் நுவரெலியாவை தவிர ஏனைய மாவட்டங்களில் மிக நன்றாக வளரக்கூடியது. அதனை யானைகளுக்கு வேலியாக அமைக்கலாம். பனை மர கன்றுகளை 2-3 வரிசையாக 8 அடிக்கு 8 அடி 3 வரிசையாக (சிக் செக்) ஒன்றுக்கு இடையே ஒன்றென நட்டால் அவை வளர்ந்தபின் யானைகளுக்கு அவற்றுக்கூடாக  நுழைய முடியாது. 

இவ்வாறு கிராமங்கள் மற்றும் தோட்டங்களைச்  சுற்றி பனைமர வேலிகளை அமைத்து அவற்றை பராமரிக்க வேண்டும். இந்த பனை மரவேலி 150 வருடங்கள் நிலைத்திருக்குமென பலர் கூறுகின்றனர்.

Borassus எனும் தாவரவியற் பெயரால் அழைக்கப்படும் பனைமரம் ஈட்டிபோல் சூரியனை நோக்கி வளரும். பனைமரங்கள் 140- முதல்  150 வருடங்கள் நிலைத்திருக்கக்கூடியவை. அவை எந்தவொரு காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியவை. 

எமக்கு சிறந்த வளமாகவுள்ள பனைமரம் ஆபிரிக்காவுக்குரியதாகும். இலங்கைக்கு விஜயன் வரும்போது இந்தியாவிலிருந்து பனம்பழங்களை கொண்டுவந்து விதைகளை இங்கு நட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

விஜய மன்னனால் இங்கு கொண்டுவரப்பட்டு,  மன்னார், தம்பபன்னி, யாழ்ப்பணாம், வடக்கு பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு  பின்னர் ஏனைய இடங்களுக்கும் பரவியதாக கூறப்படுகின்றது. 

பனைமரத்தை வடக்கில் தமிழ்மக்கள் கற்பகதருவென்று கூறுகின்றார்கள். அவர்கள் அம்மரத்தின் மூலம் பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். வடக்கு மக்களின் கற்பகதருவான பனைமரம் இலங்கையின் அநேக இடங்களில் குறைந்தளவு காணப்பட்டாலும் அநுராதுபுரம், பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் அதிகமாகவுள்ளன.  

எவ்வாறாயினும் அவற்றின் பெறுமதியை இலங்கை மக்கள் அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. இந்த மரத்துக்கு எங்குமே இரசாயன உரங்கள் போடப்படுவதில்லை. 

பனைமரத்திலிருந்து எமக்கு தேவையான பலவற்றை பெற்று க்கொள்ளலாம். நுங்கு, பனம்பழம், பனாட்டு, பனங்கற்கண்டு பனம்பலகாரம், ஒடியல், ஒடியல் மா என்பன அற்றில் சிலவாகும். 

பனம் விதைகளை நட்டு மூன்று மாதங்களில் முதல் இரண்டு இலைகளும் பூமிமட்டத்தக்கு வளரும். 

4-5 வருடங்களில் ஆறு அடி உயரம் வரை வளரும் 10 வருடங்களில் பலனைத் தர ஆரம்பிக்கும் பனைமரத்தின் கீழுள்ள மட்டைகள் மரத்துக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளன. அவற்றை அகற்றுவது மிகவும் சிரமமாகும். பனைமர முட்கள் பனைமரத்தின் பாதுகாப்புக்கு கிடைத்த வரபிரசாதமாகும். மிருகங்களில் காட்டு பன்றி, முள்ளம் பன்றி, யானை போன்றவை இவற்றின் அருகில் கூட செல்லாது. பனைமரங்கள் 100-_120 அடி உயரத்துக்கு வளரக் கூடியன. 

பனை மரத்தின் ஆண் பனை, பெண் பனை என இரண்டு வகைகளுண்டு. பனைமரம் மூலம் வருடமொன்றுக்கு 10.000 ரூபா தொடக்கம் 15000 ரூபாவரை வருமானம் பெறலாம். பனம் பாணி மூலம் பனங்கற்கண்டும் பனாட்டும், பனங் கருப்பட்டியும் தயாரிக்கலாம் இவை மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் நாம் அந்நிய செலாவணியை கூட சம்பாதிக்கலாம்.  பனையோலைகள் பெட்டிகள், பாய்கள், கைப்பைகள் எனக் கைவிளைபொருட்களையும் செய்து வறுமானம் பெறலாம். பனைமரத்தின் பெருமையை கொண்டாடவும் அதன் மூலம் பல நன்மைகள் பெறவும், மனித யானை மோதலைத்  தடுக்கவும் இந்த பனைமரம் உபயோகமாக இருக்கும். 

நிஹால் பீ. அபேசிங்க
சிலுமின

Comments