மாகாண சபைத் தேர்தலை ஜூனில் நடத்தத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைத் தேர்தலை ஜூனில் நடத்தத் திட்டம்

நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்டு வரும் ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னைகோன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் காலம் தாழ்த்தாமல் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் மாலை அமைச்சில் நடைபெற்ற அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்பான கூட்டத்தின் போதே இத்தகவலை அவர் வெளியிட்டார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழையமுறையில் விகிதாசார அடிப்படையில் நடத்துவதற்கு ஜனாதிபதியும் உடன்பட்டிருக்கின்றார்.

இதற்கமைய விரைவில் பாராளுமன்றம் கூடும் போது திருத்தத்தைக் கொண்டுவரவிருக்கின்றோம். புதிய முறையில் நடத்துவதற்கு எல்லை நிர்ணய அறிக்கை பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பழைய முறையிலாவது தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் இதனை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

இதற்கமைய அரசாங்கத்தின் நான்கரையாண்டுகால நிறைவுடன் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி நாட்டம் கொண்டிருக்கின்றார் எனவும் முதலில் பாராளுமன்றத்தேர்தலை நடத்திவிட்டு ஜூன் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகூடி ஜனாதிபதியின் சிம்மாசன உரையைத் தொடர்ந்து மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படலாமெனத் தெரியவருகின்றது.

இதற்கிடையில் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியளவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.   இதன் பிரகாரம் 2020ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் அல்லது இறுதி வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அறியவருகின்றது.

பொதுத்தேர்தலுக்குப்பினர் மேமாதம் பிற்பகுதியில் மாகாண சபைகளின் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாமெனவும். இதன்படி ஜூன் இறுதிவாரத்தில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தல் இடம்பெறலாமெனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

எம்.ஏ.எம். நிலாம்

Comments