கிளிநொச்சி யுவதி றோகிதாவின் சாதனை; குருதியைப் பெற்றுக்கொள்ளும் தானியங்கி ரோபோ | தினகரன் வாரமஞ்சரி

கிளிநொச்சி யுவதி றோகிதாவின் சாதனை; குருதியைப் பெற்றுக்கொள்ளும் தானியங்கி ரோபோ

தானியங்கி ரோபோ கண்டுபிடித்த றோகிதா

இன்றைய நவீன உலகில் தமிழ் மக்களின்கலை, கலாசார, வாழ்வியல் அம்சங்கள் தடம்மாறி தடம் புரண்டு செல்கின்றன. வெளிநாட்டுப் பணமும், ஆடம்பர வாழ்க்கையும் இளைஞர், யுவதிகளின் வாழ்க்கையை சிதைத்தும் வருகின்றன. குறிப்பாக வடக்கில் வாள்வெட்டுக் கலாசாரங்களும், மது போதைவஸ்துக்கு அடிமையானவர்களும், கண்டதும் காதல் என்று திரிபவர்களுமாக பல இளம் சமூகம் தமது வாழ்க்கையை சீரழித்து செல்கின்றது. மறுபுறம் போரின் வடுக்களைச் சுமந்தவர்களாக பலர் இன்று அவலத்திற்குள்ளாகியுள்ளனர். யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களாகவும், தாய், தந்தையர்களை இழந்தவர்களாகவும், உடன் பிறப்புக்களை இழந்தவர்களாகவும் இன்று மீளவும் எழ முடியாது நிர்க்கதியாக நிற்கின்றனர். இத்தகைய நிலைமைகள் தமிழினத்தின் எதிர்காலத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.​

சவால்களுக்கு மத்தியில் போரில் இருந்து மீண்டு, ஒரு பீனிக்ஸ் பறவையாக எழுச்சி பெற்றுள்ளார் 17 வயது மாணவி றோகிதா புஸ்பதேவன். முழு இலங்கையினதும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள றோகிதா, இளம் சமூகத்தின் மீது நம்பிக்கையையும் கட்டியெழுப்பியுள்ளார். அதற்கு கராணம் றோகிதாவின் தன்னம்பிக்கையும், முயற்சியுமே. அதன் வெளிப்பாடே அவர் கண்டு பிடித்த 'குருதியைப் பெற்றுக் கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரம்'.

2002 ஆம் ஆண்டு யூலை மாதம் 18 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் றோகிதா. அன்பான அப்பா, அரவணைக்கும் அம்மா, பாசத்திற்கு தங்கை என நான்கு பேரை கொண்ட அழகிய குடும்பம் அது. காலங்கள் உருண்டோடின. யுத்த மேகம் ஸ்கந்தபுரத்தையும் சூழ்ந்து கொள்ள அங்கிருந்து மெல்ல மெல்ல இடம்பெயர்ந்தது றோகிதாவின் குடும்பமும். இதன்போது அவர்களது வாழ்க்கையிலும் விதி விளையாடியது. சந்தோசமாக இருந்த அந்த அழகிய சிறிய குடும்பத்தை போர் சிதைத்தது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தக் காலப்பகுதியில் தனது தந்தையை இழந்து, தாய் மற்றும் சகோதரியுடன் வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து வந்த றோகிதா குடும்பம் நலன்புரி நிலையத்தில் சிறிது காலம், அதன் பின் மீள்குடியேற்றம் என வந்த போது வவுனியாவிலேயே வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினர்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பு மற்றும் வழிகாட்டலில் றோகிதாவும் சகோதரியும் வளர்ந்து வந்தனர். தனது ஆரம்ப கல்வியை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கற்றார். போரின் கொடுமை, வறுமை என்பவற்றை தாங்கியவாறு கல்வியைத் தொடர்ந்த றோகிதா புதிதாக எதையாவது கண்டு பிடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்விப் பொது சாதாரண தரம் தொடக்கம் சிந்தித்து செயற்பட்டு வந்துள்ளார். கல்விப் பொதுச் சாதரண தரப் பரீட்சையில் 4ஏ, 3பீ, சீ, எஸ் பெறுபேற்றைப் பெற்றார். தொழில்நுட்ப துறையில் உயர்கல்வியைத் தொடர விரும்பி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அனுமதி பெற்று இன்று வரை அந்த கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கற்று வருகின்றார்.

இதன்போதே நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரையின் அளவையும், குருதியின் வகையையும் பரிசோதிப்பதற்கு தேவையான குருதியைப் பெற்றுக் கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரத்தை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார். பாடசாலையில் தொழில்நுட்ப பிரிவுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக் கொண்டும், பாவனையற்ற அச்சுப் பொருட்களைக் கொண்டும் இதனை வடிவமைத்துள்ளார். இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட போட்டி ஒன்றில் இதனை செய்யலாம் என முடிவெடுத்து இதனை செய்து முடித்துள்ளதாக தெரிவிக்கும் றோகிதா, இதனை மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்க வைத்ததன் ஊடாக மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளதுடன், தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.

குறித்த கண்டு பிடிப்பை செய்வதற்கு சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மட்டுமன்றி றோகிதாவின் தாயும் பக்கபலமாக இருந்துள்ளார்கள். அத்துடன் ரோபோட்டிக் கற்பித்த தனியார் நிறுவன ஆசிரியரும் உதவியுள்ளார்.

நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரையின் அளவையும், குருதியின் வகையையும் பரிசோதிப்பதற்கு தேவையான குருதியைப் பெற்றுக் கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரமே எனது இயந்திரம். வைத்தியர்கள், தாதியர்களின் வேலைப்பளுவைக் குறைத்து எதிர்கால சந்ததியின் நன்மை கருதி நேரத்தை மீதப்படுத்தும் முகமாக இந்த தன்னியக்க இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளேன். இன்னும் இதனை வளப்படுத்த எதிர்பார்த்துள்ளேன். நான் உயர்தரத்தை தொடர்ந்தும் கற்றுக் கொண்டு இருப்பதனாலும், நிதிப்பற்றாக்குறை காணப்படுவதனாலும் இதனை தொடர்வது கடினமாகவுள்ளது. இன்னும் பல கண்டுபிடிப்புக்களை கண்டு பிடித்து சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது விரும்பம். இலைமறை காயாகவுள்ள என்னைப் போன்ற பல மாணவர்களும் தாமாக முன்வந்து இவ்வாறு கண்டு பிடித்து இலங்கையின் கண்டு பிடிப்பாளர்களாக வரவேண்டும் என்கின்றார் கண்டு பிடிப்பாளரான றோகிதா புஸ்பதேவன்.'

இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி குறித்த மாணவியை கொழும்பில் சந்தித்த கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், மாணவியின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு றோகிதாவின் தாய்க்கு அரச வேலைவாய்ப்பு ஒன்றினை பெற்றுத் தருவதாகவும், அதன் மூலம் றோகிதா மற்றும் றோகிதாவின் சகோதரி ஆகியோரின் எதிர்காலத்தை வளமாக்குமாறும் வாக்குறுதியளித்துள்ளார். அமைச்சரின் வாக்குறுதி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவேற்கத்தக்கதும் ஆகும். ஆனால் அது வெறும் வாக்குறுதியுடன் நின்றுவிடாது அதனை அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்பதே பலரது அவாவாகவும் உள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தாய் தனது இரு பிள்ளைகளையும் தந்தை இல்லாத குறையைக் காட்டாது, தனது கடின உழைப்பால் பிள்ளைகளை இந்த நிலைக்கு கொண்டு வந்தார். தாயின் துன்பத்தை புரிந்தவராக றோகிதாவும் சாதித்துள்ளார்.

குடும்ப இழப்பு, வறுமை என துவண்டு விடாது தன்னம்பிக்கையுடன் சாதித்துள்ளார் இந்த மாணவி. இளம் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் மாறியிருக்கும் றோகிதா மென் மேலும் பல கண்டு பிடிப்புக்களை செய்து தமிழ் சமூகத்திற்கும், இலங்கை நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தர வேண்டும் என சகலரும் வாழ்த்துகின்றனர்.

கி.வசந்தரூபன்  

Comments