பலம்மிக்க முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமையே பெரும் குறைபாடு | தினகரன் வாரமஞ்சரி

பலம்மிக்க முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமையே பெரும் குறைபாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி பிரதான அமைப்பாளர், சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எம்.நிசார்

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் பிழையான இனரீதியான கொள்கையை நிராகரித்துவிட்டு எதிர்கால அரசியல் போக்கை சிந்தித்து தமக்கான அபிவிருத்திகளை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கல்முனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி பிரதான அமைப்பாளருமான சிரேஷ்ட சடடத்தரணியுமான யூ.எம்.நிசார் தெரிவித்தார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்தார்.  

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு வெகுவாக வாக்களிக்கவில்லை. இது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன?  

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு மற்றும் மலையகத்தைத் தவிர ஏனைய மாகாணங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் அமோக வாக்குகளை பெற்றிருந்தார். தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களிடம் இருந்த போலியான அச்சத்தின் காரணமாக அவர்கள் வாக்களிக்காமல் விட்டிருக்கின்றனர்.  

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்க சிங்கள மக்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள். பெரும்பான்மை சிங்கள மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவர்களோடு சேர்ந்து ஒத்துழைத்தால் தான் நாட்டில் நிம்மதியாக வாழமுடியும். பெரும்பான்மை மக்கள் தீர்மானிக்கின்ற ஒருவரை நாங்கள் ஆதரிப்பது சிங்கள மக்களின் வெறுப்பை சிறுபான்மையினர் மீது இல்லாமல் செய்வதற்கு ஒரு வழியாகும். அதன் மூலம் சமூக சௌஜன்யம், ஒற்றுமை போன்றவற்றுடன் அமைதியான சூழலில் வாழமுடியும்.  

ஏனென்றால் வாழ்கை என்பது எந்நேரமும் அச்சப்பட்டுக் கொண்டு கவலையுடன் வாழ்வதல்ல. இந்த நாட்டில் சிங்களவர் ஒருவர் தான் ஜனாதிபதியாக வரமுடியும். சிறுபான்மையினர் ஜனாதிபதியாக வரமுடியாது. அந்த அடிப்படையிலே பெரும்பான்மை மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற விடயம் தெரிந்திருந்தும் ஒரு சில அரசியல்வாதிகள் ஏதோ ஒரு காரணத்துக்காக அவருக்கு வாக்களிக்க விரும்பாது, மக்களுக்கு பிழையாக வழிகாட்டி சஜித்துக்கு வாக்களித்தமையினால் இன்று தனிமைப்பட்டு போயிருக்கிறார்கள்.  

கேள்வி: கடந்த ஆட்சிக் காலத்தை விட இப்போது முஸ்லிம் அரசியலில் ஒரு பின்னடைவு காணப்படுகின்றது. இது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன?  

பதில்: கடந்த ஆட்சியில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா. ஆகிய கட்சிகள் ஐ.தே.க. உடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டமையால் உருவாக்கப்பட்ட ஆட்சியில் இரண்டு முழு அமைச்சுக்களும் 4அரை அமைச்சுக்களும் கிடைக்கப்பெற்றன.  

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அதிகமாக ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் எம்.பிக்களை உருவாக்கினால் அவர்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கும். கடந்த காலத்தில் முஸ்லிம்கள் பிழையான வழியில் சென்று ஏமாற்றமடைந்ததற்குப் பதிலாக இனிமேலும் ஏமாறாது எமது அரசியலை முன்னெடுத்துச் சென்று பொதுஜன பெரமுன மற்றும் இணைக்கட்சியான சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்போமாயின் நாம் வட, கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளை உருவாக்கமுடியும். அதன் மூலம் அமைச்சரவையிலும் இடம்பிடிக்க முடியும்.  

அதைவிடுத்து முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் இனரீதியான கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு நாளும் அமைச்சுப் பதவிகளை பெறமுடியாது. ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பணியாற்றியதால் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இந்த அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இல்லை. கட்சியில் பலமிக்க முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை. அதனால் தான் அமைச்சரவையில் உள்வாங்கப்படவில்லை. ஆனால் வெறுமனே இனவாத அரசியல் என்று சேறு பூசுவது நகைப்புக்குரிய விடயமாகும்.  

கேள்வி: கல்முனை அபிவிருத்தியில் பல பின்னடைவுகள் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன?  

பதில்: கல்முனை அபிவிருத்தி நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்ற விடயம். கல்முனையில் முக்கியமாக பல அபிவிருத்தித் திட்டங்கள் செய்யப்படாமல் இருக்கின்றது. வீதி மற்றும் உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம், மீன்பிடி, கல்முனை மாநகர சபைக் கட்டிடம் உட்பட பொதுக்கட்டிடங்கள் என பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. கல்முனை மாநகர சபை பிரதேசம் என்று சொல்கிறோம் ஆனால் இங்கு பிரதேச சபைக்குரிய வசதிகளைக் கூட காணவில்லை.  

இதற்கு இங்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவருடைய பலவீனம், அலட்சியம், கவனயீனம் போன்ற விடயங்கள் தான் கல்முனை அபிவிருத்தியில் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது. அவர் சார்ந்த கட்சியை நாங்கள் பிழை கூறமுடியாது. ஏனென்றால் நிந்தவூரில் இதே கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிமினால் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகிப்பது அபிவிருத்திக்கு தடையான ஒரு காரணி என்று சொல்லமுடியாது.  

அதற்குக் காரணம் தனிப்பட்ட ரீதியிலே இப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அரச அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து தன்னுடைய தொகுதிக்குரிய அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.  

ஏனைய அமைச்சர்கள் பாதை அபிவிருத்திகளை கொண்டு வரும்போது அதைத் தடுப்பது அவருக்கு இலகுவான காரியம். அது மக்களுக்கு தீமை விளைவிக்கக் கூடிய காரியமாகும். அபிவிருத்தித் திட்டங்களை இவரால் கொண்டு வர முடியாவிட்டாலும் அதனை ஏனைய அமைச்சர்கள் கொண்டுவரும்போது தொகுதி மக்களின் நலன்கருதி அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அவ்வேலைத்திட்டங்களை செய்து முடித்திருக்க வேண்டும். தானும் செய்வதில்லை, மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை என்ற போக்கில் கடந்த 10வருடங்களை செலவழித்து விட்டார்.  

மக்கள் கட்சி என்ற அடிப்படையில் கட்சி மட்டும் வென்றால் போதும், பாதை அபிவிருத்தியோ வேறு எந்த அபிவிருத்தியோ தேவையில்லை என்று நினைத்து வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைப் பெறுகின்ற ஒரு மார்க்கம். அந்த அரசியல் அதிகாரத்தின் மூலமாகத்தான் எங்களுக்குரிய சேவைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். மக்கள் தமது தேவைகளைப் பெறாது அதற்கு நாட்டம் கொள்ளாது கட்சியை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த விடயத்தில் அறியாமையில் இருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  

எதிர்காலத்தில் மக்கள் இவற்றையெல்லாம் சிந்தித்து புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் பிழையான இனரீதியான கொள்கையை நிராகரித்துவிட்டு எதிர்கால அரசியல் போக்கை சிந்தித்து தமக்கான அபிவிருத்திகளை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

கேள்வி: சப்ரிகம அபிவிருத்தித் திட்டத்தினால் கல்முனைப் பிரதேசத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது?  

பதில்: புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பதவிக்கு வந்து ஒரு மாதத்துக்குள் அவருடைய எண்ணக்கருவில் உருவானதுதான் இந்த சப்ரிகம திட்டம். இந்த திட்டத்தில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விக்கிரமசிங்க என்னை ஒரு மேற்பார்வையாளராக நியமித்திருக்கின்றார். இந்த அபிவிருத்தித் திட்டம் நாடுபூராகவும் கிட்டத்தட்ட 17000கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ரூபா 20இலட்சம் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பக் கட்டத்தை தாண்டிவிட்டது.  

இங்கு மக்கள் தான் குழுவாக சேர்ந்து முன்மொழிவுகளை மேற்கொள்ள வேண்டும். கால்வாய்கள், வடிகான்கள், பாதைகள், சுகாதார நிலையங்கள், யானை வேலிகள், நெற்களஞ்சிய சாலைகள் என பல அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிந்து செயற்படுத்த முடியும். ஆரம்பத்தில் ரூபா 20இலட்சத்துக்கு மேற்கொள்ள முடியும். பின்னர் அது ரூபா 50இலட்சத்துக்கு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

இந்த ஜனவரி மாதத்துக்குள் கிராம சேவகர் பிரிவுகளில் திட்டத்தை அமுல்படுத்தியாக வேண்டும். அதற்காக கல்முனைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் கூட்டத்தை நடத்தி அவர்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். துரித வேகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை செய்து முடிக்குமளவுக்கு நாங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.  

நேர்காணல்: ஏ. மொஹமட் பாயிஸ்

Comments