இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாட்டுக்கு சுமையாக அமையாது! | தினகரன் வாரமஞ்சரி

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாட்டுக்கு சுமையாக அமையாது!

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையிலிருந்து மீள்வதற்குப் பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் யாவும் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் நேர்மையுடன் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எமது நிறுவனத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

கேள்வி: நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் 37இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: அரசியலமைப்பின்படி மக்கள் வழங்கும் ஆணையே உயர்வானது. மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த பின்னர், 2020முதல் 2022வரையான காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19தொற்று காரணமாக அவர்களால் எதனையும் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, மக்களுக்கு சேவையாற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இராஜாங்க அமைச்சர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை மாத்திரமே பெறுவார்கள். அவர்கள் வேறு எந்த சலுகைகளையும் அனுபவிக்க மாட்டார்கள். எனவே இந்த இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் நாட்டுக்கு சுமையாக அமையாது.

பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்து, நாடு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும்போது, அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் சில பொறுப்புகளை ஏற்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசியலமைப்பின் 148,149மற்றும் 150ஆவது சரத்துக்களின்படி, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளால் பொதுநிதி தொடர்பான பொறுப்புகள் தோல்வியடைந்துள்ளன. அந்தத் தோல்வியுற்ற செயலுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும்,ஏனெனில் நாடு அவர்களை அறியாமல் இயல்புநிலைக்கு வந்துவிட்டது. இது நூறு சதவீதம் சட்டவிரோதமானது. IMF கோரியபடி, அமெரிக்க மத்திய வங்கியின் கட்டமைப்பில் உள்ள அதே விதிமுறைகள் இலங்கைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டால் அது முக்கியமானது.

அரசியலமைப்பின் 27, 28மற்றும் 29வது பிரிவின்படி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும். நிச்சயமாக இந்தக் கொள்கைகளை செயல்படுத்த ஒரு குறிப்பிட்ட குழு தேவைப்படுகிறது. திட்டமிட்டு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் முன்வந்துள்ளனர். இந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபட முயற்சிக்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் இணைந்து நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கேள்வி: பல சுற்றுப் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டபோதும், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான பொதுஇணக்கப்பாடு எட்டப்படவில்லை. இந்த முயற்சியில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே உள்ள உண்மைத்தன்மையின்மையே முக்கிய காரணமா?

பதில்: புதிய அரசியல் கூட்டணியை அமைப்பவர்களை முதலில் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்ட போது, அது தெரியாமல் சில குழுக்கள் பாராளுமன்றத்தில் செயல்பட்டன. நாளை முதல் புதிய அரசியல் இயக்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என அவர்கள் கூறுவார்களாயின், மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் போக்க அந்தப் பாதையில் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தற்போது, நாங்கள் அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளுடன் எந்த மோதலையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இன்று பல்வேறு கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். உண்மையில் இது ஜனநாயகத்தில் மிகவும் கடினமான பணி. அரசியலில் உள்ள பொதுவான அம்சம், அதிகாரத்தைப் பயன்படுத்தி நாம் விரும்பியதைச் செயற்படுத்துவதுதான். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக ரீதியில் மிகவும் கடினமான பணியை ஆற்றி வருகின்றார். அதாவது தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் முன்னேற வேண்டும்.

கேள்வி: பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்காமல் தமது ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த தேசியப் பணியை வேண்டுமென்றே தவிர்க்கிறது என்றாலும், அக்கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இந்தப் பணியைத் தவிர்ப்பது பொருத்தமானது என்று கருதினால், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்துடன் கைகோர்ப்பார்கள். இந்தத் தேசியப் பணிக்கு தங்கள் ஆதரவை வழங்குவதற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சில பாராளுமன்றக் குழுக்களுக்கான தலைவர் பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு அனைவரின் ஒப்புதலையும் பெற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த தேசியப் பணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமன்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கைகோர்த்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எமது கட்சியில் இருந்து விலகிய பிரதேச சபை உறுப்பினர்களுடன் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதில் பெருந்தொகையான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மீண்டும் கட்சியில் சேரும் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது மாநாடு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 28வருடங்களின் பின்னர் கட்சியின் தலைவரின் கீழ் இவ்வருட மாநாட்டை நடத்தியது. கட்சி மாநாட்டின் முடிவுகள் என்ன?

பதில்: உண்மையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மாநாட்டை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தால், அதைக் கையாள்வது எங்களுக்கு கடினமாக இருந்திருக்கும். எனவே, சுகததாச மைதானத்தில் 5000பேர் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் மக்களின் பங்கேற்பு வாக்காளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த வரம்பை மீறி ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடிந்தது. எமது கட்சியின் மாநாடு செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெற்றது. தற்செயலாக, நாட்டின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் அமைச்சரவை பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நாள் செப்டம்பர் 7ஆகும்.

கேள்வி: பாராளுமன்றக் கண்காணிப்புக் குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் தலைவர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோருகின்றன. தற்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பதவி வகிக்கின்றார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இந்தக் குழுக்களில் பங்கேற்பவர்கள் கட்சி அரசியலில் இருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்த அந்தக் குழுக்களின் அதிகாரிகள் மீது அவர்கள் செல்வாக்கு செலுத்தக் கூடாது. எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் இருக்கின்றன. விமர்சனங்களுக்காக மாத்திரம் இந்தக் குழுக்களைப் பயன்படுத்த முயல்வது ஆபத்தானதாக அமைந்துவிடும். இந்தக் குழுக்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இருவரும் தங்கள் செயல்பாடுகள் குறித்து பொதுவான ஒருமித்த கருத்துக்கு வரவேண்டியது அவசியம்.

கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான சீர்திருத்தங்களை அடையாளம் காட்டியுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், அவர் தனது கொள்கை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அரசியலமைப்பின் 27ஆவது சரத்தின்படிஇ 2048ஆம் ஆண்டுக்குள் இளைய தலைமுறையினருக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது வலுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். இந்த இலக்கை நனவாக்க அனைவரின் உதவியும் தேவை. அரசியல் அடிப்படையில் சில குழுக்கள் பிளவுபட்டால், அந்தப் பணியை எப்படி நிறைவேற்றுவது என்பதை முதலில் சொல்ல வேண்டும். இந்தச் சவாலில் வெற்றிபெற ஒற்றுமையே மிக முக்கியமானது.

கேள்வி: தற்போது மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமையை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: அந்த நிர்வாகத் துறைகளால் தொடங்கப்பட்ட பொறிமுறையின் இயல்பு அதுதான். நீர், மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதை நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டும். அந்த நிறுவனங்களை கட்டமைக்கும் வகையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கும்போது இந்த கட்டணங்களைக் குறைக்க முடியும். நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறிய பிறகு அந்த இலாபம் மக்களுக்கும் போய்ச் சேரும்.

அர்ஜூன்

Comments